தமிழ்நாடு

பொலிவிழந்து போனது "குதிரை வண்டி கோர்ட்'; செம்மொழி மாநாட்டோடு விமோசனம் கிடைக்குமா?

கோவை, ஏப்.22: பூங்காக்கள், புதிய நடைபாதைகள், அலங்கார விளக்குகள், நவீன நிழற்குடை என ஒருபுறம் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை மாநகரை அழகூட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  மறுபுறத்தில், போக்குவ

சிவ. மணிகண்டன்

கோவை, ஏப்.22: பூங்காக்கள், புதிய நடைபாதைகள், அலங்கார விளக்குகள், நவீன நிழற்குடை என ஒருபுறம் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை மாநகரை அழகூட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

 மறுபுறத்தில், போக்குவரத்து மிகுந்த அவிநாசி சாலையையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பழைய நீதிமன்ற வளாகம் பாழடைந்து கவனிப்பாரற்று கிடக்கிறது.

 ஆங்கிலேயர் காலத்தில் அதிகாரிகளின் குதிரைகளை பராமரிக்கும் இடமாகவும், பிறகு அரசு அலுவலகங்களாகவும் செயல்பட்டு வந்தது இந்த வளாகம். 2000}க்கு முன்பு வரை இந்த வளாகத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் செயல்பட்டு வந்தன.

"குதிரை வண்டி கோர்ட்' என்று கோவை வாசிகளால் அழைக்கப்படும் இந்த வளாகம் தற்போது புதர்மண்டியும், இங்குள்ள கட்டடங்கள் சிதிலமடைந்தும் கிடக்கின்றன.

 அவிநாசி சாலை மேம்பாலத்தையொட்டி ஏறத்தாழ 3 ஏக்கர் பரப்பில் உள்ளது இந்த வளாகம். ஆங்கிலேயரின் கட்டடக் கலைக்குச் சான்றாகத் திகழும் இந்த கட்டடத்தின் தூண்கள் இன்னும் கம்பீரமாக நிற்கின்றன. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மரங்கள் விலைமதிப்பற்றவை. பராமரிப்பு இல்லாததால் சுவர்களின் பூச்சுகள் பெயர்ந்துவிட்டன. கூரையில் வேயப்பட்ட ஓடுகளும் உடைந்து கிடக்கின்றன.

கோவையின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக இருந்த குதிரை வண்டி கோர்ட் தற்போது அந்த அடையாளத்தை இழந்து பொலிவிழந்து காணப்படுகிறது.

 ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டடப்பட்ட பிறகு, இங்கு செயல்பட்ட நீதிமன்றங்கள் புதிய வளாகத்துக்கு மாற்றப்பட்டன.

அதையடுத்து இந்த வளாகத்தை  கலைப் பண்பாட்டுத் துறையிடம் ஒப்படைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.  ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் செயல்படும் அரசு இசைக் கல்லூரி, வாடகைக் கட்டடத்தில் இருக்கும் அரசு அருங்காட்சியகம் ஆகியவற்றை பழைய நீதிமன்ற வளாகத்துக்கு மாற்றலாம் எனவும் திட்டமிடப்பட்டது.

 அரசு அருங்காட்சியகத்துக்கு நிரந்தர இடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கோயமுத்தூர் அருங்காட்சியக காப்புக் குழு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு உள்பட பல்வேறு தரப்பினரும் பழைய நீதிமன்ற வளாகத்தை அருங்காட்சியகத்துக்கு ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

நீதித்துறை வசம் இருந்த பழைய நீதிமன்ற வளாகத்தை ஒப்படைக்கக் கோரி 2003}ல் அப்போதைய மாவட்ட ஆட்சியர் நா.முருகானந்தம், அத்துறைக்கு வேண்டுகோள் அனுப்பினார். பழைய நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டதால் அருங்காட்சியகத்தை மாற்றும் கோரிக்கை அப்படியே இருக்கிறது.

 தற்போது பழைய நீதிமன்ற வளாகம் கேட்பாரற்று கிடக்கிறது. சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் தஞ்சம் அடையும் இடமாகவும் மாறி வருகிறது. பகல்

நேரங்களில் பிச்சைக்காரர்கள் தூங்கும் இடமாக இருக்கிறது.

 பழைய நீதிமன்ற வளாகத்தின் பாரமரிப்பைக் கவனிக்கும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டதற்கு, "பழைய நீதிமன்ற வளாகம் நீதித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பராமரிப்பை பொதுப் பணித்துறை கவனிக்கிறது. கட்டடங்கள் பயன்பாடு இல்லாமல் இருப்பதால் எவ்விதப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. மேலும் நீதிபதிகள் குடியிருப்பு கட்ட அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது' என்றனர்.

 பல ஆண்டுகளாக இதே நிலையில் தொடர்ந்து கொண்டிருக்கும் பழைய நீதிமன்ற வளாகத்துக்கு, செம்மொழி மாநாடு நடைபெறும் நிலையிலாவது விமோசனம் கிடைக்காதா? என்பதே கோவை வாசிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT