தமிழ்நாடு

சொந்த இடமின்றி கோவை அண்ணா பல்கலை. தடைபடுகிறது ஆராய்ச்சி, விரிவாக்கப் பணிகள்

கோவை: ஒரே ஆண்டில் அறிவிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் சொந்த இடம் கிடைத்தவிட்ட நிலையில், கோவை அண்ணா தொழில்நுட்பப் பல்கலை.க்கு இடம் தேர்வு செய்வதில் இன்னும் இழுபறி நிலை நீடிக்கிறது.  தமிழக

சிவ. மணிகண்டன்

கோவை: ஒரே ஆண்டில் அறிவிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் சொந்த இடம் கிடைத்தவிட்ட நிலையில், கோவை அண்ணா தொழில்நுட்பப் பல்கலை.க்கு இடம் தேர்வு செய்வதில் இன்னும் இழுபறி நிலை நீடிக்கிறது.

 தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வந்தன. கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, நிர்வாக வசதிக்காக அண்ணா பல்கலை. பிரிக்கப்பட்டு கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் அண்ணா பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும் என்று 2006-ல் அறிவிக்கப்பட்டது. துணைவேந்தர் மற்றும் நிர்வாகப் பிரிவு அலுவலர்கள் நியமனத்துக்குப் பிறகு அண்ணா பல்கலை.க்கு இடம் தேர்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 அதைத் தொடர்ந்து 2007 பிப்ரவரில் கோவை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டனர். தொடக்கத்தில் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி

வளாகத்தில் (ஜிசிடி) பல்கலைக்கழகம் செயல்பட்டு வந்தது.

  இதற்கிடையே இடம் தேர்வு செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. பாரதியார் பல்கலை. வளாகத்தில், அண்ணா பல்கலை.க்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பேச்சு எழுந்தது. ஆனால், அதற்கு பாரதியார் பல்கலை. நிர்வாகம் ஒப்புக் கொள்ளவில்லை. ஒருகட்டத்தில் இப் பிரச்னை இரு பலகலை.களுக்கும் இடையே பனிப்போரை ஏற்படுத்தியது. இரு துணைவேந்தர்களும் இடம் ஒதுக்கீடு தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.

  பின்னர், கோவையை அருகே பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜோதிபுரத்தில் உள்ள வாடகைக் கட்டடத்துக்கு அண்ணா பல்கலை. இடம் பெயர்ந்தது.

 இதற்கிடையே கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியை, அண்ணா பல்கலை.யின் உறுப்புக் கல்லூரியாக மாற்றி கல்லூரி வளாகத்தை அண்ணா பல்கலை. வளாகமாக மாற்றுவது என்று உயர்கல்வித் துறை திட்டமிட்டது. இதற்கு ஜிசிடி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தினர். இதன் காரணமாக அம்முடிவு கிடப்பிலேயே

இருக்கிறது.

   கோவை அண்ணா பல்கலை.யின்கீழ் 3 அரசுப் பொறியியல் கல்லூரிகள், 2 அரசு உதவி பெறும் கல்லூரிகள் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர் மாவட்டங்களில் உள்ள  150-க்கும் மேற்பட்ட

பொறியியல் கல்லூரிகள் மற்றும் 15 எம்பிஏ-எம்சிஏ கல்லூரி செயல்படுகின்றன. கோவை அண்ணா பல்கலை.யில் எம்இ, எம்டெக், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளும், பகுதி நேர பிஇ படிப்பும் வழங்கப்படுகிறது.

 பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளைக் கடந்த சூழலில், நிலையான இடம் கிடைக்காதது கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கப் பணிகளுக்குத் தடையாக இருப்பதாக பல்கலை. வட்டாரங்கள் கூறுகின்றன.

 பாரதியார் பல்கலை. வளாகத்தில் 100 ஏக்கர் நிலத்தை அண்ணா பல்கலை.க்கு ஒதுக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. ஒரே வளாகத்தில்   தனித்தனி பல்கலை.கள் இயங்குவது இரு பல்கலை.களின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துக்கு ஏதுவாக இருக்காது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். 100 ஏக்கரை அண்ணா பல்கலை.க்கு ஒதுக்கும்பட்சத்தில், ஏற்கெனவே பல்கலை.க்காக ஆர்ஜிதம் செய்த நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.120

கோடியை வழங்க வேண்டும் என்று பாரதியார் பல்கலை.யின் சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ரூ.120 கோடியை வழங்கும்பட்சத்தில், அதில் பாதி தொகைக்கே வேறு இடத்தில் இடம் வாங்கிவிடலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மருதமலை சாலையில் வேளாண் பல்கலை., பாரதியார் பல்கலை., அரசு சட்டக் கல்லூரி என தொடர்ச்சியாக உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வரும்போது அண்ணா பல்கலை.யும் அதே பகுதியில் வருவது சரியாக இருக்காது என்று தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT