முகப்பு
தமிழ்நாடு

வெளிச்சத்துக்கு வருமா இவர்களின் வாழ்க்கை?

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் செருக்கனூர் ஊராட்சியில் உள்ள இருளர் காலனி மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ÷திருத்தணி ஒன்றியத்துக்கு உள்பட்டது செருக்கனூர் ஊராட்சி. இ

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:14 PM
பகிர்:

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் செருக்கனூர் ஊராட்சியில் உள்ள இருளர் காலனி மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

÷திருத்தணி ஒன்றியத்துக்கு உள்பட்டது செருக்கனூர் ஊராட்சி. இக்கிராமத்தில் உள்ள இருளர் காலனியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1983-ல் எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது இருளர் இன மக்களுக்கென 20 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. அப்போது குடியேறிய 40 குடும்பங்களும் போதிய இட வசதியின்றி இப்போதும் வாழ்ந்து வருகின்றனர்.

÷மேற்கூரையில் வேயப்பட்ட சீமை ஓடுகள் அனைத்தும் உடைந்தும், பாழடைந்தும் கிடக்கிறது. சுவர்கள் ஆங்காங்கே விரிசலடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

÷இதைச் சீரமைத்து தரக்கோரி மூன்று முறை முதல்வரின் தனி பிரிவிற்கும், பல முறை மாவட்ட ஆட்சியருக்கும், திருத்தணி வருவாய் கோட்ட ஆட்சியரிடமும், வட்டாட்சியர் மற்றும் ஒன்றிய ஆணையர்களிடமும் மனு கொடுத்தும் இன்று வரை எந்த ஒரு அதிகாரியும் இப்பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ளவில்லை என இருளர் மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அவ்வப்போது பெய்யும் மழை வீட்டிற்குள்ளும் ஒழுகுகிறது. இதனால் வீடுகளில் இருக்க முடியாமல் அருகிலுள்ள கோயில் சத்திரத்திலும், செருக்கனூர் கிராம பள்ளி கட்டடத்திலும் தஞ்சமடைகின்றனர் இவர்கள்.

÷இப்பகுதியில் மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டதே தவிர அதில் தண்ணீர் நிரப்பி விநியோகம் செய்ததில்லை. ஊராட்சி நிர்வாகம் சார்பில் 2 குழாய்கள் போடப்பட்டுள்ளது. அதில் வரும் குடிநீர் பழுப்பு நிறமாகவும், உப்பாகவும் உள்ளது. இதனை சமயலுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலையில் ஆசிட் போல இருக்கிறது. அதுவும் வாரத்திற்கு ஒருமுறைதான் தண்ணீர் வருமாம்.

÷குடிநீருக்காக வயல்வெளிக்குச் சென்று, 2 கி.மீ. தூரத்திலிருந்து குடங்களை சுமந்து வரவேண்டும். போதிய மின்விளக்கு வசதியும் இல்லாமல் பெரும்பாலும் இருளில் கழிகிறது இவர்களின் வாழ்க்கை.

÷வீட்டுமனை பட்டா வேண்டும், தொகுப்பு வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளாக சம்மந்தப்பட்ட துறையினரிடம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். முதியோர் உதவித்தொகை கேட்டு திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம். ஆனால் இன்று வரை யாருக்கும் வரவில்லை என்றும் கூறினர்.

÷திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் நேரில் வந்து ஆய்வு செய்தால்தான் எங்கள் பகுதிக்கு விடிவுகாலம் பிறக்கும் என்கின்றனர் செருக்கனூர் இருளர் காலனி மக்கள். ஆட்சியர் கவனிப்பாரா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.