மாறுதல் கிடைத்தும் பணியில் சேருவதில் தாமதம்: ஆசிரியர் பயிற்றுநர்கள் கவலை
மதுரை: தமிழகத்தில், பொது மாறுதல் கலந்தாய்வில் பணி மாற்றம் பெற்ற பிறகும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியில் சேருவதில் காலதாமதமாகி வருவதால் ஆசிரியர் பயிற்றுநர்கள் கவலையடைந்துள்ளனர். தமிழ்நாடு மாநி
மதுரை: தமிழகத்தில், பொது மாறுதல் கலந்தாய்வில் பணி மாற்றம் பெற்ற பிறகும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியில் சேருவதில் காலதாமதமாகி வருவதால் ஆசிரியர் பயிற்றுநர்கள் கவலையடைந்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணியில் 2005-06-ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நேரடித் தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வட்டார வள மையங்களிலும், குறுவள மையங்களிலும் ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆவணக் காப்பக அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களில், 2010-11-ம் கல்வியாண்டில் 500 ஆசிரியர் பயிற்றுநர்களைப் பணிமூப்பு அடிப்படையில் (ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண்படி) உயர், மேல்நிலைப் பள்ளிகளில் காலியான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணி மாற்றம் செய்வதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 9-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு அவர்களது விருப்பத்தின்பேரில் பணி மாற்றம் அளிக்கப்பட்டது. கலந்தாய்வின்போது வழங்கப்பட்ட பணி மாற்றத்துக்கான ஆணையில், மாறுதல் பெற்றவரை பதிலி ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகு பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.
கலந்தாய்வில் கலந்துகொண்டு பணி மாறுதல் பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் கடந்த ஜூலை 31-ம் தேதி பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 2-ம் தேதி பணியில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட அதிகாரியின் திடீர் உத்தரவில், பதிலி ஆசிரியர் வந்த பிறகுதான் பணியில் இருந்து ஆசிரியர் பயிற்றுநர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பணி மாறுதல் பெற்ற இடங்களில் குறிப்பிட்ட தேதியில் பணியில் சேர முடியவில்லை என்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், ஏற்கெனவே அளிக்கப்பட்ட உத்தரவில் ஜூலை 31-ம் தேதி என்று தெரிவிக்கப்பட்டிருந்ததால் ஆசிரியர் பயிற்றுநர்களில் பலர் தங்களுக்கு மாறுதல் செய்யப்பட்ட சொந்த மாவட்டங்களில் தங்களது குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலர் வீடுகளையும் மாற்றிக்கொண்டுள்ளனர். தற்போது, அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவது காலதாமதம் ஆவதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், அவர்கள் பணி மாறுதல் செய்யப்பட்ட பள்ளிகளில் உள்ள பணியிடமும் வேறு ஒருவர் வருவதன் மூலம் பறிபோய்விடும் அச்சமும் ஆசிரியர் பயிற்றுநர்களிடையே ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கே.சம்பத் கூறியதாவது: ஏற்கெனவே மே மாதம் நடைபெற்ற கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்றவர்களுக்கும், கடந்த மாதம் நடைபெற்ற மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் வழங்கப்பட்ட பணி மாறுதல் ஆணையில் ஜூலை 31-ம் தேதி அவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆகஸ்ட் 2-ம் தேதி மாறுதல் பணியில் சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், எஸ்.எஸ்.ஏ. திட்ட இயக்குநரிடமிருந்து ஜூலை 30-ம் தேதி வந்த உத்தரவில், பதிலி வராமல் ஆசிரியப் பயிற்றுநர்கள் யாரும் பணியில் இருந்து விடுவிக்கப்படக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களது விடுமுறை நாளான சனிக்கிழமைகளில்கூட பணியாற்றும் அளவுக்கு அவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆண்டுக்கு 20 சனிக்கிழமைகளில் அவர்கள் பணியாற்றும் நிலையில், ஈடு செய்யும் விடுப்பும், பணப்பலனும் அளிக்கப்படுவதில்லை.
இந்நிலையில், தற்போது பணி மாறுதலிலும் காலதாமதம் ஆவது ஆசிரியர் பயிற்றுநர்களை மேலும் கவலையுறச் செய்துள்ளது. ஆகவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்றார் அவர்.