தமிழ்நாடு

மீட்கப்படுமா மாமன்னர் ராசராச சோழனின் உலோகச் சிலை?

தஞ்சாவூர்:  குஜராத் மாநிலத்தில் உள்ள மாமன்னர் ராசராச சோழனின் உலோகச் சிலையை மீட்டு, மீண்டும் தஞ்சை பெரிய கோயிலுக்குள் வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சை பெரி

ஆர்.​ ​ தங்கராஜு

தஞ்சாவூர்:  குஜராத் மாநிலத்தில் உள்ள மாமன்னர் ராசராச சோழனின் உலோகச் சிலையை மீட்டு, மீண்டும் தஞ்சை பெரிய கோயிலுக்குள் வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சை பெரிய கோயிலை எழுப்பியவர் மாமன்னர் ராசராச சோழன். அவர் வாழ்ந்த காலத்தில், பெருவுடையாரைப் பார்த்து வணங்கும் நிலையில் சுமார் ஒன்றரை அடி உயரத்திலான ராசராச சோழனின் உலோகச் சிலை பெருவுடையார் கோயில் கருவறை முன் நெடுங்காலமாக வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்தது.

தற்போது, உலகப் பாரம்பரியச் சின்னமான பெரிய கோயிலை இந்தியத் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இந்தக் கோயில் வருவதற்கு முன்னதாக மராட்டிய அரச குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது கோயிலுக்குள் இருந்த ராசராச சோழனின் உருவச் சிலை மற்றொருவர் கைக்குச் சென்றுவிட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் பெரிய கோயிலுக்குள் இருக்கும் ராசராச சோழன் சிலை கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது அல்ல என்பதும், சிலை கைமாறிய பிறகு உண்மையான சிலைக்குப் பதிலாக போலியாக உருவாக்கப்பட்ட சிலையே கோயிலுக்குள் இருக்கிறது என்பதும் கண்டறியப்பட்டது. அதன்பிறகு, சிலையை மீட்க எம்.ஜி.ஆர். மேற்கொண்ட நடவடிக்கை ஏனோ வெற்றி பெறவில்லை.

இதனிடையே, உண்மையான ராசராச சோழனின் சிலை குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கவுரம் சாராபாய் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், அருங்காட்சியக உரிமையாளர் சட்டத் திட்டங்களுக்கு உள்பட்டு ராசராச சோழன் சிலையை விலைக்கு வாங்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ராசராச சோழனால் எழுப்பப்பட்ட பெருவுடையார் கோயில் 1,000-வது ஆண்டு நிறைவு விழாவை எட்டும் நிகழ்வு தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமன்றி, உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு பெருமையளிக்கும் விஷயமாகும். இத்தகைய போற்றுதற்குரிய ராசராச சோழன், சமய ஈடுபாடு கொண்டவராக இருந்ததோடு, அடுத்த தலைமுறையினரும் தலை நிமிர்ந்து வாழும் வகையில் தமிழகக் கட்டக் கலையையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் கருவூலமாக பெரிய கோயிலைத் நமக்கு தந்தவர்.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மாமன்னர் ராசராச சோழனின் உலோகச் சிலை பெருவுடையார் கோயிலுக்குள் இல்லாமல், ஆமதாபாதில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக இருப்பது தமிழர்களுக்கு ஏற்கத்தக்கதல்ல.

எனவே, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தி தமிழன்னைக்கு மேலும் ஒரு மணிமகுடம் சூட்டி வரலாற்றில் பொன் எழுத்துகளால் பதிவு பெற்றுள்ள தமிழகம், அடுத்து, பெரிய கோயில் 1,000-வது ஆண்டு விழாவை நடத்தி வரலாற்றுப் பதிவில் மற்றொரு இடத்தையும் பெறவுள்ளது.

இந்த நேரத்திலாவது தமிழக அரசு தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, ஆமதாபாத் தனியார் அருங்காட்சியகத்தில் உள்ள ராசராச சோழனின் உலோகச் சிலையை மீட்டு, மீண்டும் பெரிய கோயிலுக்குள் வைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

கல்கோயிலையும், ராசராசனின் சிலையும் ஒருங்கே பார்க்கும்போது, 1,000-வது ஆண்டு விழா முழுத் திருப்தியுடன் நடைபெற்றதாக உணர முடியும். ராசராச சோழனின் உருவச் சிலை நமது பாரம்பரிய பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்று. அதை மீட்க வேண்டிய அவசியமும், அதற்கான காலச் சூழலும் தற்போது உருவாகியுள்ளது.

மன்னர்களின் ஆட்சி முறை, நிர்வாக முறை, வளர்ச்சிப் பணிகள் குறித்து வரலாற்றில் படிக்கும்போது அவை உண்மையாக இருந்தாலும் முழுமையாக ஏற்க மனம் மறுக்கிறது. எதையும் நேரில் பார்த்து ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஏற்பட்டுள்ள அறிவியல் யுகத்தில், ராசராச சோழன் மிகப் பிரம்மாண்டமான கோயிலை எழுப்பினார், அதில் கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம் அனைத்தும் ஒரு பெட்டகமாக அடங்கியுள்ளன என்று வரலாற்றில் படித்தால் அப்படியெல்லாம் நிகழ்ந்திருக்குமா என்ற கேள்வி எழும்.

அப்படியொரு கேள்விக்கான வாய்ப்பே இல்லாத வகையில், அனைத்துக்கும் சான்றாக இன்றைக்கும் கம்பீரமாக வானத்தைத் தொடும் அளவுக்கு கோபுரமாய் நின்று கொண்டிக்கிறது பெரிய கோயில். பெரிய கோயிலைப் பார்த்து அதிசயத்துப் போகும் மனித சமுதாயம், அதை உருவாக்கிய மன்னரின் உண்மையான உலோகச் சிலையையும் காணத் துடிக்கிறது என்பதே உண்மை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT