திருப்பூர் : பதிவு செய்யப்பட்ட உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர் முறை குறைந்து வரும் சூழ்நிலையில், திருப்பூரில் பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான பனியன் ஜாப் ஒர்க் மற்றும் 2-ம் நிலை பனியன் உற்பத்தி நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர் முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அன்னியச் செலாவணி அதிகளவில் ஈட்டி வரும் திருப்பூரில் அதற்கு இணையான பாதிப்புகளும் தொடர்ந்து கொண்டேதான் உள்ளன. அந்தவகையில், திருப்பூரில் குழந்தைத் தொழிலாளர் முறை என்பது புற்றீசல்கள் போல் தீர்வற்ற பிரச்னையாகவே தொடர்கிறது.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தென்மாவட்ட கிராமப்புற குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்க முடியாமல் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் வேலைக்கு சேர்த்துவிடுகின்றனர். திருப்பூரிலுள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்க மாற்றுச்சான்றிதழ் கட்டாயப்படுத்தப்படுகிறது.
இதனால், வெளி மாவட்டங்களில் இருந்து வேலைக்காக குடும்பத்துடன் திருப்பூர் வருவோர் தங்கள் குழந்தைகளின் மாற்றுச்சான்றிதழைப் பெற்று திருப்பூர் பள்ளியில் சேர்க்கத் தாமதிக்கின்றனர். இதுவும் திருப்பூரில் குழந்தைத் தொழிலாளர் முறை பெருகக் காரணமாகிறது.
பனியன்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள் விதிக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுப் பனியன் உற்பத்தி நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர் முறை குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால், பதிவு செய்யப்படாமல் திருப்பூரில் இயங்கும் ஆயிரக்கணக்கான ஜாப் ஒர்க் மற்றும் 2ம் நிலை பனியன் உற்பத்தி நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர் முறை என்பது பெருகிக் கொண்டே உள்ளது என்கிறார் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் டி.விஜயகுமார்.
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அதிகாரம்..: திருப்பூரிலுள்ள மொத்த பனியன் நிறுவனங்களில் 60 சதவீதம் பதிவு செய்யப்படாத நிறுவனங்களே. 10 தொழிலாளர்களுக்கு மேலுள்ள நிறுவனங்களை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் இருந்தும் அந் நிறுவனங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. தொழிற்சாலைகள் துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து இது போன்ற விதிமுறைக்குப் புறம்பாக தொழில்புரியும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
மாணவர்களை பள்ளியில் சேர்க்க மாற்றுச்சான்றிதழ் கட்டாயமில்லை என்பது அரசு உத்தரவு. இருப்பினும், திருப்பூர் பள்ளிகளில் மாற்றுச்சான்றிதழ் கேட்டு கட்டாயப்படுத்துவதைத் தடுக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வறுமை காரணமாக குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களை அரசின் நலத்திட்டங்கள், வாரியங்களில் இணைத்து வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதும் அரசின் கடமை. அதற்கு, உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு உரிய அதிகாரம் வழங்கி வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்ப உறுப்பினர்களை அரசு நலத் திட்டங்களில் சேர்க்க முயற்சிக்க வேண்டும் என்கிறார் சேவ் தன்னார்வ தொண்டு நிறுவன இயக்குநர் ஆ.அலோசியஸ்.
சட்டம் சீர்குலைவதை தடுக்க..: மத்திய அரசு கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை இயற்றி அனைவருக்கும் 10ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி அளிப்பதை நடைமுறைப்படுத்தி வருகிறது. இருப்பினும், திருப்பூர் போன்ற குறிப்பிடத்தக்க நகரங்களில் தொடரும் குழந்தைத் தொழிலாளர் முறை, சட்டத்தின் நோக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளது. இதைக்கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் மற்றும் தொழிற்சாலை துறை அதிகாரிகளும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.