ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை; குழந்தைகளுக்கு உணவு இல்லை!
ஈரோடு, பிப்.12: குழந்தைத் தொழிலாளர் பள்ளிகளில், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் படி மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியம் கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாததால், இங்குள்ள குழந்தைகள் மீண்டும்
ஈரோடு, பிப்.12: குழந்தைத் தொழிலாளர் பள்ளிகளில், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் படி மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியம் கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாததால், இங்குள்ள குழந்தைகள் மீண்டும் தொழிலாளர்களாக மாறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
குழந்தைத் தொழிலாளர் முறை முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு கடந்த 1995-ல் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தை ஏற்படுத்தியது. நிறுவனங்களில் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு இத் திட்டம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள சிறப்புப் பள்ளிகளில் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் சேலம், கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, விருதுநகர் உள்ளிட்ட
17 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 534 பள்ளிகளில் சுமார் 25 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்கள் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி பெற்று
வருகின்றனர். இந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 உணவுப் படி வழங்கப்படுகிறது. இந்த உணவுப் படி கடந்த 1995-ம் ஆண்டில் திட்டம் தொடங்கப்பட்டபோது அறிவிக்கப்பட்டது.
இந்த தொகையைப் பயன்படுத்தியே முட்டை, பயறு வகைகள், சாம்பார் சாதம், புளி சாதம், தக்காளி சாதம் ஆகிய உணவு வகைகளை வாரத்தில் இரண்டு நாட்கள், பிஸ்கட், பால் மற்றும் பேரீச்சம் பழம் உள்ளிட்ட உணவு வகைகளை வாரத்தில் ஒருநாள் என ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் வழங்கவேண்டும் என்று கூறுகிறது மத்திய அரசு உணவுப் பட்டியல்.
உணவுப் பட்டியலில் உள்ள உணவுப் பொருட்களை மட்டுமே வழங்கவேண்டும் என்று பள்ளிகளைப் பராமரிக்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கண்டிப்பு காட்டுகின்றனர் அதிகாரிகள். இதனால் பொரும்பாலான தொண்டு நிறுவனங்கள் இந்தப் பள்ளிகளை பராமரிக்க முடியாது என்று ஒதுங்கிவிட்டன.
இதனால் தமிழகத்தில் உள்ள 534 பள்ளிகளில் 400 பள்ளிகள், ஆசிரியர்களின் பராமரிப்பிலேயே உள்ளன.
பணியில் சேர்ந்து 10 ஆண்டுகள் ஆனாலும், ரூ.1500 ஊதியத்திலேயே வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் இவர்கள், குறைவான நிதி ஒதுக்கீட்டில் குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியாமல் திண்டாடுகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இத்திட்டப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இந் நிலையில், குழந்தைகளுக்கு உணவு அளிக்க கடைகளில் வாங்கிய கடன் அதிகமாகி விட்டதால், வட்டிக்குக் கடன் வாங்கி இந்தக் கடனை திருப்பி செலுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தமிழக தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க மாநிலச் செயலர் எஸ். அழகுஜோதி கூறியது:
ஊதிய உயர்வு, உணவுப் படி உயர்வு, பள்ளிகளுக்கு சொந்தக் கட்டடம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, சங்க நிர்வாகிகள் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரை சந்தித்து அண்மையில் மனு கொடுத்துள்ளனர்.
பல மாவட்டங்களில் ஆட்சியர்களின் தனிக் கவனத்தினால், இத் திட்டக் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் ஆசிரியர் மற்றும் தொண்டு நிறுவனங்களின் முயற்சியின் மூலமே குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. மத்திய அரசு நிதி ஒதுக்கீடு கிடைக்கும் வரையில் கடைகளில் கடன் வாங்கி உணவு அளிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம் என்றார்.
இதுகுறித்து தொண்டு நிறுவன நிர்வாகி ஒருவர் கூறியது: தற்போதுள்ள நிலையில் ஒரு வேளை உணவுக்கு ரூ.15 ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே உணவுப் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளபடி குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியும்.
வறுமை காரணமாகவே குழந்தைகளை சிறு வயதிலேயே பெற்றோர்கள் வேலைக்கு அனுப்புகின்றனர். இதனைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம்
ஆசிரியர்களுக்கு ஊதியமும், குழந்தைகளுக்கு உணவும் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மீண்டும் இந்த குழந்தைகள் தொழிலாளர்களாக மாறும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்றார்.