முகப்பு
தமிழ்நாடு

சித்த, ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளுக்கு மோகம் அதிகரிப்பு

சென்னை, ஆக. 3: சித்த, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளில் நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர அதிக ஆர்வமாக உள்ளனர்.   பிஎஸ்எம்எஸ். (சித்த மருத்துவம்), பிஏஎம்எஸ் (ஆயுர்வேத மருத்துவம்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 1:29 PM
பகிர்:

சென்னை, ஆக. 3: சித்த, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளில் நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர அதிக ஆர்வமாக உள்ளனர்.

  பிஎஸ்எம்எஸ். (சித்த மருத்துவம்), பிஏஎம்எஸ் (ஆயுர்வேத மருத்துவம்), பியுஎம்எஸ் (யுனானி), பிஎன்ஒய்எஸ் (இயற்கை - யோகா மருத்துவம்), பிஎச்எம்எஸ் (ஹோமியோபதி) ஆகிய படிப்புகளில் சேருவதற்கு இந்த ஆண்டு இதுவரை 1,100 மாணவர்களுக்கு மேல் விண்ணப்பத்தை வாங்கியுள்ளனர்.

  கடந்த ஆண்டு இந்திய மருத்துவ முறை படிப்புகளில் சேர 300 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.

Advertisement

ஆகஸ்ட் 5 கடைசி: மேலே குறிப்பிட்ட சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளுக்கு சென்னை, பாளையங்கோட்டையில் உள்ள அரசு கல்லூரிகளில் கடந்த ஜூன் 13-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன.

  விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமையுடன் (ஆக. 3) முடிவுக்கு வந்தது. விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க புதன்கிழமை (ஆக. 5) கடைசி நாளாகும்.

கவுன்சலிங் எப்போது? எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக மாணவர்கள் இந்திய மருத்துவ முறைப் படிப்புகளில் சேர விரும்புவதால், விண்ணப்பங்களை ஆய்வு செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையடுத்து இந்த மாத இறுதியில் கவுன்சலிங் நடத்த இந்திய மருத்துவ ஆணையர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

சென்னை, பாளையங்கோட்டையில்...: சென்னை அரும்பாக்கத்தில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி (50 பிஎஸ்எம்எஸ் இடங்கள்), திருநெல்வேலி பாளையங்கோட்டையில் 45 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு சித்த மருத்துவக் கல்லூரி (100 பிஎஸ்எம்எஸ் இடங்கள்), சென்னை அரும்பாக்கத்தில் யுனானி அரசு மருத்துவக் கல்லூரி (26 பியுஎம்எஸ் இடங்கள்) மற்றும் அரசு இயற்கை மருத்துவக் கல்லூரி (20 பிஎன்ஒய்எஸ் இடங்கள்), மதுரை திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி கல்லூரி (50 பிஎச்எம்எஸ் இடங்கள்) என ஐந்து அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

  இது தவிர மேலே குறிப்பிட்ட படிப்புகளை நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு 750-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும். இதற்கும் சேர்த்து இந்த மாத இறுதியில் கவுன்சலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

அரசு கல்லூரிகளில் கட்டணம் எவ்வளவு? சித்த மருத்துவம் (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேத மருத்துவம் (பிஏஎம்எஸ்) உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுக்கும் அரசு கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ.5,000. இந்தக் கட்டணத்தை கவுன்சலிங்கின்போதே மாணவர்கள் செலுத்த வேண்டும்.

சுயநிதி கல்லூரிகளில்...: சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பொருத்தவரை ஹோமியோபதி பட்டப் படிப்புக்கு (பிஎச்எம்எஸ்) மட்டும் ஆண்டுக் கட்டணத்தை ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.33 ஆயிரமாக நீதிபதி குழு அண்மையில் உயர்த்தியுள்ளது.

  மற்ற படிப்புகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே தொடருகிறது. அதாவது, சித்த மருத்துவம் (பிஎஸ்எம்எஸ்) மற்றும் ஆயுர்வேத மருத்துவ (பிஏஎம்எஸ்) படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.30,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.