தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோர் 62 லட்சம் பேர்!
சென்னை, ஜன. 30: தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோரின் எண்ணிக்கை 62 லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 35 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆண்டுதோறும், 10}ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் முதல் முது
சென்னை, ஜன. 30: தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோரின் எண்ணிக்கை 62 லட்சமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 35 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆண்டுதோறும், 10}ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் முதல் முதுநிலை பட்டதாரிகள், தொழிற்கல்வி தேர்ச்சி பெற்றோர் வரை ஏராளமானோர் பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த 2007}ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள ஆண்கள், பெண்களின் மொத்த எண்ணிக்கை 51.51 லட்சமாக இருந்தது (இதில் ஆண்கள் 29.30 லட்சம்; பெண்கள் 22.21 லட்சம்).
2009-ம் ஆண்டு டிசம்பர் 31}ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள உயிர் பதிவேடுகளின் விவரங்களின் படி, வேலை தேடுவோர் எண்ணிக்கை 62 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் ஆண்களை விட பெண்கள் ஓரிரு லட்சங்கள் மட்டுமே குறைவான எண்ணிக்கையில் உள்ளனர்.
பி.இ. உள்ளிட்ட தொழில் கல்வி தேர்ச்சி பெற்றோர், சட்டம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றோர், பட்டதாரி ஆசிரியர்கள், இதர கல்விதாரர்கள் உள்ளிட்டோரின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பார்வையற்றோர், காது கேளாதோர் உள்ளிட்ட கல்வியில் தேர்ச்சி பெற்று வேலை தேடும் ஊனமுற்றோர் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை எட்டியுள்ளது.
காத்திருப்போர் எண்ணிக்கையில் பிற்பட்டோர் 26 லட்சமாகவும், மிகவும் பிற்பட்டோர் 16 லட்சமாகவும், ஆதிதிராவிடர்}பழங்குடியினர் 18 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.
சென்னை, கோவை, கடலூர், மதுரை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், நாகப்பட்டினம், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வேலைதேடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனினும், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
கடந்த 2008}ல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் 9.60 லட்சம் பேர். ஆனால், இதே ஆண்டில் அரசு பணிகளில் நியமிக்கப்பட்டோர் 26,748 பேர் மட்டுமே.
முடங்கிப்போன தொழில்முறை வழிகாட்டும் பிரிவு:
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய வருவோருக்கு அடுத்து என்ன மேல் படிப்பு படிக்கலாம், அதற்கான கல்வி நிலையங்கள், வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள் குறித்து வழிகாட்ட தனி பிரிவு தொடங்கப்பட்டது.
ஆனால், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (இளைஞர் பயிற்சி), தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் திருவள்ளூர், தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இந்த வழிகாட்டும் பிரிவு இயங்கவில்லை.
பதிவு செய்து காத்திருப்போரில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தொழிற் கல்வி பயிலாதவர்கள் ஆவர். இவர்களில் 50 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
காத்திருந்து...காத்திருந்து...
இப்போதைய நிலையில் கடந்த 1981 முதல் 84 வரை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே நேர் காணல் கடிதம் அனுப்பும் நிலை உள்ளது.
பதிவு செய்து முதலாவது நேர்காணலில் பங்கேற்க குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
வயது வரம்பு கடந்ததால் 1986}ம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்தவர்களை நேர்காணலுக்கு அழைக்காமல் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது.
ஆனால், அரசின் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைவாய்ப்பு துறையில் மட்டும் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை அரசு விரைவாக நிரப்ப வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவுள்ளது.