தமிழ்நாடு

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை: 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

சேலம், ஜன.2: மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி வரத்து குறைந்ததால் 210 மெகாவாட் மின் உற்பத்தி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 12 மணி நேரத்துக்கு மட்டுமே நிலக்கரி இருப்ப

க. தங்கராஜா

சேலம், ஜன.2: மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி வரத்து குறைந்ததால் 210 மெகாவாட் மின் உற்பத்தி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 12 மணி நேரத்துக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதால் மின் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் எண்ணூர் (450 மெ.வா.), வடசென்னை (630 மெ.வா.), மேட்டூர் (840 மெ.வா.) மற்றும் தூத்துக்குடி (1050 மெ.வா.) ஆகிய நான்கு அனல் மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையான நாளொன்றுக்கு 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் 9 ஆயிரம் மெகாவாட் மட்டுமே இப்போது அனல், நீர் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கெனவே உள்ள ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி குறைவால் தமிழகத்தில் சென்னை தவிர பிற

மாவட்டங்களில் தினசரி இரண்டு மணி நேரம் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அனல் மின் நிலையங்களுக்கும் நாள் ஒன்றுக்கு

50 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இவை ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து ரயில் மூலமும், கப்பல் மூலமும் சென்னை,

தூத்துக்குடி துறைமுகங்களுக்கு கொண்டு வரப்படுகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் 4 யூனிட்டுகள் கொண்ட அனல் மின் நிலையம் மூலம் நாளொன்றுக்கு 840 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது ஒரு யூனிட்டில் இருந்து ஒரு நாளைக்கு 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக நாளொன்றுக்கு 14 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.

மேட்டூருக்கு சென்னையில் இருந்து தினசரி ரயில் மூலம் நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. அனல் மின் நிலையத் தேவைக்காக சுமார் 5 லட்சம் டன்கள் வரை அதாவது ஒரு மாதத்துக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், சென்னையில் மேட்டூருக்கு நிலக்கரி அள்ளி அனுப்பும் தனியார் நிறுவனத்துடன் மின்வாரியத்துக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக நிலக்கரி அனுப்புவதில் கடந்த ஒரு மாதமாக தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த தனியார் நிறுவனம், மின்வாரியத்துடனான ஒப்பந்தத்தை முறித்து விட்டது. இதனால் நிலக்கரியை அள்ளி ரயிலில் ஏற்றும் பணிக்காக மேட்டூர் மற்றும் தமிழகத்தின் அனைத்து அனல், நீர் மின் நிலையங்களில் இருந்து வெவ்வேறு பணி நிலைகளில் இருந்த ஊழியர்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டு அங்கு பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நிர்வாகத்தின் இந்த குளறுபடி காரணமாக மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரியின் இருப்பு வெகுவாகக் குறைந்தது. வெள்ளிக்கிழமை இருப்பு மேலும் குறைந்ததால் ஒரு யூனிட்டில் மின் உற்பத்தி நள்ளிரவு 12 மணி முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. சனிக்கிழமை வெறும் 20 ஆயிரம் டன் மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளது.

இதே நிலை நீடித்தால் ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு யூனிட் (210 மெ.வா) நிறுத்தப்பட்டு தமிழகத்தில் மின் தடை அதிகரிக்கும் நிலை உருவாகும் என கருதப்படுகிறது.

இது குறித்து மேட்டூர் அனல் மின் நிலைய தலைமைப் பொறியாளர் மனோகரன் கூறியது:

வட சென்னையில் நிலக்கரியை ஏற்றுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக நிலக்கரி வரத்து குறைந்துள்ளது. மேட்டூரில் ஒரு யூனிட் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் 3,500 டன் நிலக்கரி ஏற்றிய ரயில் சேலத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. அனல் மின் நிலையத்திóல் 20 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. இதை வைத்து நிலைமையைச் சமாளிப்போம். அடுத்த இரண்டு நாள்களில் நிலைமை சீரடைந்து விடும். ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட மழை, போராட்டம் ஆகியவற்றின் காரணமாக நிலக்கரி வரத்து குறைந்துவிட்டது என்றார்.

நிலக்கரியை ரயிலில் ஏற்றும் தனியார் நிறுவனத்துடன் ஒரு மாதத்துக்கு முன்பே பிரச்னை ஏற்பட்ட நிலையில் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யாததால் தான் இந்த இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT