சென்னை, டிச.22: அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளை (முன் பருவ) தொடங்க தமிழகப் பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.
சமச்சீர் கல்வியை ஏற்படுத்த நியமிக்கப்பட்ட முத்துக்குமரன் குழுவும் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளை தமிழக அரசே தொடங்கி நடத்திட வேண்டும் என்று பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் (முன் பருவ வகுப்புகள்) நடத்தப்பட்டு வருகின்றன. இதில் குழந்தைகளை சேர்ப்பதற்கு, டிசம்பர் மாத தொடக்கத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, ஜனவரியில் மாணவர் சேர்க்கை முடிந்து விடுவது வழக்கம். குழந்தைகளை சேர்ப்பதற்கு தனியார் பள்ளிகள் அதிக கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருவதால், நடுத்தர வகுப்பினர் மிகவும் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் அரசின் அறிவிப்பால், இந்த ஆண்டில் மே மாத மத்தியில்தான் மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டது.
இதன் எதிரொலியாக எல்கேஜி, யுகேஜி வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை மெட்ரிக் பள்ளிகள் நிறுத்தி வைத்துள்ளன. இருந்தபோதிலும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு தங்களது குழந்தைகளை முன்னணி தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்ப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.
இந்நிலையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அரசே நடத்திடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில், தமிழகத்தில் உள்ள சுமார் 53,000 அங்கன்வாடி மையங்களின் செயல்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
அதேசமயத்தில், முத்துக்குமரன் குழு பரிந்துரைத்தபடி எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்குவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநிலத்தில் தற்போதுள்ள அங்கன்வாடி மையங்களை யு.கே.ஜி. மற்றும் எல்.கே.ஜி. வகுப்புகளாக மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதுபற்றி பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ""எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளை அரசே நடத்திட பரிசீலித்து வருகிறது. மேலும், தேசிய கலைத்திட்ட வடிவமைப்பில்}2005 (என்.சி.எப்.) முன்பருவக் கல்விக்கான வரைவுப் பாடத்திட்டம் உள்ளது. இதைப் பின்பற்றி பாடத்திட்டம் தயாரிக்கலாம் என்று அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளோம். இவ்விஷயத்தில் அரசுதான் இறுதி முடிவெடுக்கும்'' என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.