முகப்பு
தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் இட ஒதுக்கீடு சரியா?: முற்பட்ட வகுப்பினருக்கு பாதிப்பு

 சென்னை, ஜூலை 8: சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப (கல்லூரிகளின் அடிப்படையில்) எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்கில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டது சரிதானா என

Updated On : 26 டிசம்பர், 2023 at 6:31 AM
பகிர்:

 சென்னை, ஜூலை 8: சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப (கல்லூரிகளின் அடிப்படையில்) எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்கில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டது சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 இத்தகைய அணுகுமுறை காரணமாக அனைத்துப் பிரிவு (ஓ.சி.) இனத்தில் மட்டுமே எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்புள்ள முற்பட்ட வகுப்பினர் பாதிக்கப்பட்டுள்ளது இட ஒதுக்கீடு அட்டவணைகள் மூலம் உறுதியாகியுள்ளது.

 இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர "கட் - ஆஃப்' மதிப்பெண் 200-ல் தொடங்கி, ஒவ்வொரு 0.25 மதிப்பெண்ணுக்கும் இடையே மாணவர்களிடையே கடும் போட்டி உள்ளது.

 தமிழகத்தில் சென்னையில் உள்ள 3 மருத்துவக் கல்லூரிகள் உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க ஜூலை 6-ம் தேதி (திங்கள்கிழமை) கவுன்சலிங் தொடங்கியது.

 முதல் நாளான ஜூலை 6-ம் தேதி, ஊனமுற்றோர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் மற்றும் ரேங்க் பட்டியலில் முதல் 10 சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கவுன்சலிங் நடத்தப்பட்டு கல்லூரியில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.

 ஊனமுற்றோர், முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள், விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கு என தனியாக ஒதுக்கீடு உள்ளது. இந்த சிறப்புப் பிரிவில் அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்களில், 9 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

 இதையடுத்து எம்.பி.பி.எஸ். இட அட்டவணையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மொத்த இடங்கள் 370 இடங்களில், சிறப்புப் பிரிவு மாணவர்களின் 9 இடங்கள் கழிக்கப்பட்டு மொத்த காலி இடங்கள் "361' என கடந்த ஜூலை 6-ம் தேதி மாலை வெளியிடப்பட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டது. இது சரியானது.

 தவறு எங்கே ஆரம்பித்தது? தொடர்ந்து ஜூலை 7-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரண்டாம் நாள் கவுன்சலிங் ஆரம்பித்தபோது, சென்னை மருத்துவக் கல்லூரி - அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்றிலும் சேர அனைத்துப் பிரிவில் (ஓ.சி.) இடம்பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கடுமையாகப் போட்டி போட்டனர்.

 மேலே குறிப்பிட்ட சென்னையில் உள்ள மூன்று கல்லூரிகளிலும் மொத்த அனைத்துப் பிரிவு (ஓ.சி.) இடங்கள் 109; பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டு இடங்கள் 94.

 ஆனால், இரண்டாம் நாளான ஜூலை 7-ம் தேதி கவுன்சலிங்குக்கு அழைக்கப்பட்ட 300 பேரில், 192 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் சென்னை கல்லூரிகளில் அனைத்துப் பிரிவினருக்கு (ஓ.சி.) உரிய 109 இடங்களில் சேர கடுமையாக போட்டி போட்டனர்.

 இவ்வாறு அனைத்துப் பிரிவினருக்கு உரிய இடங்களில் விரும்பிய மருத்துவக் கல்லூரி கிடைக்காத மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பியபடி 3 சென்னை கல்லூரிகளின் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிக்க அனுமதிக் கடிதத்தை தேர்வுக் குழு அளித்தது. இதில் தவறு ஏதும் இல்லை.

 ஆனால், சென்னை மருத்துவக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய 37 இடங்கள், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய 34 இடங்கள், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய 23 இடங்களில் 11 இடங்கள் ஆகியவை நிரம்பிய பிறகு, குறிப்பிடப்பட்ட மொத்த இடங்களில்தான் பிரச்னை ஆரம்பித்தது.

 அதாவது, மேலே குறிப்பிட்ட கல்லூரிகளில் அவர்களது வகுப்புக்கு உரிய இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடத்தை ஒதுக்கிய பிறகும், ஜூலை 7-ம் தேதி மாலையும் அட்டவணையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மொத்த காலி இடங்களின் எண்ணிக்கை "361' என்றே குறிப்பிடப்பட்டது.

 அனைத்துப் பிரிவு இடங்களிலிருந்து...: சென்னை கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு உரிய இடங்களில், அந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட இடத்தைச் சமன் செய்ய மாணவர்கள் அதிகம் விரும்பாத தேனி, வேலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற கல்லூரிகளிலிருந்து அனைத்துப் பிரிவு (ஓ.சி.) இடங்கள் எடுக்கப்பட்டு, இந்தக் கல்லூரிகளின் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்கப்பட்டன.

 யாருக்குப் பாதிப்பு? இவ்வாறு செய்ததன் மூலம் அனைத்துப் பிரிவில் (ஓ.சி.) இடம்பெற வாய்ப்பு உள்ள முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஏதாவது ஒரு கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

 சரிதான்: உயர் அதிகாரி

 சென்னை, ஜூலை 8: எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்கில் பின்பற்றப்பட்ட இட ஒதுக்கீடு முறை சரிதான் என்றார் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி.

 ""எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் கட் - ஆஃப் மதிப்பெண் அதிகம் எடுத்த மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பும் கல்லூரிகளை அளிப்பதற்காகவே இத்தகைய இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது.

 அனைத்துப் பிரிவில் (ஓ.சி.) அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள்தான் அவர்களுக்கு உரிய பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

 எனவே அவர்களின் அனைத்துப் பிரிவு இடங்களை எடுத்து, பிற மருத்துவக் கல்லூரிகளின் பிற்படுத்தப்பட்ட வகுப்பு இடங்களை அதிகரிப்பதில் தவறில்லை'' என்றார் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி.

 "ஒதுக்கீடு சரி அல்ல'

 சென்னை, ஜூலை 8: சிறந்த கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களின் விருப்பத்துக்காக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு பின்பற்றிய இட ஒதுக்கீடு நடைமுறை சரி அல்ல என்று சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் கூறினார்.

 ""அனைத்துப் பிரிவில் (ஓ.சி.) இடம்பெறும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு, அவர்களுக்கு உரிய வகுப்பு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். இடம் அளிப்பதில் தவறில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் கவுன்சலிங் முடிந்தவுடன், ஒதுக்கப்பட்ட இடங்களை அந்தந்த வகுப்புக்கு உரிய மொத்த காலியிடங்களில் கழித்து அட்டவணையில் காண்பிப்பது அவசியம்.

 அவ்வாறு செய்யாதது தவறு. இதனால் அனைத்துப் பிரிவில் இடம்பெற்ற முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்'' என்றார் வழக்கறிஞர் விஜயன்.

முழு கட்டுரையைப் படிக்க →