வேதாரண்யம் : வெள்ள பாதிப்புகளுக்கு தாற்காலிக நிவாரணங்களுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் இந்தத் தருணத்தில், நிரந்தரத் தீர்வு காணவும், பயன்படுத்த முடியாமல் வீணாகும் மழை நீரைச் சேமிக்கவும் உகந்த திட்டங்களை உருவாக்க, அரசு சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் பருவநிலை மாறுபாடுகளால் வெள்ளம், வறட்சி என மாறிமாறி ஏற்படும் இயற்கை இடர்பாடுகளை மக்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. வெள்ள பாதிப்புகளின் போது உயிரிழப்புகள் ஏற்படுவதோடு, சாலை, குடியிருப்பு, வேளாண்மை சார்ந்த வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.
வெள்ளக் காலத்தில் பாதுகாப்பு மையங்களில் தங்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் அளித்து ஆறுதல் கூறுவதும், உயிர்ச் சேதம், பயிரிழப்பு, கால்நடை, குடிசைகள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு நிவாரணங்கள் அளிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இதில், நிவாரணத் தொகையை உயர்த்துவது, அதைக் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் அளிப்பது போன்றவை மட்டுமே ஆண்டுக்கு ஆண்டு மாறுபடுகின்றன.
தாற்காலிக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் அரசு, நிரந்தரத் தீர்வுக்குரிய தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்குவதில் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களின் செயல்பாடுகளும் முழுமையான அளவில் பயன் தராமல் போவதால், வெள்ளப் பாதிப்புகள் தொடர் சம்பவங்களாகி வருகின்றன.
பல்வேறு காரணங்களால் சராசரி மழையளவு குறைந்து வருகிறது. இந்த நிலையில், வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் கிடைக்கும் குறைந்த அளவு மழைக்கே நீராதாரங்கள் நிரம்பி வழிந்து, பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதோடு, கணிசமான அளவு மழை நீரும் வீணாகி கடலுக்குள் செல்கிறது.
பல ஆண்டுகளாகவே தொடர் கண்காணிப்பை இழந்ததோடு, பராமரிப்புக் குறைபாடுகளுடன் உள்ள நீராதாரங்களின் கொள்ளளவு வெகுவாகக் குறைந்ததும், அவை ஆக்கிரமிப்புக்கு உள்ளானதுமே இதற்கு முக்கியக் கரணங்களாகக் கூறப்படுகின்றன.
பொதுவாக, நீதிமன்றங்களின் கவனத்துக்குச் சென்று, அவற்றின் உத்தரவுக்குப் பின்னரும் தீர்வு கிடைக்காத நீராதாரங்கள் தொடர்பான பிரச்னைகள் தொடர்கின்றன.
வெள்ளக் காலத்தில் அமைக்கப்படும் மாவட்ட அளவிலான வெள்ளக் கட்டுப்பாட்டு, கண்காணிப்புக் குழுக்களின் பணிகள் அனைத்தும், பாதிப்புக்கு உள்ளாகும் நேரத்தில் அவர்களுக்கு உதவும் நோக்கமுடையவை. பாதிப்புக்குப் பின்னர் அமைக்கப்படும் உயர்நிலைக் குழுக்கள் மூலம் சேத விவரங்கள் குறித்த அறிக்கைகள் பெறப்படுகின்றன.
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் நிரந்தரத் திட்டங்களை வகுக்க ஏற்றவையாக இல்லை எனவும், மேற்கொள்ளப்படும் பிற திட்டப் பணிகளும் முழுமையாகப் பயனளிப்பதில்லை எனவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
உதாரணமாக, தற்போது அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நாகை மாவட்டம், வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகள் வழியாக 7 முக்கிய வடிகால் ஆறுகள் கடலில் இணைகின்றன. இவற்றின் கழிமுகங்கள் வரையிலான பராமரிப்புக் குறைபாடுகளும், இந்த ஆறுகளில் அடர்ந்து வளர்ந்துள்ள வெங்காயத் தாமரைச் செடிகளும் வெள்ள நீர் வடிவதைத் தடுக்கிறது அல்லது தாமதிக்க வைக்கிறது.
மேலும், தலைஞாயிறு- வேளாங்கண்ணி வரையில் வடிகால் பகுதியில் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள 900-க்கும் அதிகமான இறால் பண்ணைகள், ஆறுகளின் குறுக்கேயுள்ள குழாய் தரைப் பாலங்கள் (மானங்கொண்டான் ஆற்றுக்குள் மட்டும் 9) போன்றவை இந்தப் பகுதியில் வெள்ளம் தேங்குவதற்கு முக்கியக் காரணம் என்பதை மாவட்ட நிர்வாகமே 2006-ம் ஆண்டில் உறுதிப்படுத்தியது.
இந்த பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காததால், வழக்கமான இடங்களிலேயே உடைப்புகள், சாலைகள் சேதம், போக்குவரத்து பாதிப்பு என அனைத்தும் தொடர்கின்றன.
இதற்கிடையே, இங்கு சில பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை தீர்வாக அமையவில்லை. குறிப்பாக | 11 கோடியில் வேதாரண்யம் கால்வாய் (உப்பனாறு) கரை பலப்படுத்தும் பணி 2007-ம் ஆண்டில் நடைபெற்றது. இந்தப் பணி தற்போது வெள்ள பாதிப்பை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவது மிக அவசியம் என்பதால், தாற்காலிக நிவாரணப் பணிகளுக்கான ஆய்வுகள் நடத்தப்படும் இதே வேளையில், நிரந்தரத் தீர்வுக்குரிய திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்கு ஏதுவாக உயர் அலுவலர்கள், நிபுணர்கள், விவசாய பிரதிநிதிகளைக் கொண்ட சிறப்பு குழுக்களை மாவட்டம் வாரியாக ஏற்படுத்தி, அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.