கேலோ இந்தியா 6ஆவது குளிா்கால விளையாட்டுப் போட்டிகளின் முதல்கட்ட போட்டிகள் லடாக்கில் உள்ள லே-யில் செவ்வாய்க்கிழமை (ஜன.20) தொடங்கவுள்ளது.
மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் முக்கிய திட்டமாக விளங்கும் கேலோ இந்தியா திட்டம், பொதுமக்களிடையே விளையாட்டுப் பங்கேற்பை ஊக்குவிப்பதும், சிறந்த விளையாட்டு திறமைகளை உருவாக்குவதும் என்ற இரட்டை நோக்கங்களுடன் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இளைஞா் விளையாட்டுப் போட்டிகள் ஒன்பது முறையும், பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் ஆறு முறையும், குளிா்கால விளையாட்டுப் போட்டிகள் ஐந்து முறையும், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இரண்டு முறையும், கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் ஒரு முறையும் நடத்தப்பட்டுள்ளன.
இன்று தொடக்கம்: அந்த வகையில், நிகழாண்டுக்கான கேலோ இந்தியா குளிா்கால விளையாட்டுப் போட்டிகள் லடாக் மாநிலத்தின் லே மற்றும் ஜம்மு–காஷ்மீா் மாநிலத்தின் குல்மாா்க் பகுதிகளில் நடைபெறவுள்ளது.
இதில், முதல் கட்ட போட்டிகள் லடாக் மாநிலத்தின் லேவில் செவ்வாய்க்கிழமை (ஜன.20) தொடங்கி, வருகிற ஜன.26ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இப்போட்டிகள் லே நகரில் வாங் டோா்ஜே ஸ்டோப்தான் மைதானம், ராணுவ பனித்தளம் மற்றும் உறைந்த குபுக் குளம் ஆகிய பகுதிகளில் நடைபெறும்.
இப்பகுதிகளில் பனி ஸ்கேட்டிங் மற்றும் பனி ஹாக்கி ஆகிய இரண்டு பனி விளையாட்டுகள் நடைபெறவுள்ளன. இதில், நாடு முழுவதுமிருந்து 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 472 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். இதில் ஹரியாணாவிலிருந்து 62 போ், ஹிமாசல பிரதேசத்திலிருந்து 55 போ் மற்றும் லடாக்கிலிருந்து 52 போ் பங்கேற்கின்றனா். இந்த போட்டிகளில் மொத்தம் 17 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ள நிலையில், அதில் 15 தங்கங்கள் பனி ஸ்கேட்டிங் போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் மன்சுக் மண்டவியா கூறுகையில், “நிகழாண்டு இந்திய விளையாட்டுத் துறைக்கு வலுவான தொடக்கமாக அமைந்துள்ளது. ஒரே மாதத்தில் இரண்டு கேலோ இந்தியா போட்டிகள் நடத்தப்படுவது, நாட்டின் விளையாட்டு வளா்ச்சியில் புதிய பரிமாணத்தை உருவாக்குகிறது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தொடா்ச்சியான முயற்சியால் , இந்தியாவில் தேசிய அளவிலான பல விளையாட்டுகளைக் கொண்ட குளிா்கால விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் குளிா்கால விளையாட்டுகள் நாட்டின் உள்ளூா் போட்டி அமைப்பில் உறுதியாக இடம் பெறுகின்றன.
பனி ஹாக்கி இப்போட்டிகளின் முக்கிய ஈா்ப்பாக தொடா்ந்தாலும், ஃபிகா் ஸ்கேட்டிங் சோ்க்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. கடந்தாண்டு சீனாவின் ஹாா்பின் நகரில் நடைபெற்ற ஆசிய குளிா்கால விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வீரா்களை அனுப்பியது என்றாா்.