தமிழ்நாடு

தனியார் பள்ளிகளில் கட்டண நிர்ணயம் வெறும் கண்துடைப்பா?

சென்னை, ஏப்.4: தனியார் பள்ளிகளில் கட்டண நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு கட்டண நிர்ணயம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், 90 சதவீத தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்க

ஆர். ஆதித்தன்

சென்னை, ஏப்.4: தனியார் பள்ளிகளில் கட்டண நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு கட்டண நிர்ணயம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், 90 சதவீத தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துவிட்டதாகக் கல்வியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் வெறும் கண்துடைப்பா என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

2010}2011-ம் கல்வியாண்டில் முதல் மற்றும் 6}ம் வகுப்பில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்காக மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக், ஓரியண்டல், ஆங்கிலோ}இந்தியன் என நான்கு வகைப் பாடத் திட்டத்தை ஒருங்கிணைத்து "பொதுப் பாடத் திட்டத்தை' உருவாக்க அரசு முடிவு செய்தது.

அதன்படி தேசிய கலைத்திட்டத்தின்படி (என்சிஎப் 2005) பொதுப் பாடத்திட்டம் எழுதி முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது முதல் மற்றும் 6}ம் வகுப்புக்கான பாடப் புத்தகங்கள் எழுதி முடிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் கழக நிறுவனத்தின் சார்பில் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

கட்டண முறைப்படுத்துதல் சட்டம்: இதுதவிர தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண வசூலைத் தடுப்பதற்கென, கட்டணம் முறைப்படுத்துதல் சட்டம் 2009 கொண்டு வரப்பட்டது. இதில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டது.

3,500}க்கும் அதிகமான தனியார் பள்ளிகள்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் மேற்பார்வையில் மாநிலம் முழுவதும் உள்ள 3,500}க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, விளையாட்டு மைதானம், ஆய்வக வசதி, மாணவர்}ஆசிரியர் விகிதம் என அனைத்து விவரங்களையும் திரட்டியது. முதலில் பள்ளிகளிடம் இருந்து 22 வகையான கேள்விகள் அடங்கிய விவரங்கள் கோரப்பட்டன. இதுதவிர்த்து கூடுதல் விவரங்கள் பலவற்றையும் குழு கேட்டறிந்தது.

இந்த விவரங்கள் முழுவதும், வல்லுநர்களைக் கொண்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியும் முடிந்துவிட்டதாகக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மாணவர் சேர்க்கைக்கு திடீர் தடை: இப்படி ஒரு பக்கம் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண நிர்ணயம் பணி நடந்து கொண்டிருக்கும் வேளையில், தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை நடத்திக் கொண்டிருப்பதாகப் புகார் எழுந்தது.

அதைத்தொடர்ந்து 2009 நவம்பர் மாதம், மாணவர் சேர்க்கையை மே மாதம் மத்தியில் தான் நடத்த வேண்டும் என்றுகூறி, மாணவர் சேர்க்கைக்கு திடீரென மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தடை விதித்து உத்தரவிட்டது.

கட்டணம் வசூலிக்காமல் மாணவரை சேர்க்கலாம்: பின்னர் ஒரு மாதம் கழித்து தனியார் பள்ளிகள், கட்டணம் வசூலிக்காமல் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்று மற்றொரு உத்தரவை வெளியிட்டது.

இதை எதிர்பார்த்து காத்திருந்தது போல 90 சதவீத தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துவிட்டது. அதுவும் கடந்த ஆண்டைவிட கூடுதல் கல்வி கட்டணத்துடன் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துவிட்டதாகப் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பள்ளிகளின் தரத்துக்கு ஏற்ப எல்கேஜிக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வசூல் செய்து, மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் நடத்தி முடித்துள்ளன. சில பள்ளிகளில் பெற்றோர்கள் கையெழுத்திட்ட வெற்று காசோலையைக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

"ஏற்கெனவே பள்ளிகளில் படித்து வரும் எங்களது குழந்தைகளின் கல்விக் கட்டணத்தைச் செலுத்துவிட்டோம். கல்வி கட்டண நிர்ணயச் சட்டத்தால் நிர்ணயிக்கப்படும் கட்டண முறை அமலாகும்போது, ஏற்கெனவே செலுத்திய கட்டணம் திரும்ப வழங்கப்படுமா என்று தெரியவில்லை. எனவே எங்களுக்கு எவ்விதப் பலனும், இந்தச் சட்டத்தால் வந்துவிடப்போவதில்லை என்றே கருதுகிறோம்' என்று பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இதுதொடர்பாக, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியது:

வரும் ஜூன் மாதம் 1}ம் தேதியுடன் 2010}2011 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டு தொடங்குகிறது. இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், கட்டண நிர்ணயம் தொடர்பான எவ்வித தகவலும் பள்ளிகளுக்கு வரவவில்லை.

நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு நிர்ணயம் செய்யும் கட்டணத்தை மேல்முறையீடு செய்ய பள்ளிகளுக்கு 15 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 30 நாள்களில் குழு, கட்டணத்தை இறுதி செய்து அறிவிக்கும்.

இச்சட்டத்தில் பெற்றோர் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு வாய்ப்பு அளிக்கவே இல்லை. எனவே, பெற்றோர்களும் கருத்து தெரிவிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். பள்ளிகளின் உள்கட்டமைப்புக்குத் தகுந்தவாறு கட்டணம் நிர்ணயிக்கும்போது சமச்சீரான கல்வி எப்படி வழங்க முடியும்?

பொதுப் பாடத்திட்டத்தில் இறுதி செய்த பாடத்திட்ட விவரங்கள், இதுவரை இணையதளத்தில் வெளியிடவில்லை. தனியார் பள்ளிகளின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால், கட்டணம் நிர்ணயிப்பதில் இழுபறி நீடிக்கிறது என்றார்.

பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் இறுதி செய்யப்படுகிற நிலையில், பெற்றோர்களும் தங்களது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு ஏற்படுத்த அரசு முன்வருமா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT