பாடநூல் விநியோகத்தில் குளறுபடி: புத்தகம் கிடைக்காமல் திண்டாடும் மாணவர்கள்
சென்னை, ஜூலை 6: பாடநூல் விநியோகத்தில் நிலவும் குளறுபடிகள் காரணமாக, பள்ளிகள் திறந்து ஒரு மாதத்துக்குப் பிறகும், புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் திண்டாடும் நிலை உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் ச
தமிழ்நாடுபாடநூல் விநியோகத்தில் குளறுபடி: புத்தகம் கிடைக்காமல் திண்டாடும் மாணவர்கள்
சென்னை, ஜூலை 6: பாடநூல் விநியோகத்தில் நிலவும் குளறுபடிகள் காரணமாக, பள்ளிகள் திறந்து ஒரு மாதத்துக்குப் பிறகும், புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் திண்டாடும் நிலை உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் ச
சென்னை, ஜூலை 6: பாடநூல் விநியோகத்தில் நிலவும் குளறுபடிகள் காரணமாக, பள்ளிகள் திறந்து ஒரு மாதத்துக்குப் பிறகும், புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் திண்டாடும் நிலை உள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த நான்கு கல்வி வாரியங்களை இணைத்து பொதுக் கல்வி வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாடத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாடநூல் கழகம் பாடப் புத்தகங்களைத் தயாரித்துள்ளது. மேலும், பாடத் திட்டத்தை மாற்றக் கூடாது என்ற நிபந்தனையுடன் சில தனியார் நிறுவனங்களுக்கும் பாடப் புத்தகங்கள் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசு, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தங்களை பாடநூல் கழகமே வழங்குகிறது. இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளிகள் பாடநூல் கழகத்திடமிருந்தோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்தோ புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
எனினும், பாடநூல் கழகத்திடம்தான் தனியார் பள்ளிகள் பாடப் புத்தகங்களை வாங்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தப்படுவதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அரசின் நிர்பந்தத்துக்கு பணிந்து பாடநூல் கழகத்திடம் புத்தகங்களை வாங்குவதற்காக பணம் செலுத்தினாலும், மாநிலம் முழுவதும் பல பள்ளிகளுக்கு இதுவரை புத்தகங்கள் அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, பள்ளிகளில் பாடப் புத்தகங்கள் கிடைக்காததால், கடைகளில் வாங்கி பாடங்களை படிக்கத் தொடங்கலாம் என்று கடைகளுக்குச் சென்றால், அங்கும் புத்தகம் கிடைக்காத நிலை உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பாடநூல் கழக புத்தக விற்பனையாளர்கள் சங்கத் துணைத் தலைவர் கா. அப்துல் ரகுமான் கூறியதாவது:
பாடப் புத்தகங்களை விற்பனை செய்வதற்காக இதுவரை எங்களுக்கு 9.5 சதவீத கமிஷன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை விற்பனை செய்ய 5 சதவீத கமிஷன் மட்டும் வழங்க தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது.
மேலும், பள்ளிகளுக்கு பாடநூல் கழகம் வழங்கும் புத்தகத்தின் விலையைவிட எங்களுக்கு கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1-ம் வகுப்புக்கு 4 புத்தகங்கள் உள்ளன. பாடநூல் கழகத்திடம் பள்ளிகள் நேரடியாக வாங்கி, மாணவர்களுக்கு வழங்கினால் 4 புத்தகங்களின் விலை ரூ.200 மட்டுமே. ஆனால், விற்பனையாளர்களான நாங்கள் ரூ.240-க்கு விற்பனை செய்ய வேண்டும் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 6-ம் வகுப்புக்கான 5 புத்தகங்கள் பள்ளிகளுக்கு ரூ.250-க்கு வழங்கப்படுகிறது. ஆனால், விற்பனையாளர்கள் ரூ.325-க்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. எனவே,பாடநூல் கழகம் ஒரே பாடப் புத்தகத்துக்கு இரண்டு விதமான விலை நிர்ணயித்துள்ளதையும், விற்பனையாளர்களுக்கான கமிஷன் அளவை குறைத்துள்ளதையும் ஏற்க முடியாது.
ஆகவே, தனியார் விற்பனையாளர்களில் பெரும்பாலானோர் பாடநூல் கழகத்திடமிருந்து 1, 6-ம் வகுப்பு புத்தகங்களை கொள்முதல் செய்யவில்லை. இதனால்தான் கடைகளில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லை என்றார் அப்துல் ரகுமான்.
இப்பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும்; இந்தக் கல்வியாண்டில் பள்ளிகள் தொடங்கி 30 நாட்களுக்கு மேல் ஆகியும், பாடப் புத்தகங்கள் கிடைக்காமல் திண்டாடி வரும் மாணவர்களின் பிரச்னைகளை அரசு விரைவில் தீர்க்க வேண்டும் என்று பெற்றோர்களும், பள்ளி நிர்வாகிகளும் எதிர்பார்க்கிறார்கள்.