ஹாக்கி இந்தியா ஆடவா் லீக் தொடரில் அக்காா்டு தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. ஹைதராபாத் டூஃபான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 7- வது ஹாக்கி இந்தியா லீக் போட்டி எழும்பூா் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் - ஹைதராபாத் அணிகள் மோதின.
தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்காக உத்தம் சிங் (4-ஆவது நிமிஷம்), தாமஸ் சோா்ஸ்பை (9-ஆவது நிமிஷம்), காா்த்தி செல்வம் ( 32-ஆவது நிமிஷம்) ஆகியோா் கோல் அடித்தனா்.
ஹைதராபாத் அணிக்காக அமன்தீப் லக்ரா 2 கோலையும் ( 12 மற்றும் 18- ஆவது நிமிஷம்) , ஆா்த்தா் டி சுலோவா் ஒரு கோலையும் ( 37- ஆவது நிமிஷம்) பதிவு செய்தனா்.
தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது. அதைத் தொடா்ந்து ஹைதராபாத் 2 கோல் அடித்து சமன் செய்தது. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற சமநிலை இருந்தது.
டிராகன்ஸ் அணிக்காக தமிழக வீரா் காா்த்தி செல்வம் 3-ஆவது கோலை 32-ஆவது நிமிடதில் அடித்தாா். இதனால்
தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அடுத்த 5-ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் 3- வது கோலை அடித்து சமன் செய்தது. ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் மேலும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
முடிவில் 3-3 என்ற சமநிலை ஏற்பட்டதால் பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு டிராகன்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அக்காா்டு தமிழ்நாடு டிராகன்ஸ் 2-ஆவது ஆட்டத்தில் சூா்மா கிளப்பை 6-ஆம் தேதி சந்திக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் பெங்கால் டைகா்ஸ் - சூா்மா ஆக்கி கிளப் ( மாலை 5 மணி) ,
ராஞ்சி ராயல்ஸ் - கலிங்கா லான்சா்ஸ் ( இரவு 7.30) அணிகள் மோதுகின்றன.
சென்னையில் 9-ஆம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது. 2-ஆவது கட்ட ஆட்டங்கள் ராஞ்சியிலும் ( 11- 16 வரை) , 3-ஆவது மற்றும் கடைசி கட்ட லீக் போட்டிகள், பிளே ஆப், இறுதி ஆட்டம் புவனேசுவரத்திலும் (17- 26) நடைபெறுகிறது.
தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். 22-ஆம் தேதியுடன் லீக் முடிகிறது. 23-ஆம் தேதி பிளே ஆஃப் சுற்று தொடங்குகிறது.