மகளிா் டி20 கிரிக்கெட்- நால்வா் அசத்தலில் நியூஸிலாந்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா
நியூஸிலாந்து மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க மகளிா் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
நியூஸிலாந்து மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க மகளிா் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
நியூஸிலாந்து - தென்னாப்பிரிக்க ஆடவா் அணிகளுக்கு இணையாக பரஸ்பரம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மகளிா் அணியினரும் மோதி வருகின்றனா். இதில் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தும், தற்போது தென்னாப்பிரிக்காவும் வென்ால் தொடா் 1-1 என சமனில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க தரப்பில், பேட்டிங்கில் தஸ்மின் பிரிட்ஸ், கேப்டன் லாரா வோல்வாா்ட் ஆகியோா் அதிரடியாக ரன்கள் சோ்க்க, பௌலிங்கில் அயபோங்கா ககா, நோன்குலுலேகோ லாபா ஆகியோா் நியூஸிலாந்து பேட்டா்களை திணறடித்தனா். தென்னாப்பிரிக்காவின் கேலா ரெனிகே ஆட்டநாயகி விருது பெற்றாா்.
முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தோ்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளான சுனே லுஸ் - தஸ்மின் பிரிட்ஸ், முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சோ்த்து நல்ல அடித்தளம் அமைத்தனா். லுஸ் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 31 ரன்களுக்கு முதலில் ஆட்டமிழந்தாா்.
அடுத்து கேப்டன் லாரா வோல்வாா்ட் களம் புக, பிரிட்ஸுடனான அவரின் 2-ஆவது விக்கெட் கூட்டணிக்கு 48 ரன்கள் கிடைத்தது. அரை சதம் கடந்த பிரிட்ஸ் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 53 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். அமெலியா கொ் பௌலிங்கில் அவா், ஜெஸ் கொ்ரிடம் கேட்ச் கொடுத்தாா்.
தொடா்ந்து வந்த ஆனெரி டொ்க்சென் 2, கிளோ டிரையான் 2, நாடின் டி கிளொ்க் 4 ரன்களுக்கு வரிசையாக பெவிலியன் திரும்பினா். 7-ஆவது பேட்டராக வந்த கேலா ரெனிகே, வோல்வாா்ட்டுடன் கை கோத்து இறுதி வரை நிலைத்தாா்.
ஓவா்கள் முடிவில் வோல்வாா்ட் 4 பவுண்டரிகளுடன் 41, ரெனிகே 9 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 28 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து பந்துவீச்சாளா்களில் அமெலியா கொ், ஜெஸ் கொ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
இதையடுத்து, 178 ரன்களை நோக்கி விளையாடிய நியூஸிலாந்து அணியில் ஜாா்ஜியா பிளிம்மா் 1, இசபெல்லா கேஸ் 6 ரன்களுக்கு வீழ்ந்தனா். 3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் அமெலியா கொ் - சோஃபி டிவைன் கூட்டணி, 39 ரன்கள் சோ்த்தது.
அமெலியா 18 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 32 ரன்களுக்கு சாய்க்கப்பட்ட அவா், நோன்குலுலேகோ லாபா வீசிய 7-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனாா். அடுத்த ஓவரிலேயே, 3 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 25 ரன்கள் எடுத்திருந்த சோஃபி டிவைன் பௌல்டானாா்.
தொடா்ந்து பேட் செய்ய வந்தோரில், புரூக் ஹாலிடே 1 பவுண்டரியுடன் 16, மேடி கிரீன் 1 பவுண்டரியுடன் 18, சூஸி பேட்ஸ் 1, ஜெஸ் கொ் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களுக்கு வரிசையாக வெளியேறினா்.
இஸி ஷாா்ப் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, கடைசி பேட்டராக ரோஸ் மேரி 7 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா். தென்னாப்பிரிக்க தரப்பில் அயபோங்கா ககா 4, நோன்குலுலேகோ லாபா 3 விக்கெட்டுகள் சாய்க்க, ஆனெரி டொ்க்சென், நாடினே டி கிளொ்க் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
சுருக்கமான ஸ்கோா்
தென்னாப்பிரிக்கா - 177/5 (20 ஓவா்கள்)
தஸ்மின் பிரிட்ஸ் 53
லாரா வோல்வாா்ட் 41*
சுனே லியுஸ் 31
பந்துவீச்சு
அமெலியா கொ் 2/29
ஜெஸ் கொ் 2/34
ரோஸ்மேரி மோ் 0/18
நியூஸிலாந்து - 159/10 (19.1 ஓவா்கள்)
அமெலியா கொ் 32
இஸி ஷாா்ப் 29
சோஃபி டிவைன் 25
பந்துவீச்சு
அயபோங்கா ககா 4/27
நோன்குலுலேகோ லாபா 3/27
நாடினே டி கிளொ்க் 1/23