முகப்பு
தமிழ்நாடு

குறைகிறது பி.இ., எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மார்க்

சென்னை, மார்ச் 31: வரும் கல்வி ஆண்டில் (2010-11) பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.   பிளஸ் 2 தேர்வில் பி.இ. க

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:18 PM
பகிர்:

சென்னை, மார்ச் 31: வரும் கல்வி ஆண்டில் (2010-11) பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

  பிளஸ் 2 தேர்வில் பி.இ. கட் ஆஃப் மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் கணிதப் பாடக் கேள்விகள் கஷ்டமாக இருந்தன; இதே போன்று எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு

கட்-ஆஃப் மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் உயிரியல் பாடத்தில் விலங்கியல் கேள்விகள் கஷ்டமாக இருந்தன.

  இதனால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஓரளவு அதிக மதிப்பெண் எடுத்தும் பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பு கிடைக்காமல் வேறு படிப்புகளில் சேர்ந்துள்ள பழைய மாணவர்கள், இந்த ஆண்டு பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர போட்டி போடும் நிலை உருவாகியுள்ளது.

சதங்களின் எண்ணிக்கை குறையும்: 2009-ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானபோது, மொத்தம் தேர்வு எழுதிய 6.89 லட்சம் பேரில் கணிதத்தில் 4,060 பேர் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்தனர்; உயிரியல் பாடத்தில் 218 பேர் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்தனர்.

   கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய தொழில் கல்வியை நிர்ணயிக்கும் முக்கிய பாடங்களில் அதிக மாணவர்கள் 200-க்கு 200 எடுக்கும் நிலையில், தர வரிசைப் பட்டியலில் 200-க்கு 200 எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.

  ஆனால், இந்த ஆண்டு கணிதம் மற்றும் உயிரியல் பாடத்தில் விலங்கியல் கேள்விகள் கஷ்டமாக இருந்ததால், தர வரிசைப் பட்டியலில் 200-க்கு 200 பெற்று இடம்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்; 200 மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் ஏராளமான மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண்ணும் குறையும்.

  குறிப்பாக எம்.பி.பி.எஸ். படிப்பைப் பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களின் எண்ணிக்கை (1,483 இடங்கள்) குறைவு என்பதால், ஒவ்வொரு 0.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் இடையே மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்படுகிறது.

கடந்த ஆண்டு பி.இ., எம்.பி.பி.எஸ். கட்-ஆ:ப் எவ்வளவு? கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் பொதுப் பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 195-ஆக இருந்தது.

  கடந்த ஆண்டு தரவரிசைப் பட்டியல் வெளியான ஜூன் 29-ம் தேதியன்று, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 197.75-ஆக இருந்தது; பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 195.75-ஆக இருந்தது.

பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் கட்-ஆஃப்: எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம்

கிடைக்காத நிலையில், பல் மருத்துவ பட்டப் படிப்பு (பி.டி.எஸ்.), கால்நடை மருத்துவப் படிப்பு (பிவிஎஸ்சி) படிக்க மாணவர்கள் விரும்புகின்றனர். இந்தப் படிப்புகளுக்கான கட்-ஆப் மதிப்பெண்களும் குறையும்.

  கடந்த ஆண்டு பி.டி.எஸ். படிப்பில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 195.25-ஆகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 194.5-ஆகவும் இருந்தது.

  கால்நடை மருத்துவப் படிப்பில் கடந்த ஆண்டு பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 180-ஆகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் 174-ஆகவும் இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →