பாழடைந்து வரும் கல்லுப்பட்டி சுகாதார வளாகம்
திண்டுக்கல்: பாழடைந்து வரும் கல்லுப்பட்டி சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என அக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி செட்டியபட்டி ஊராட்சியைச் சேர
திண்டுக்கல்: பாழடைந்து வரும் கல்லுப்பட்டி சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என அக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி செட்டியபட்டி ஊராட்சியைச் சேர்ந்தது கல்லுப்பட்டி கிராமம். திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ளது இக்கிராமம்.
2001-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் வென்ற அ.தி.மு.க.வின் பி.கே.டி.நடராஜன், அப்போது கல்லுப்பட்டியில் மகளிர், குழந்தைகளுக்கான பொது சுகாதார வளாகத்தைக் கட்டிக் கொடுத்தார். 2006-ம் ஆண்டு வரை இந்த சுகாதார வளாகம் செயல்பட்டு வந்தது.
Advertisement
பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் ஐ.பெரியசாமி வெற்றி பெற்று இப்போது வருவாய்த் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக கல்லுப்பட்டியில் உள்ள சுகாதார வளாகம் சீர்கெட்டு, கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
சுகாதார வளாகத்தின் சுற்றுச் சுவர் இடிந்துள்ளது. கதவுகள் செயலற்ற நிலையில் குழந்தைகள் கழிப்பிடத்தைப் பயன்படுத்துகின்றனர். முறையான பராமரிப்பு இல்லாததால் ஏற்படும் துர்நாற்றம் தொற்று நோயைப் பரப்பும் வகையில் உள்ளது.
சுகாதார வளாகத்திற்கு அருகிலேயே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி கடந்த ஆண்டு புனரமைக்கப்பட்டது. பின்னர் ஓராண்டு ஆகியும் இந்த மேல்நிலைத் தொட்டியில் நீர் ஏற்றுவதே கிடையாது என செட்டியபட்டி ஊராட்சி 3-ம் வட்ட உறுப்பினர் ஜி.ஜான் பீட்டர் தெரிவித்தார்.
இதேபோல் மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்துக் கொட்டுவதற்கான கூடம் அமைக்கப்பட்டும் அவற்றில் முறையாகக் குப்பைகளைப் போடாமல் தெருவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கிராம சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
இது குறித்து செட்டியபட்டி ஊராட்சி மன்றத் தலைவி லலிதா வேலு கூறியதாவது:
சுகாதார வளாகத்தை சீர்செய்வதற்கு ஊராட்சியில் போதுமான நிதி இல்லை. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுகாதார வளாகத்தை நவீனமயமாக்கிக் கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் கூறிவிட்டது.
ஆனால், இப்பகுதி மக்கள், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொது மக்களின் பங்களிப்புத் தொகையைத் தரும் நிலையில் இல்லை.
வரி வசூல் மூலம் கிடைக்கும் வருவாயைவிட ஊராட்சியின் செலவு அதிகமாக உள்ளது. எனவே ஊராட்சியின் தேவைகளை எழுதிக் கொடுத்துள்ளோம் என்றார்.
இது குறித்து அரசு அதிகாரி கூறுகையில், "ஊராட்சியின் சொத்துகளைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு ஊராட்சி மன்றத் தலைவருக்கு உண்டு. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய வளாகம் கட்டமுடியுமே தவிர, பராமரிப்பு செலவுகளைச் செய்ய முடியாது.
எனவே பராமரிப்பு செலவை ஊராட்சியின் பொது நிதியிலிருந்தோ அல்லது மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்தோ மேற்கொள்ள முடியும். இதுவரையிலும் இப்பிரச்னையை நிர்வாகத்தின் கவனத்திற்கு யாரும் கொண்டு வரவில்லை. தற்போது தெரிய வந்ததை அடுத்து ஓரிரு நாளில் சுகாதார வளாகத்தை சரி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.