சென்னை, அக். 28: ஆறாம் வகுப்பில் கணினி கல்வி தொடங்கப்படும் என்ற அரசு அறிவித்து 3 மாதமாகியும், பள்ளி மாணவர்களுக்கு இன்னும் புத்தகம் அச்சடித்து வழங்கப்படவில்லை.
நாட்டிலேயே முதன்முறையாக தமிழகப் பள்ளிகளில் தான் பிளஸ் 1, பிளஸ் 2-வில் கணினி கல்வி தொடங்கப்பட்டது. ஆனால், தமிழகத்தைத் தவிர பிற மாநிலப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கணினி கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2009-ம் ஆண்டு முதல் 6-ம் வகுப்பில் கணினி கல்வி செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இதர வகுப்புகளில் கணினி கல்வி தொடங்கப்பட உள்ளது.
சுமார் 4,200 நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பில் கணினி கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதற்காக ஒரு பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் வாரத்துக்கு இரண்டு வகுப்புகள் எடுக்கவும் ஆணைகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநரகம் மூலம் "கணினி கல்வி' குறித்தப் பாடப் புத்தகம் ஜூலை மாதத்தில் எழுதி முடிக்கப்பட்டு, அதன் அசல் பிரதி தமிழ்நாட்டு பாடநூல் கழக நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பல மாதங்களாகியும், புத்தகம் இன்னும் அச்சடிக்கப்படவில்லை.
7 கோடி புத்தகங்கள்...: 2010-2011 ஆம் கல்வியாண்டிற்கான 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 7 கோடி புத்தகங்களை அச்சடிப்பதற்கான டெண்டர் விடப்பட்டு விட்டது. சென்னை, சிவகாசியில் உள்ள பிரிண்டர்ஸ் நிறுவனங்களில் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி சில நாள்களில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயத்தில், 6-ம் வகுப்பு கணினி கல்வி பாடப் புத்தகத்தை அச்சடிப்பதில் மெத்தனம் நிலவுகிறது.
"6-ம் வகுப்பு பாடம் தொடங்கி, கிட்டதட்ட அரையாண்டு தேர்வே நெருங்கிவிட்டது.
ஆனால் இன்னும் மாணவர்களுக்கு புத்தகம் அச்சடித்து வழங்கப்படாமல் உள்ளது.
விரைவில் புத்தகங்களை அச்சடித்து தர பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் விநியோகம்: இதுகுறித்து பள்ளிக் கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, ""தமிழ்நாட்டு பாடநூல் கழக நிறுவனத்திடம் விரைவில் புத்தகத்தை அச்சடித்து தரும்படி கேட்டுள்ளோம். புத்தகம் அச்சடித்து முடிக்கப்பட்டவுடன் மாணவர்களுக்கு விரைவில் புத்தகங்கள் விநியோகம் செய்ய முறையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.