முகப்பு
தமிழ்நாடு

நல வாரியங்கள் செயல்பாட்டில் முதல்வர் அதிருப்தி

சென்னை, அக். 11:     நல வாரியங்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் கருணாநிதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.   "வாரியங்கள் அமைத்தால் மட்டும் போதாது. அவை ஆற்றும் காரியங்களைப் பட்டியலிட்டு மாதந்தோறும் அனுப

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:55 PM
பகிர்:

சென்னை, அக். 11:     நல வாரியங்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் கருணாநிதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

  "வாரியங்கள் அமைத்தால் மட்டும் போதாது. அவை ஆற்றும் காரியங்களைப் பட்டியலிட்டு மாதந்தோறும் அனுப்ப வேண்டும்' என்று அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

  அமைப்பு சாரா தொழிலாளர்களின் பணி நிலைமைகளை முறைப்படுத்தவும், அவர்களின் நலனை மேம்படுத்தவும் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டம் இயற்றப்பட்டது.

  இந்தச் சட்டத்தின் கீழ், அமைப்புசாரா உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை ஏற்படுத்த கடந்த 1999-ம் ஆண்டு (திமுக ஆட்சிக் காலத்தில்) "உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியம்' உருவாக்கப்பட்டது.

  பல்வேறு நல வாரியங்கள்...  அதன்பின், மீண்டும் 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தது. உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியத்தைத் தொடர்ந்து, ஆட்டோ ரிக்ஷா மற்றும் வாடகை ஊர்தி நல வாரியம், சலவைத் தொழிலாளர் நல வாரியம், முடிதிருத்துவோர் நல வாரியம் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட நல வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன. இது, கடந்த மார்ச் மாத கணக்கெடுப்பின்படி உள்ள நல வாரியங்களின் எண்ணிக்கை.

  இந்த நிலையில், கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள், மீனவர் நல வாரியம், அரவானி நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு நல வாரியங்கள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. மேலும், "திரைப்படத் தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்' என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

  நல வாரியங்கள் இத்தனை அமைக்கப்பட்டாலும் அதன் பயன்கள் முழுஅளவில் பயனாளிகளுக்குச் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  ""கடந்த மார்ச்சுக்குள் அரசு எடுத்த கணக்கெடுப்பின்படி, நல வாரியங்களில் பதிவு செய்து கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 39 ஆயிரத்து 248 பேராகும். அதில், பயனாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரத்து 882. நல வாரியங்களின் உறுப்பினர் சேர்க்கையில் அரசு தீவிர கவனம் செலுத்தவில்லை. உறுப்பினர் பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கு கட்டணம் ஏதுமில்லை. ஆனாலும், உறுப்பினர் சேர்க்கையில் அரசு அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்துவதில்லை'' என்று புகார் தெரிவிக்கிறார் ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சேஷசயனம்.

  முதல்வரின் அதிரடி உத்தரவு...  இந்த நிலையில், நல வாரியங்களின் செயல்பாடு குறித்து முதல்வர் கருணாநிதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

  "தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் மற்றும் அந்தத் துறையில் பணிபுரிவோர் தங்களுக்கு நலவாரியம் அமைக்கப்பட வேண்டும்' என்று முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

  இந்தக் கோரிக்கை குறித்த கோப்பை பரிசீலித்த முதல்வர் அதற்கு ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து, பதிப்பாளர், விற்பனையாளர் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஒப்புதலுடன் ஒரு உத்தரவையும் வெளியிட்டுள்ளார்.

  அதில், ""வாரியங்கள் அமைத்தால் மட்டும் போதாது. அவை ஆற்றும் காரியங்களை பட்டியலிட்டு மாதந்தோறும் எனது பார்வைக்கு அனுப்ப வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளார். முதல்வர் கருணாநிதியின் இந்த உத்தரவு அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

"தினமணி'யில் செய்தி:    நல வாரியங்களின் செயல்பாடுகள் குறித்து "எதிர்பார்த்த பயன்களைத் தராத நல வாரியங்கள்' என்ற தலைப்பில் 7.9.2009 நாளிட்ட "தினமணி'யில் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.