தேர்தல் பணிக்கான தொகை கிடைக்காமல் மத்திய அரசு ஊழியர்கள் அலைக்கழிப்பு
சென்னை, ஜூலை 30: மக்களவைத் தேர்தல் முடிந்து இரண்டரை மாதங்கள் ஆகியும் தேர்தலில் பணியாற்றிய மத்திய அரசு ஊழியர்கள் பலருக்கு, அப் பணிக்கான தொகை இதுவரை வழங்கப்படவில்லை. தேர்தல் பணிகளில் முறைகேடுகளைத் த
தமிழ்நாடுதேர்தல் பணிக்கான தொகை கிடைக்காமல் மத்திய அரசு ஊழியர்கள் அலைக்கழிப்பு
சென்னை, ஜூலை 30: மக்களவைத் தேர்தல் முடிந்து இரண்டரை மாதங்கள் ஆகியும் தேர்தலில் பணியாற்றிய மத்திய அரசு ஊழியர்கள் பலருக்கு, அப் பணிக்கான தொகை இதுவரை வழங்கப்படவில்லை. தேர்தல் பணிகளில் முறைகேடுகளைத் த
சென்னை, ஜூலை 30: மக்களவைத் தேர்தல் முடிந்து இரண்டரை மாதங்கள் ஆகியும் தேர்தலில் பணியாற்றிய மத்திய அரசு ஊழியர்கள் பலருக்கு, அப் பணிக்கான தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
தேர்தல் பணிகளில் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் கடந்த தேர்தலில் மத்திய அரசு ஊழியர்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டனர். குறிப்பாக மண்டல தேர்தல் அதிகாரிகளாக பெரும்பாலும் மத்திய அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
தேர்தல் பணிக்கான பயிற்சி எடுத்துக் கொண்டது; பிற அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தது; வாக்குப் பதிவு நாளில் 15 முதல் 20 வாக்குச் சாவடிகளின் அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைத்து, பொறுப்பேற்று செய்தது என மண்டல தேர்தல் அதிகாரிகள் சுமார் 10 நாட்கள் பணிபுரிந்தனர்.
தேர்தல் முடிந்ததும் மண்டல அதிகாரிகளுக்கு வெறும் ரூ.800 மட்டுமே படியாக அளிக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கும் கீழ் பணிபுரிந்த வாக்குச் சாவடி அதிகாரிகளுக்கு ரூ.1,450 வழங்கப்பட்டது. எனவே பல இடங்களில் தங்களுக்கு வழங்கப்பட்ட தொகையை வாங்க மண்டல அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
படி உயர்வு: இதற்கிடையே மண்டல தேர்தல் அதிகாரிகளுக்கான படியை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் எம். துரைபாண்டியன், மாநில தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் மனு அளித்தார்.
அதனைப் பரிசீலித்த நரேஷ் குப்தா, மண்டல தேர்தல் அதிகாரிகளுக்கான படியை ரூ.800-ல் இருந்து ரூ.1,500 ஆகவும், உதவி மண்டல அதிகாரிகளுக்கான தொகையை ரூ.550-ல் இருந்து ரூ.1,000 ஆகவும் உயர்த்தி வழங்குமாறு 12.6.2009-ல் உத்தரவிட்டார்.
அலைக்கழிப்பு: ஆனால், சென்னையிலுள்ள 3 தொகுதிகளில் பணியாற்றிய மண்டல அதிகாரிகளுக்கு உயர்த்தப்பட்ட அத்தொகையை வழங்காமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலைக்கழிப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து எம்.துரைபாண்டியன் கூறியது:
தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டுமெனில், தேர்தல் பணிகளில் மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் எழுப்பப்படுகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தல் பணியில் ஈடுபட்ட மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு அதிகாரிகளால் அநாகரிகமாக நடத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் நாளில் மாநில அரசு ஊழியர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கிய அதிகாரிகள், மத்திய அரசு ஊழியர்களை கண்டுகொள்ளவில்லை. "மண்டல தேர்தல் அதிகாரி' என்ற முக்கிய பொறுப்பில் பணியாற்றிய மத்திய அரசு ஊழியர்கள் பலர் பசியுடன் தங்கள் பணியை செய்துள்ளனர். அவர்களுக்கு ஜீப் கூட வழங்காமல், மினி லாரிகளில் அனுப்பப்பட்டுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தேர்தல் பணிக்கான தொகையை உயர்த்தி வழங்க தலைமை தேர்தல் அதிகாரி இப்போது உத்தரவிட்டுள்ளார். அத்தொகையை வழங்காமல், இனியும் இழுத்தடிப்பது நல்லதல்ல.
மேலும், வேட்பாளர்கள் தேர்தல் செலவுக் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கூறும் தேர்தல் ஆணையம், ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்த அரசு செலவிட்ட தொகை குறித்தும் தணிக்கை நடத்த வேண்டும். நிதி முறைகேட்டை தடுக்க இது மிகவும் அவசியம் என்றார் துரைபாண்டியன்.
மாநகராட்சி ஆணையர் விளக்கம்: இப்பிரச்னை குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:
மண்டல தேர்தல் அதிகாரிகளுக்கு தொகை வழங்கப்படாதது குறித்து இப்போதுதான் எனது கவனத்துக்கு வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் அத்தொகை அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும் என்றார்.
இதனால் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் ஏற்கெனவே ரூ.800 பெற்றுக் கொண்ட மண்டல அதிகாரிகளுக்கு மீதத் தொகை ரூ.700-ம், அறவே பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு ரூ.1,500-ம் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.