தமிழ்நாடு

அதிமுகவிலிருந்து அனிதா ராதாகிருஷ்ணன், எஸ்.வி. சேகர் நீக்கம்

கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும்...

தினமணி

சென்னை, ஜூலை 29: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான எஸ்.வி. சேகர், முன்னாள் அமைச்சர் அனிதா

ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

  மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

  செவ்வாய்க்கிழமை அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட 2 மாவட்டச் செயலாளர்களைப் பதவியிலிருந்து நீக்கினார். புதன்கிழமை அனிதா ராதாகிருஷ்ணன், எஸ்.வி. சேகர் என 2 எம்.எல்.ஏ.க்களைக் கட்சியில் இருந்தே நீக்கியுள்ளார் ஜெயலலிதா.

  ""கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையிலும், கட்சி கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்து கொண்டதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என ஜெயலலிதா கூறியுள்ளார்.

  அனிதா ராதாகிருஷ்ணன்: திருச்செந்தூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருக்கு மதுரையில் வணிக நிறுவனங்கள் இருப்பதால் திமுகவில் சேரக் கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டது.

  இந் நிலையில் கடந்த வாரம் கொடநாட்டில் நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்துக்கு இவர் அழைக்கப்படவில்லை.

  அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அங்கு நடந்த கூட்டத்துக்கு இவர் உள்பட சில மாவட்டச் செயலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மாலையில் அவருடைய மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

  எஸ்.வி. சேகர்:  எஸ்.வி. சேகர் மயிலாப்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

  அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் 13.2.2008-ல் நடைபெற்றது. அக் கூட்டத்துக்கு எஸ்.வி. சேகருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

  பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில் தலைமைச் செயலகத்துக்கு எஸ்.வி. சேகர் சென்றார். அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகத் தகவல்கள் பரவின.

  அப்போது அதிமுக நிர்வாகிகள் சிலர் தலைமைச் செயலகம் சென்று எஸ்.வி. சேகரை வானகரம் அழைத்துச் சென்றனர்.

  இடையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி. சேகர், தனது புதிய காருக்குப் பதிவு எண் பெறுவதற்காக தலைமைச் செயலகம் வந்ததாகத் தெரிவித்தார்.

  எனினும் அதற்குப் பிறகும் எஸ்.வி. சேகருக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படவில்லை. இந் நிலையில் 2008-ம் ஆண்டு ஆகஸ்டில் எஸ்.வி. சேகரின் சகோதரர் இல்லத் திருமணத்தில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார்.

  ஜூன் 17-ம் தேதி சட்டப்பேரவையில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை வாழ்த்தி எஸ்.வி. சேகர் பேசியதால், அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும், எஸ்.வி. சேகருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

  தன்னை கொல்லப் போவதாக வி.பி. கலைராஜன் எம்.எல்.ஏ. மிரட்டினார் என பேரவைத் தலைவரிடம் எஸ்.வி. சேகர் புகார் அளித்தார். அதன் பேரில் சேகருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

  பேரவையில் அதிமுகவினர் வெளிநடப்புச் செய்வார்கள் என எதிர்பார்க்கும் சமயங்களில் இவர் மட்டும் வேறு இடத்தில் அமர்ந்து கொள்வது அல்லது பேரவை வளாகத்துக்குள் இருக்கும் சிற்றுண்டியகத்துக்குச் செல்வது என இருந்தார்.

  அதிமுகவினர் மொத்தமாக வெளியேற்றப்பட்ட நாளில் சேகர் மட்டும் உள்ளேயே இருந்தார். அப்போது ""அதிமுக தரப்பில்'' எஸ்.வி. சேகர்தான் பேரவையில் பேசினார்.

  பேரவையில் பேசுவதற்கு அதிமுக சார்பில் தமக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை என்பதால் கேள்வி நேரம் போன்றவற்றில் தமக்கு வாய்ப்பு தர வேண்டும் என பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பனிடம் மனு கொடுத்திருந்தார்.

  செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி சென்ற எஸ்.வி. சேகருக்கு அங்குள்ள திமுகவினர் வரவேற்பு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT