தமிழ்நாடு

அகல் விளக்குகள் தயாரிப்பு குறைந்தது

திருச்சி, நவ. 21:   மூலப்பொருள்களின் விலை உயர்வு, தொடர் மழை, மின் வெட்டு போன்ற காரணங்களால் இந்தாண்டு அகல் விளக்குகளின் தயாரிப்பு குறைந்துள்ளது.   தீபங்களின் திருநாளாம் கார்த்திகை தீபத் திருநாள் டிசம்ப

கு. வைத்திலிங்கம்

திருச்சி, நவ. 21:   மூலப்பொருள்களின் விலை உயர்வு, தொடர் மழை, மின் வெட்டு போன்ற காரணங்களால் இந்தாண்டு அகல் விளக்குகளின் தயாரிப்பு குறைந்துள்ளது.

  தீபங்களின் திருநாளாம் கார்த்திகை தீபத் திருநாள் டிசம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இத் திருநாளுக்குத் தேவையான தீப விளக்குகள் சிறியது முதல் பெரியது வரை அதிகம் தயாரிக்கப்படுவது திருச்சி திருவானைக்கா, கீழ, மேலக் கொண்டையம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில்தான்.

  இப்பகுதிகளில் சுமார் 100 - க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தீப விளக்குகள் தயாரிப்புப் பணியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றன.

  இந்தப் பகுதியிலிருந்து திண்டுக்கல், கரூர், மணப்பாறை, தாராபுரம், திருச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் என பல்வேறு பகுதிகளுக்கு விளக்குகளை விற்பனைக்காக வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

  "மற்ற பகுதிகளைக் காட்டிலும் கொண்டையம்பேட்டை பகுதிகளில் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணி ஐப்பசி மாதத் தொடக்கத்திலேயே தொடங்கி விடும். தீப விளக்குகளை சிலர் கை மூலமாகவும், சிலர் "சைலா' என்ற இயந்திரத்தின் மூலமாகவும் தயாரித்து வருகின்றனர்.

  ஆனால், இந்தாண்டு தொடர் மழை, தொடர் மின்வெட்டு போன்ற காரணங்களால் எதிர்பார்த்த அளவுக்கு அகல் விளக்குகள் தயாரிக்க முடியவில்லை என்று இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.

  தீப விளக்குகள் தயாரிப்பில் முக்கியமான பங்கு வகிப்பது களிமண்தான். சென்ற ஆண்டு ஒரு லோடு களிமண் ரூ. 1500 - க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு களிமண்ணின் விலை மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்து ரூ. 5000 ஆக உள்ளது. இதுபோல, வைக்கோல் மற்றும் மட்டையின் விலையும் சென்ற ஆண்டைக் காட்டிலும் உயர்ந்துள்ளது.

  ஆனால், சென்ற ஆண்டில் எந்த விலைக்கு விற்கப்பட்டதோ அதே விலைக்குத்தான் இந்தாண்டும் தீப விளக்குகள் விற்பனையாகி வருகிறது என்கிறார் இத்தொழிலை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் மேலக் கொண்டையம்பேட்டையைச் சேர்ந்த ராமு (35).

  சென்ற ஆண்டு 1000 எண்ணிக்கைகள் கொண்ட தீப விளக்குகள் சிறிய ரகம் ரூ. 300 முதல் ரூ. 350 வரையிலும், பெரிய விளக்குகள் ரூ. 400 முதல் ரூ. 450 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டும் இதேவிலைதான் நீடிக்கிறது. விலையை சற்றுக் கூட்டினால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும்.

  இதனால் விலையைக் கூட்ட முடியாமல் எந்தவித லாபமும் இல்லாமல் விளக்குகளைத் தயாரித்து வருகிறோம்.

  மேலும், கடந்த 10 நாள்களாக மழை பெய்து வருவதால் தயாரித்த விளக்குகளைக் கூட காய வைத்து, சூடுபடுத்த முடியவில்லை.

  நாங்கள் "சைலா' இயந்திரத்தின் மூலம் விளக்குகள் தயாரிப்பதால் மின்சாரம் அத்தியாவசியமாக இருக்கிறது. ஆனால், வழக்கமாக 2 மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாகக் கூறினாலும் கூடுதலாகவே மின்சாரம் நிறுத்தப்படுவதால் எதிர்பார்க்கும் அளவுக்கு விளக்குகளையும் தயாரிக்க முடியவில்லை.

  ஒவ்வொரு பொருளின் விலையும் கடுமையாக உயருகிறது. ஆனால், நாங்கள் விளக்குகள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருள்களின் விலை உயர்ந்த நிலையிலும், விளக்குகளின் விலை உயரவில்லை. இதனால் எங்களுக்கு எவ்வித பயனும் ஏற்படுவதில்லை.

  அகல் விளக்குகள் தயாரிக்கத் தேவையான "சைலா' இயந்திரம் தமிழகத்தில் கிடைப்பதில்லை. மகாராஷ்டிரம் மாநிலத்திலிருந்து வாங்கி வர வேண்டிய நிலை உள்ளது. இதற்காக அதிகமாக செலவு செய்ய வேண்டியதுள்ளது. எனவே எங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் அகல் விளக்குத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள ராமு.

  தொடர்ந்து வரும் நாள்களில் மழை இல்லாமல் இருந்தால் இன்னும் அதிகமாக விளக்குகளைத் தயாரிக்க முடியும். விற்பனையும் நன்றாக இருக்கும் என்கிறார் இதே பகுதியைச் சேர்ந்த சரவணன்.

  மற்றவர்களின் இல்லங்களில் தீப விளக்குகள் பிரகாசிக்க, அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்க்கை இன்னும் இருளில்தான் உள்ளது. இந்த நிலை மாற உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT