சாலைகளில் சாக்கடை; காணுமிடமெல்லாம் குப்பை சிக்கித் தவிக்கும் கோயில் நகரம்
சிதம்பரம், ஜூலை 4: சாலைகளில் சாக்கடைநீர், கழிவுநீர் கலந்த குடிநீர், குண்டும் குழியுமான சாலைகள், அகற்றப்படாத குப்பைகள் ஆகிய சீர்கேடுகளால் கோயில் நகரமான "சிதம்பரம்' சிக்கித் தவித்து வருகி
சிதம்பரம், ஜூலை 4: சாலைகளில் சாக்கடைநீர், கழிவுநீர் கலந்த குடிநீர், குண்டும் குழியுமான சாலைகள், அகற்றப்படாத குப்பைகள் ஆகிய சீர்கேடுகளால் கோயில் நகரமான "சிதம்பரம்' சிக்கித் தவித்து வருகிறது.
தமிழகத்தில் பழம்பெரும் நகராட்சிகளில் ஒன்று சிதம்பரம். 1998-ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்பட்டது. 4.80 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள இந்நகரம் 33 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நகரின் மொத்த மக்கள்தொகை சுமார் 1 லட்சம்.
1911-ம் ஆண்டில் அன்றைய நகரமன்றத் தலைவர் ராமசாமி செட்டியாரால் சிதம்பரம் அருகே வக்காரமாரி கிராமத்தில் இரு குளங்கள் வெட்டப்பட்டு குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
நகரில் 7 இடங்களில் ஆழ்கிணறுகள் போடப்பட்டும், கொள்ளிடம் ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது.
ஆனால் தற்போது இத்திட்டங்கள் அனைத்தும் சரியான பராமரிப்பின்றி சீரழிந்துள்ளன. நகரில் காலை ஒருவேளை மட்டுமே 20 நிமிடங்கள் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
"எனது வார்டில் உள்ள மின்நகரில் குடிநீர் சப்ளை செய்யப்படுவதில்லை. அதிகாரிகள் நகரமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை மதிப்பதும் கிடையாது' என காங்கிரஸ் நகரமன்ற உறுப்பினர் முகமது ஜியாவுதீன் கூறுகிறார்.
1952-ல் சிதம்பரம் நகரில் புதைசாக்கடை திட்டம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டம் தற்போது சீரழிந்து நகரில் ஆங்காங்கே சாலையில் சாக்கடைநீர் உடைப்பெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் சாக்கடைநீர் குடிநீருடன் கலந்து செல்வதால் பொதுமக்களுக்கு விஷக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு வருகின்றன.
ரூ.42 கோடி செலவில் புதிய பாதாள சாக்கடை விரிவாக்க திட்டத்திற்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதியளித்தார்.
இத் திட்டம் டெண்டர் விடப்பட்டு பல மாதங்களுக்கு மேலாகியும் பணிகள் தொடங்கப்படவில்லை. நகரில் 33 வார்டுகளில் மொத்தம் 180-க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. இதில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளன. மற்ற சாலைகள் அனைத்தும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.
""தேசிய நெடுஞ்சாலைத்துறை பராமரிக்கும் 4 வீதிகளை தவிர நகரில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள சாலைகளும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது'' என மூப்பனார் பேரவைத் தலைவர் ஆர்.மக்கீன் குற்றம் சாட்டியுள்ளார். நகராட்சியில் மொத்தம் 143 துப்புரவுத் தொழிலாளர்கள் இருந்தனர். ஆனால் தற்போது 93 பேர்தான் பணியில் உள்ளனர். காலியான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
மேலும் 6 குப்பை அள்ளும் லாரிகள் உள்ளன. இதில் தற்போது 3 லாரிகள்தான் இயங்குகின்றன. மற்ற லாரிகள் பழுதடைந்து பணிமனைக்கு சென்றுள்ளன. 33 வார்டுகளுக்கும் குப்பைகளை அகற்றி எடுத்துச் செல்ல குப்பை வண்டிகள் வாங்கப்பட்டன. தற்போது அவை பழுதடைந்து 15 வண்டிகள் தான் உள்ளன. குப்பை அள்ளுவதற்கு போதிய வாகனங்கள் இல்லாததால், போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததாலும் நகரே குப்பையாக காட்சியளிக்கிறது என பாமக நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ் தெரிவித்தார்.
நகராட்சி 26-வது வார்டு உறுப்பினர் ச.அமுதவள்ளி கூறுகையில்,
""வடிகால்களை தூர்வாரக்கோரி பல முறை நகராட்சி கூட்டத்தில் புகார் தெரிவித்தும் தூர்வாரப்படவில்லை. எந்த பணியும் நடைபெறாததால் வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல முடியாததால் பதவியை ராஜிநாமா செய்ய உள்ளேன்'' என்கிறார்.
பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீர், சுகாதாரம், சாலைவசதி ஆகியவற்றை துரிதகதியில் செய்துதர வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. நகராட்சி செய்யுமா?