கரும்பு அரவை குறைந்ததால் மின்உற்பத்தி குறைந்த கூட்டுறவு சர்க்கரை
சிதம்பரம், ஏப். 11: நிர்வாகத் திறமையின்மை, அரசியல் குறுக்கீடுகள், கரும்புக்கு உரிய விலை கிடைக்காதது ஆகியவற்றால் தமிழகத்திலேயே அதிக லாபத்தில் இயங்கி வந்த சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பில் உள்ள எம்.
சிதம்பரம், ஏப். 11: நிர்வாகத் திறமையின்மை, அரசியல் குறுக்கீடுகள், கரும்புக்கு உரிய விலை கிடைக்காதது ஆகியவற்றால் தமிழகத்திலேயே அதிக லாபத்தில் இயங்கி வந்த சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பில் உள்ள எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அரவை குறைந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மேலும் அரவை குறைந்ததால் மின்உற்பத்தியும் குறைந்துள்ளது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
÷விவசாயத்தை தொழிலாக நம்பியுள்ள இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் முன்னாள் அதிமுக அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் முயற்சியால், சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பில் 1989-ல் எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைக்கப்பட்டது. ஆலை தொடங்கப்பட்டது முதல் 2.50 லட்சம் டன் முதல் அரவை தொடங்கி சுமார் 6 லட்சம் டன் வரை அரவை நடைபெற்று தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலேயே அதிக லாபத்தில் இச்சர்க்கரை ஆலை இயங்கி வந்தது.
மேலும் சர்க்கரை ஆலை கழிவிலிருந்து மின்உற்பத்தி செய்யும் திட்டம் இச்சர்க்கரை ஆலையில்தான் முதன்முதலாக தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
5 ஆண்டுகளாக தலைமை கரும்பு அலுவலர் மற்றும் கரும்பு அலுவலர்களால் விவசாயிகளுக்கு கரும்பு வெட்டுவதற்கு உத்தரவு வழங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகளால் கரும்பு விவசாயிகள் மிகவும் அவதியுற்று கரும்பு விவசாயத்தையே பெரும்பாலான விவசாயிகள் நிறுத்தி விட்டனர்.
கரும்பு அலுவலர்கள் சரியாக வெட்டு உத்தரவு வழங்காததால் வெறுத்துபோன பல விவசாயிகள் தங்களது கரும்பு தோட்டத்தை தீயிட்டு கொளுத்திய சம்பவமும் நடைபெற்றுள்ளது.
கொஞ்சம், நஞ்சம் பயிரிட்ட கரும்பு விவசாயிகள் தங்களது கரும்புகளை அருகாமையில் உள்ள ஆண்டிமடம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கூடுதல் விலைக்கு அளித்து வந்தனர்.
÷இந்நிலையில் 2009-10 ஆண்டு கரும்பு அரவைக்கு குறைந்தபட்சம் 2.50 லட்சம் டன் கரும்பு இருந்தால்தான் அரவை நடைபெறும் என்ற நிலைமை உருவானது. பின்னர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலையீட்டின் பேரில் அருகே உள்ள ஆண்டிமடத்திலிருந்து கரும்பு பெறப்பட்டு தற்போது 2 லட்சம் டன் கரும்பு சேகரிக்கப்பட்டு அரவை தொடங்கியுள்ளது.
6 லட்சம் டன் கரும்பு அரவை நடைபெற்ற இச்சர்க்கரை ஆலையில் மின்சாரம் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது அரவை குறைந்ததால் மின் உற்பத்தியும் குறைந்துள்ளது.
÷அதிகாரிகளின் நிர்வாக திறமையின்மை, அரசியல் தலையீடுகள் மற்றும் கரும்புக்கு உரிய விலை கிடைக்காதது ஆகியவற்றால் அதிக லாபத்தில் இயங்கி கொண்டிருந்த சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என கரும்பு விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
÷இச்சர்க்கரை ஆலையை மீண்டும் லாபத்தில் இயங்க வைக்க திறமையான அதிகாரியை நியமித்து இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் சர்க்கரை ஆலையை மீண்டும் லாபத்தில் இயங்க வைக்க தமிழக அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இல்லையெனில் எதிர்காலத்தில் இச்சர்க்கரை ஆலையை மூடவேண்டிய நிலை ஏற்படும் என உழவர் கூட்டமைப்புத் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.