உதகை, ஆக. 2: நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி உள்ளிட்ட 4 இடங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சி தனியார் குடிநீர் ஆலைகள் அமைக்கப்படும் திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தியாவில் நில நடுக்க அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் நீலகிரி இரண்டாவது இடமாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் குடிநீர் ஆலைகள் மூலம் நிலத்தடி நீர் தொடர்ந்து உறிஞ்சப்பட்டால் பேராபத்து தவிர்க்க முடியாததாகிவிடும்.
தென்னகத்தின் நீர்த்தொட்டியான நீலகிரி மாவட்டத்திலிருந்துதான் 40 சதவீத நீர்மின் உற்பத்தி நடைபெறுகிறது. நீலகிரியின் நீராதாரங்களை நம்பியே அண்டை மாவட்டங்களும் உள்ளன. இம்மாவட்டத்தின் சுற்றுச்சூழலை இதற்கு மேலும் அழியவிடக் கூடாது என்பதற்காகவே இங்கு செயல்பட்டு வந்த சுரங்கங்கள் மூடப்பட்டதோடு, கல் உடைப்பைத் தடுக்கும் வகையில் கல் குவாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுனாமி ஏற்பட்ட பிறகு கடந்த சில ஆண்டுகளாகவே நீலகிரியின் தட்ப வெப்ப நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மழைப்பொழிவும் குறைந்து வருகிறது. இந்நிலையில் இங்குள்ள மக்களே நீரையும், காற்றையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனரோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.
விற்பனை ரீதியாகக் கொள்ளையடிக்க.. சில தனிப்பட்ட முக்கிய நபர்களின் வணிக நோக்கங்களுக்காக நீலகிரியின் நீர்வளத்தை சுரண்டி விற்பனை ரீதியாக கொள்ளையடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தும்மனட்டி பகுதியிலும், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடசோலை திம்பம் கிராமம் உள்ளிட்ட 3 இடங்களிலும் தனியார் குடிநீர் ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது இம்மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடசோலை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் ஆலையால் அப்பகுதியை சுற்றியுள்ள ஆதிவாசி கிராமங்களுக்கு நீராதாரங்கள் வற்றி பெருமளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, இந்த ஆலையின் எல்லையில் அமைந்துள்ள சிற்றாறு எனப்படும் ஆறே வறண்டுவிடும் அபாயமுள்ளது.
இந்த ஆற்று நீரை நம்பித்தான் தெங்குமரஹடா பகுதியிலுள்ள கல்லம்பாளையம் பகுதி மக்கள் வருடத்தில் ஒரு போகமாவது விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் இக்கிராம மக்களுக்கு குடிநீராகவும் இந்த ஆற்று நீரே பயன்படுகிறது.
இந்த ஆற்றில் நீர்வரத்து தடைபடும்போது இப்பகுதியை சுற்றியுள்ள வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்துவிடும். அத்துடன், உயர்ந்த மலையின் மையப் பகுதியில் அமைக்கப்படும் இந்த குடிநீர் ஆலையால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு இப்பகுதியில் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுற்றுச்சூழல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
அனுமதி அளித்தது யார்?.. இத்தகைய குடிநீர் ஆலைகள் மூலம் தொடர்ந்து நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால் ஏற்கெனவே தட்பவெப்பநிலை மாறியுள்ள நீலகிரியில் மேலும் மாற்றங்கள் வருமென அஞ்சப்படுகிறது. குடிநீர் ஆலைகள் அமைக்கப்படும் இடங்கள் கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் பகுதிகளிலேயே அமைக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பிற்காக கல் குவாரிகளுக்கு நிரந்தர தடை விதித்துள்ள சூழலில், இந்த குடிநீர் ஆலைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது புதிராகவே உள்ளது.
இந்த குடிநீர் ஆலைத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோத்தகிரியிலுள்ள இயற்கையின் இமைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு தொடர்ந்து போராடி வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக ஐலேண்டு அறக்கட்டளை, இசை அறக்கட்டளை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் கழகம், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு, விடியல் அறக்கட்டளை, தமிழ்நாடு ஆதிவாசிகள் 5வது அட்டவணைக்கான பிரச்சார அமைப்பு, நீலகிரி மாவட்ட ஆதிவாசி சமூக முன்னேற்றச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.
எனவே, மலை மாவட்டமான நீலகிரியில் தனியார் குடிநீர் ஆலைகளுக்கான உத்தரவுகளை உடனடியாக ரத்து செய்து, இம்மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
தமிழக அரசும், நீலகிரி மாவட்ட நிர்வாகமும்தான் இதற்குத் தீர்வு காண வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.