தமிழ்நாடு

ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடித் துறைமுகம் அமையுமா?

வேதாரண்யம், ஏப் 19: ஆறுகாட்டுத்துறை கடலோரத்தில் மீன்பிடி படகுத் துறைமுகம் அமைக்கப்படுமா என எதிர்பார்த்துள்ளனர் அப்பகுதி  மீனவர்கள்.    நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை முக்கிய மீன

கே.பி. அம்​பி​கா​பதி

வேதாரண்யம், ஏப் 19: ஆறுகாட்டுத்துறை கடலோரத்தில் மீன்பிடி படகுத் துறைமுகம் அமைக்கப்படுமா என எதிர்பார்த்துள்ளனர் அப்பகுதி  மீனவர்கள்.

   நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை முக்கிய மீன்பிடித் தளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

   சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு முன்புவரை வேதாரண்யம் கால்வாயில் (உப்பனாறு) படகு போக்குவரத்து நடைபெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

       நாகப்பட்டினம் - கோடியக்கரைக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ஆறுகாட்டுத்துறை அருகே மீன் இனப் பெருக்கப் பகுதி அமைந்திருப்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்த மீன்பிடித் தளமாக உள்ளது.

   மேலும், வேதாரண்யம் பகுதி கடலோரத்தில் உள்ள சதுப்பு நிலக் காடுகள் மூலம் கிடைக்கும் கழிவுகள், டெல்டா வடிகால் ஆறுகளிலிருந்து வெளியேறும் நன்னீர் கலப்பதால், கடல் நீரின் உப்புத் தன்மை குறைந்து காணப்படுவது போன்ற காரணிகளும் இப் பகுதியில் இறால், நண்டு உள்ளிட்ட பல இன மீன் வளத்தை அதிகரிக்கச் செய்கிறது.

    ஆறுகாட்டுத்துறையில் மட்டும் சுமார் 400 கண்ணாடி இழைப் படகுகள், அறுபதுக்கும் மேற்பட்ட பெரிய படகுகள் மற்றும் கட்டுமரங்களைப் பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர்.

  இதுதவிர, வெளியூர் மீனவர்களும் அவ்வப்போது வந்து, தங்கி மீன்பிடி தொழில் செய்கின்றனர்.

   இங்கு ஏற்பட்ட சுனாமி தாக்குதலுக்கு பின்னர் அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் தேவையான படகு உள்ளிட்ட வாழ்வாதாரங்களை மீனவர்கள் பெற்றுள்ளனர். அத்துடன், ரூ. 1 கோடியே 22 லட்சம் மதிப்பில் மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

  மேலும், மீன்பதனக் கூடம், சூரிய சக்தியில் இயங்கும் மீன் உலர்த்தும் சாதனம் உள்ளிட்டவையும் கிடைத்துள்ளன.

   ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது நிகழும் கடல் சீற்றங்கள் போன்ற நேரங்களில் மீன்பிடி படகுகளை பாதுகாக்க உரிய இடம் இல்லாமல் மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

   இங்கு படகுகளை நிறுத்த அலைதடுப்புச் சுவர் (பிரேக் வாட்டர்) ஏற்படுத்த 2003-ல் ஆய்வு செய்யப்பட்டது. அத்துடன் பூட் திட்டத்தின் கீழ், ஹட்கோ நிதியுதவியுடன் மீன்பிடித் துறைமுகம் அமைக்கவும் முயற்சிக்கப்பட்டது. ஆனால், எதுவுமே செயல்வடிவம் பெறவில்லை.

   இதுகுறித்து ஆறுகாட்டுத்துறை கிராம நாட்டார் பி.எஸ். சேதுபதி கூறியது:

   படகுகளைப் பாதுகாப்பது மீனவர்களுக்கு பெரிய பிரச்னையாக உள்ளது. புயல் போன்ற நேரங்களில் அருகே உள்ள உப்பனாற்றில் படகுகளை நிறுத்துவோம். ஆற்றில் தண்ணீர் இல்லாத நேரத்தில் அதையும் செய்ய முடியாது.

   தற்போது மீன் வளத்துறை அமைச்சராக உள்ள கே.பி.பி. சாமி ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என 2006-ல் தெரிவித்தார். ஆனால், அது அமையவில்லை என்றார் அவர்.

   கிடைத்துள்ள வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், மீன்பிடித் தொழில் வளம் காணவும் ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான அரசின் முயற்சிகள் செயல்வடிவத்துக்கு வர வேண்டும் என்பதே மீனவர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT