தமிழ்நாடு

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் அருகே சுற்றுலாப் பயணிகள் நெரிசலில் சிக்கித் தவிப்பு

செங்கல்பட்டு, டிச. 12: காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலுக்குச் செல்ல, சுற்றுலாப் பயணிகள் குறுகிய பாதையில் நுழைவுச் சீட்டு பெற்றுக் கொண்டு செல்ல வேண்டியுள்ளதால் நெரிசலில் சிக்கி தவித்து

செங்கை பி. அமுதா

செங்கல்பட்டு, டிச. 12: காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலுக்குச் செல்ல, சுற்றுலாப் பயணிகள் குறுகிய பாதையில் நுழைவுச் சீட்டு பெற்றுக் கொண்டு செல்ல வேண்டியுள்ளதால் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.

பல்லவர் கால சிற்பங்களுக்கு புகழ்பெற்ற மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

யுனெஸ்கோ நிறுவனத்தால் பாதுக்காக்கப்படும் கலாசார சின்னங்களுள் ஒன்றாகமாமல்லபுரம் கடற்கரைக் கோயில் திகழ்கிறது.

இக் கோயிலை சுற்றிப் பார்ப்பதற்காக வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்று வருவதற்கு நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறை கடற்கரைக் கோயிலை பராமரித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இப் பகுதியைச் சுற்றி சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் கடற்கரைக் கோயில் அருகே கடலரிப்பை தடுப்பதற்காகவும் கடல் நீர் உட்புகுவதை தடுக்கவும், பாறைகள் குவிக்கப்பட்டபோது அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவது தடை செய்யப்பட்டது.

கோயில் வளாகம் மட்டும் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் அங்கிருந்த புல்வெளியும் பரந்த மைதானமும் கடற்கரைக்குச் செல்லும் பாதையாக பயன்படுத்தப்பட்டது.

கடற்கரைக் கோயிலை சுற்றிப் பார்க்க கட்டணம் வசூல் செய்யப்பட்டதை அடுத்து சுற்றுலாப் பயணிகளில் சிலர், தூரத்தில் நின்றே கோயிலைப் பார்த்து விட்டு கடற்கரைக்குச் செல்கின்றனர்.

தற்போது இந்தப் பகுதியில் இருந்து கடற்கரைக்குச் செல்லும் வழியில் உள்ள நுழைவு வாயிலில் நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது.

தொல்பொருள் ஆய்வுத் துறை அங்குள்ள புல்வெளியை பராமரித்து வருகிறது. அந்த புல்வெளியை சுற்றுலாப் பயணிகள், நடைபாதையாகவும், வாகனங்கள் நிறுத்துமிடமாகவும், உணவு உண்ணும் இடமாக பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

தற்போது அந்த புல்வெளி இடமெல்லாம் கம்பி வலை அமைத்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளும் வியாபாரிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் அடிக்கடி இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இடநெருக்கடியான கவுன்ட்டரில் நுழைவுச் சீட்டு வாங்குவதை வெறுத்து, கம்பி வலைக்குள் நுழைந்து செல்கின்றனர்.

மேலும் நுழைவுச் சீட்டு வாங்காதவர்கள் கடற்கரைக்குச் செல்ல வேறு வழியில்லாததாலும் குறுகிய 3 அடி பாதையில் வியாபாரிகள் வியாபாரம் செய்வதாலும் புல்வெளியைச் சுற்றி போடப்பட்டுள்ள கம்பி வேலியை வளைத்தும் அதன் மீது ஏறியும் கடற்கரைக்குச் செல்கின்றனர்.

மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கூறியது: "தற்போது கடற்கரைக் கோயிலுக்குச் செல்ல 3 அடி அகலத்தில் வழியமைக்கப்பட்டுள்ளது. சாதாரண நாள்களில் கூட இங்கு எளிதில் கடந்துச் செல்ல முடியாது.

சுற்றுலா சீசன்களிலும், பண்டிகை மற்றும் விடுமுறை நாள்களிலும் இங்கு வரும் பயணிகள் கடும் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

மேலும் சுனாமி போன்ற அபாய எச்சரிக்கை நேரங்களில் குறுகிய பாதையில் இருந்து வெளியேறுவதில் சிரமம் ஏற்படும்.

இதை தவிர்ப்பதற்கு கடற்கரைக் கோயிலுக்கு சிரமம் இன்றி சென்று வர போதுமான வழியை தொல்பொருள் ஆய்வுத் துறையினர் ஏற்படுத்தித் தரவேண்டும்' என தெரிவித்தார்.

மேலும் கடற்கரைக்குச் செல்லும் பாதையில் பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில் வழியாக பயணிகள் கடற்கரைக்குச் செல்ல அனுமதிப்பதுடன் குறுகிய பாதையை அகலப்படுத்த சம்மந்தப்பட்ட துறையினர் ஏற்பாடு செய்தால் இப்பகுதியில் நெரிசலை தவிர்க்கலாம் என மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT