முகப்பு
தமிழ்நாடு

தொண்டு நிறுவனங்களுக்கு வருமான வரி சமுதாயப் பணிகள் பாதிக்கும் அபாயம்

திண்டுக்கல், செப். 8:   2011-ம் ஆண்டு முதல் தொண்டு நிறுவனங்கள் தங்களது உபரி வருவாயில் 15 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும் என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்பால் சமுதாயப் பணிகளில் பாதிப்பு ஏற்படும் ந

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:31 PM
பகிர்:

திண்டுக்கல், செப். 8:   2011-ம் ஆண்டு முதல் தொண்டு நிறுவனங்கள் தங்களது உபரி வருவாயில் 15 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும் என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்பால் சமுதாயப் பணிகளில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அரசுப் பணிகள் முழுமையாக மக்களைச் சென்றடைவதில்லை என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. அப்போது, தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாராத நிறுவனங்கள் இப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கருதினார்.

இதனாலும், அவரது ஊக்குவிப்பின் பேரிலும், நாடு முழுவதும் தொண்டு நிறுவனங்கள் தோன்ற ஆரம்பித்தன.

Advertisement

இந்த நிறுவனங்கள் மூலம், படித்த இளைஞர்களை ஊக்கப்படுத்தி, குறைந்த ஊதியத்தில் லாப நோக்கம் இன்றி சமூகப் பணிகள் செய்ய நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் தொண்டு நிறுவனங்கள் தோன்றின. இவற்றில் இப்போது 50 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

தொண்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வருவாயில் ஆண்டுச் செலவு போக எஞ்சியுள்ள உபரி நிதிக்கு 15 சதவிகிதம் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

இதனால் சமூகப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படக் கூடும் எனத் தொண்டு நிறுவனங்கள் கருதுகின்றன. எனவே, இத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என இந் நிறுவனங்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.

இது குறித்து காந்திகிராம அறக்கட்டளைச் செயலர் கே.  சிவகுமார் கூறியதாவது:

"தேசிய அளவில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் லாப நோக்கமின்றி சிறு, குறுந் தொழில்களில் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் குறைந்தபட்ச வருவாயைக் கொண்டு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்துள்ள சமூக சேவை அமைப்புகளை இயக்கப் பயன்படுத்தி வருகின்றன.

இத்தகைய தொழில்கள் மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கும், நன்கொடைகள் மூலம் பெறும் வருவாய்க்கும், இந்த வருவாயை பிற அமைப்புகளின் இயக்கத்துக்கு வழங்குவதற்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.

தொண்டு நிறுவனங்கள் தொழில் ரீதியான மற்றும் நன்கொடை மூலமான உபரி வருவாய்க்கு 15 சதவிகித வருமான வரி செலுத்த வேண்டும் என்றும், தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த சமூக சேவை அமைப்பும் பெறுகின்ற உதவித் தொகைக்கு 15 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும் என நேரடி வரி விதிப்புக் கொள்கையில் புதிதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒரே சமயத்தில் 30 சதவிகிதம் வரி விதிப்பு செலுத்தும் நிலைக்குத் தொண்டு நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடைபெறும் தொழில்கள் நசிந்து போகும். தொண்டு நிறுவனங்களைச் சார்ந்துள்ள சமூக அமைப்புகளும் இயங்க முடியாத நிலை உருவாகும்.

இந் நிலையில், தங்களது உபரி வருவாயை அடுத்த நிதியாண்டுக் கணக்குக்கு கொண்டு செல்வதிலும் சிக்கல் உருவாகும். எனவே, புதிய வரி விதிப்புப் பரிந்துரையை மத்திய அரசு தவிர்க்க வேண்டும். வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

எனவே, தொண்டு நிறுவனங்கள் செலுத்த வேண்டும் எனக் கூறப்படும் 15 சதவிகித வரியை மறுபடியும் அந்த நிறுவனங்களுக்குத் திருப்பி வழங்க அரசு ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில், குறிப்பிட்ட சில பணிகளுக்குள் தொண்டு நிறுவனங்கள் தங்களை முடக்கிக் கொள்ள நேரிடும்' என்றார் சிவகுமார்.

"வேலை இழப்பு உருவாகும்'

திண்டுக்கல் அமைதி அறக்கட்டளைத் தலைவர் ஜே. பால்பாஸ்கர் கூறியதாவது:

"இந்தியா அணு மற்றும் ஐ.டி. துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதால், வளர்ந்த நாடு என்ற இடத்தை உலக அளவில் பெற்று வருகிறது. இதன் காரணமாக உதவிபெற வேண்டிய நாடுகளின் பட்டியலில் இல்லை. இதனால் வெளிநாடுகள் மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நன்கொடையைப் பெற முடிவதில்லை. எனவே, தொண்டு நிறுவனங்கள் வருமானத்துக்காக ஆயுர்வேதம், காகிதக் குவளைகள் செய்வது போன்ற தொழில்களில் ஈடுபடுவது தவிர்க்க முடியாததாகின்றன. இத்தகைய தொழில்களைத் தொண்டு நிறுவனங்கள் செய்யும்போது அதை லாபமாகக் கருதக் கூடாது. அரசியல் கட்சிகள் பெறும் நிதிக்கு வரி கிடையாது என்கிறபோது, தொண்டு நிறுவனங்களுக்கு வரி என்பது நியாயமானதாக இல்லை. வரி விதிப்பைக் கட்டாயமாக்கினால் வரியைச் செலுத்தி தனது செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளும். இதனால் பல நிறுவனங்களில் வேலை இழப்பு உருவாகி, வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமாகும்.சில நிறுவனங்கள் குறைந்த வட்டிக்கு சுய உதவிக் குழுக்களுக்கும், தனி நபர்களுக்கும், வங்கிகளைவிட விரைவாகக் கடன் வழங்கி வருகின்றன. இந்த உதவிகள் நிறுத்தப்படும்' என்றார் பால்பாஸ்கர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments