தமிழ்நாடு

நியாயமான ஓய்வூதியமின்றித் தவிக்கும் முன்னாள் கிராம அதிகாரிகள்

திருப்பூர்: கிராம அதிகாரிகள் பதவி ஒழிப்பு சட்டத்தால் பணியிழந்த கிராம அதிகாரிகள், அரசின் பாரபட்ச அணுகுமுறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு நியாயமான ஓய்வூதியத்தை மாநில அரசு வழங்க வேண்டுமென்று அவர்க

தமிழ்ச்செல்வன்

திருப்பூர்: கிராம அதிகாரிகள் பதவி ஒழிப்பு சட்டத்தால் பணியிழந்த கிராம அதிகாரிகள், அரசின் பாரபட்ச அணுகுமுறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு நியாயமான ஓய்வூதியத்தை மாநில அரசு வழங்க வேண்டுமென்று அவர்கள் கோருகின்றனர்.

÷ஆங்கிலேயர் காலத்திலிருந்து தமிழகத்தில் கிராமங்களை நிர்வகித்த கர்ணம், முன்சீப் பொறுப்புகளில் மாநிலம் முழுவதும் தலா 12,500 பேர் வீதம் 25 ஆயிரம் பேர் ஈடுபட்டிருந்தனர். வாரிசு அடிப்படையில் பணியாற்றிய அவர்கள் கெüரவ ஊதியமே பெற்று வந்தனர். அப்பணி கெüரவப் பணியாகவும், வரையறுக்கப்படாத பணியாக இருந்தபோதிலும், கிராம நிர்வாகத்தில் அவர்களின் பங்களிப்பு பிரதானமாக இருந்துள்ளது.

÷1980-ல் அதிமுக ஆட்சியின்போது கிராம அதிகாரிகள் பதவி ஒழிப்பு சட்டத்தின் கீழ், கர்ணம், முன்சீப் பதவிகள் நீக்கப்பட்டு, மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிய கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டதால், 25 ஆயிரம் கிராம அதிகாரிகளின் குடும்பங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இருப்பினும், நீதிமன்ற உத்தரவுப்படி, முன்பு பதவி வகித்தவர்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 5,200 பேருக்கு மட்டும் மாற்று வேலை அளிக்கப்பட்டது.

÷கிராமத்தில் மரியாதையுடனும், அதிகாரத்துடனும் வாழ்ந்த அவர்கள் பதவி இழந்ததால் பல குடும்பங்கள் நிர்கதியாகின. பாதிக்கப்பட்ட அவர்கள் அரசுப் பணி வழங்கக் கோரி தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர்.

÷பிறகு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 1989-ல் அக்கோரிக்கை ஏற்கப்பட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தகுதியான முன்னாள் கிராம அதிகாரிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் வாய்ப்பும், தகுதி குறைந்த 5,160 பேருக்கு ஊராட்சி உதவியாளர் பணியும் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தைக் கணக்கிட்டு (1961க்குப் பிந்தைய காலத்துக்கு) ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டது.

÷இருப்பினும், கெüரவ ஊதியம் பெற்று வந்தவர்கள் என்பதால், முன்னாள் கிராம அதிகாரிகளுக்கும், அவரது குடும்பங்களுக்கும் சொற்பமான ஓய்வூதியமே கிடைத்தது. தவிர, அப் பணியாளர்களின் பணிக்காலம் முழுநேர அரசுப்பணியாக கருதப்படாததால், அவர்களின் முந்தைய பணியாண்டுகளில் சரிபாதி மட்டுமே அரசால் ஓய்வூதியப் பலன்களுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

÷அதன்படி, 40 ஆண்டுகளுக்கு மேல் பணியனுபவம் பெற்றவர்களும்கூட, அரசு விதிப்படி ரூ. 1,300 மட்டுமே ஓய்வூதியம் பெற முடிந்தது. (அண்மையில் வந்த 6-வது ஊதியக்குழு பரிந்துரையால் இவர்களது ஓய்வூதியம் ரூ. 3,050 ஆக உயர்ந்துள்ளது).

÷இருப்பினும், முந்தைய பணி அனுபவத்தைக் கணக்கிடுகையில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதை அடுத்து, 10 ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றியிருப்பினும் அவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கலாம் என்று 2008ல் அரசு உத்தரவிட்டது. அதனால், 40 ஆண்டு பணிபுரிந்தவரும், 10 ஆண்டு பணிபுரிந்தவரும் ஒரே ஓய்வூதியம் பெறும் நிலை ஏற்பட்டது.

÷இதுசற்றும் நியாயமற்றது என்கின்றனர், தமிழ்நாடு ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர். அரசாணை 408-ன்படி தங்களது முழுமையான பணிக்காலத்தில் சரிபாதியை கணக்கிட்டு நியாயமான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இந்த உத்தரவு கிராம நிர்வாக அலுவலர்களுக்குப் பொருந்தாது என்று அரசு அதிகாரிகள் மற்றொரு அரசாணையைக் காட்டுகின்றனர்.

÷இதனால், 1980-ல் அரசாணையால் பதவி இழந்தவர்கள் மனிதாபிமான அடிப்படையில் ஓய்வூதியம் பெற்றும், முன்னுக்குப் பின் முரணான அரசாணைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

÷இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் பேர் இருக்கலாம். அவர்களில் ஓய்வூதியப் பலன் பெறுவோர் எண்ணிக்கை 2,500 பேர் மட்டுமே இருக்கும் என்கிறார், தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் சே.முகமதுமீரா.

÷அவர் மேலும் கூறுகையில், தங்களது கோரிக்கையை அரசு மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும். வாழ்நாள் முழுவதும் மக்கள் பணியாற்றிய தங்களுக்கு முதிய வயதில் நியாயமான ஓய்வூதியம் வழங்க மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.

÷சங்கத்தின் மற்றொரு நிர்வாகியான ஆர்.பி.எஸ்.திருவெங்கடாசலம் கூறுகையில், நாங்கள் எங்கள் வாழ்வின் பெரும் பகுதியை கிராம நிர்வாகத்துக்கும், ஓய்வூதியத்துக்கான முயற்சிகளிலும் கழித்துவிட்டோம். எங்கள் கோரிக்கையை அரசு ஏற்பதால் அரசுக்கு செலவினம் ஏற்பட்டு விடாது. எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மாநில அரசு தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.

÷கிராம நிர்வாகத்தையே தங்கள் தனிப்பட்ட தொடர்பால் கட்டுக்குள் வைத்திருந்த முன்னாள் கர்ணம், முன்சீப் உள்ளிட்ட கிராம அதிகாரிகளின் ஓய்வூதிய கோரிக்கைகள் ஏற்கப்படுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT