ரேஷன் அட்டை பிரச்னையா? புகார் தெரிவிக்க "ஹெல்ப் லைன்'
சென்னை, அக். 5: ரேஷன் அட்டையில் பிரச்னை உள்ளிட்ட நுகர்வோர் தொடர்பான எந்தக் குறைகளையும் இனி தொலைபேசியில் தெரிவிக்கும் ஹெல்ப் லைன் வசதி (044 - 2859 2828) உருவாக்கப்பட்டுள்ளது. பிரச்னை தெரிவித்த பின்,
சென்னை, அக். 5: ரேஷன் அட்டையில் பிரச்னை உள்ளிட்ட நுகர்வோர் தொடர்பான எந்தக் குறைகளையும் இனி தொலைபேசியில் தெரிவிக்கும் ஹெல்ப் லைன் வசதி (044 - 2859 2828) உருவாக்கப்பட்டுள்ளது.
பிரச்னை தெரிவித்த பின், ஓரிரு நாளில் உங்களுக்கு போன் அல்லது இ - மெயில் மூலம் உரிய பதில் கிடைக்கும். இதற்காக, மாநில அளவிலான இந்த வசதியை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உருவாக்கியுள்ளது.
சோதனை அடிப்படையில் இப்போது செயல்பட்டு வரும் இந்த "ஹெல்ப் லைன்' ஓரிரு வாரங்களில் முழுமையாக இயங்கத் தொடங்கும் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரேஷன் அட்டையில் பிரச்னை என்றால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கோ அல்லது அந்தக் கோட்டத்தில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்துக்கோ செல்ல வேண்டும்.
இதே போன்று, வெளிச் சந்தையில் நாம் வாங்கும் பொருளில் குறைபாடு இருந்தால் அதை வாங்கிய கடையில் சென்று மாற்ற முயற்சிப்போம். அப்போது, ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் நுகர்வோர் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்க நமக்கு உரிமை உண்டு. ஆனால், அது தொடர்பான விழிப்புணர்வு நம்மில் பலரிடம் இருப்பதில்லை. அந்தப் பணியை, "ஹெல்ப் லைன்' மூலம் செய்ய இருக்கிறது, உணவுத் துறை.
எப்படித் தொடர்பு கொள்ளலாம்? ஹெல்ப் லைனுக்கான மையம், சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலகத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்குத் தகவல்களை அளிக்க 4 அலுவலர்களும், ஒரு மேலாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, உணவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ""ஒப்பந்தப் புள்ளி கோருதல் அடிப்படையில், கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் "ஹெல்ப் லைன்' மையத்தின் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
"ஹெல்ப் லைன்' மையத்தை தொடர்பு கொள்ளும் போது, புதிய ரேஷன் அட்டை எவ்வாறு பெறுவது, முகவரி மாற்றம் செய்ய என்ன ஆவணங்களை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் கேட்கலாம். அதை விடுத்து, மையத்தின் அலுவலர்களையும் தொடர்பு கொள்ளலாம். நுகர்வோருக்கு உரிய அடிப்படைத் தகவல்கள் முதலில் அளிக்கப்படும். பின்னர், சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதும் தெரிவிக்கப்படும். ரேஷன் அட்டை தொடர்பான பிரச்னை என்றால் 3 முதல் ஒரு வாரத்துக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோகத் துறையைத் தவிர்த்து நுகர்வோர் தொடர்பான மற்ற பிரச்னைகள் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்'' என்றனர்.
பதில் கிடைக்கும்... "ஹெல்ப் லைனி'ல் தெரிவிக்கும் தகவல் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு போன், இணையதளம் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் பதில் அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
""இந்த புதிய திட்டம் ஓரிரு வாரங்களில் நடைமுறைக்கு வர இருக்கிறது. ஹெல்ப் லைனின் வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கினால், எஸ்.எம்.எஸ். மூலம் புகார் தெரிவிக்கும் வசதியை ஆரம்பிப்போம்'' என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.