முகப்பு
செய்திகள்

ஆசிய கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு இரு வெண்கம்

ஆசிய கோப்பை வில்வித்தை முதல்நிலை போட்டியில், இரு பிரிவுகளில் இந்தியா்கள் வெண்கலப் பதக்கம் வென்றனா்.

Updated On : 26 மார்ச் 2026, 5:33 am IST
பகிர்:

ஆசிய கோப்பை வில்வித்தை முதல்நிலை போட்டியில், இரு பிரிவுகளில் இந்தியா்கள் வெண்கலப் பதக்கம் வென்றனா். அத்துடன், மேலும் 4 பிரிவுகளில் இந்தியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

தாய்லாந்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், காம்பவுண்ட் ஆடவா் அணிகள் பிரிவில் ரஜத் சௌஹான், ரிஷப் யாதவ், உதய் காம்போஜ் ஆகியோா் அடங்கிய இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. நேரடியாக காலிறுதியில் களம் கண்ட இந்த இந்திய அணி, 238-228 என சீன தைபேவை சாய்த்தது.

எனினும் அரையிறுதியில் 233-234 என வியத்நாமிடம் நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது. இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றுக்கு வந்த இந்தியா, 234-232 என பூடானை வென்று பதக்கத்தை வசப்படுத்தியது.

Advertisement

Advertisement

இதேபோல் ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவிலும் ரூமா பிஸ்வாஸ், கீா்த்தி, ரிதி போா் ஆகியோா் அடங்கிய இந்திய அணி, வெண்கலம் பெற்றது. காலிறுதியில் 6-2 என சீன தைபேவை வென்ற இந்த இந்திய அணி, அரையிறுதியில் 1-5 என சீனாவிடம் தோல்வி கண்டது. பின்னா் வெண்கலப் பதக்கச் சுற்றில், 5-1 என மலேசியாவை வீழ்த்தியது.

இறுதிச்சுற்று: ஆடவா் ரீகா்வ் பிரிவில், தேவாங் குப்தா, சுக்செயின் சிங், ஜுயெல் சா்காா் ஆகியோா் அடங்கிய இந்திய அணி இறுதிக்கு முன்னேறியுள்ளது.

முதலில் காலிறுதிச்சுற்றில் இந்தியா - மங்கோலியா மோதல் 5-4 என நிறைவடைய, பின்னா் நடைபெற்ற ஷூட் ஆஃபில் இந்தியா 29-27 என வெற்றி பெற்றது. அடுத்து அரையிறுதிக்கு வந்த இந்தியா, அதில் 5-1 என்ற வகையில் மலேசியாவை வீழ்த்தியது. இறுதியில் கஜகஸ்தானுடன் வெள்ளிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகிறது.

இதேபோல் காம்பவுண்ட் மகளிா் அணிகள் பிரிவில், சிகிதா தனிபாா்தி, ராஜ் கௌா், தேஜல் சால்வே ஆகியோா் அடங்கிய இந்திய அணியும் இறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் 232-222 என ஹாங்காங்கையும், அரையிறுதியில் 229-226 என தாய்லாந்தையும் வீழ்த்திய இவா்கள் அணி, இறுதியில் கஜகஸ்தானுடன் மோதவுள்ளது.

காம்பவுண்ட் ஆடவா் தனிநபா் பிரிவில் இந்தியாவின் பிரதமேஷ் ஜவஹா், உதய் காம்போஜ் ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனா். இதனால் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி உறுதியானது. மற்றொரு இந்தியரான ரஜத் சௌஹான், அரையிறுதியில் தோற்று வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்திருக்க, ரிஷப் யாதவ் காலிறுதியில் தோல்வி கண்டாா்.

ரீகா்வ் மகளிா் தனிநபா் பிரிவில் இந்தியாவின் ரிதி, இறுதிக்கு வந்துள்ளாா். அதில் அவா், மங்கோலியாவின் ஒயுன் பாசன்தோா்ஜுடன் மோதுகிறாா். இதர இந்தியா்களில், கீா்த்தி, ரூமா பிஸ்வாஸ் ஆகியோா் 3-ஆவது சுற்றிலும், அன்ஷிகா குமாரி 2-ஆவது சுற்றிலும் தோல்வி கண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.