மதுரை : மதுரை நகரில் நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை சுகாதார வசதிகள் போதுமானதாக இல்லாததால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாகக் குறைந்து வருவதாக சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.
மதுரைக்கு ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் பேர் வெளியிடங்களில் இருந்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை வெளிநாட்டுப் பயணிகள் மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள மற்ற மாவட்டங்களைச் சுற்றிப்பார்க்கவும் வருகை தருகின்றனர்.
மதுரைக்கு பிரான்ஸ், ஜெர்மன், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அமெரிக்கா எனப் பல நாட்டவரும் வருகை தருகின்றனர்.
இவர்களில் 75 சதவிகிதம் பேர் மீனாட்சியம்மன் கோயில் மற்றும் மகாலைப் பார்வையிட வருவதும் தெரிய வந்துள்ளது. 2009-ல் மதுரைக்கு வந்த 75 லட்சம் பேரில் 2 லட்சம் பேர் வெளிநாட்டவர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் 25 ஆயிரம் பேர் மகால் மற்றும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்துள்ளனர். 2010-ம் ஆண்டில் ஜூலை வரை 1.50 லட்சம் பேர் மட்டுமே வருகை தந்திருப்பதாகவும், இவர்களில் ஜனவரியில் மட்டுமே சுமார் 35 ஆயிரம் பேர் வருகை தந்திருப்பதாகவும் வழிகாட்டிகள் கூறுகின்றனர். இது முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.
உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. என்றாலும் மதுரையைப் பொறுத்தவரை சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக குறைந்ததற்குக் காரணம் அடிப்படை வசதிகள் இல்லாததே என்கிறார்கள் டிராவல்ஸ் அதிபர்கள்.
மதுரை நகரில் மீனாட்சியம்மன் திருக்கோயில் மற்றும் திருமலை நாயக்கர் மகால் ஆகிய இரு இடங்களையே வெளிநாட்டவர் அதிகம் பார்க்க விரும்புகின்றனர். ஆனால், அங்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அவசர இயற்கை உபாதைக்குக் கூட கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் அப்பகுதியில் செய்து தரப்படவில்லை. இதனால், அவசரத் தேவை எனில் வெளிநாட்டவர் தாங்கள் தங்கியிருக்கும் விடுதி அறைகளுக்கே திரும்பிவரும் நிலை உள்ளதாகக் குறைபட்டுக்கொள்கின்றனர்.
இதுபோலவே, காந்தி மியூசியத்துக்குச் செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் கழிப்பறை உள்ளிட்டவை தரமான வகையில் செய்துதரப்படவில்லை என்ற புகாரும் கூறப்படுகிறது.
மேலும் மதுரை நகரில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகள், சாலை பள்ளங்கள், கழிவுநீர்த் தேக்கத்தால் ஏற்படும் சுற்றுப்புறச் சுகாதாரச் சீர்கேடுகள் ஆகியவற்றைப் பார்க்கும் வெளிநாட்டுப் பயணிகள் மறுமுறை மதுரை வருவதற்குத் தயக்கம் காட்டுவதாகவும் தெரியவருகிறது.
சுற்றுலாத் துறை சார்பில் இலவசமாக சுற்றுலா வழிகாட்டி தகவல்கள், விவர அட்டைகள் மற்றும் ரூ.10 கட்டணத்தில் தமிழக சுற்றுலாத்தள வரைபடம் என பல்வேறு வசதிகளைச் செய்து தந்தாலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தாதவரை மதுரைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரச்செய்வது கடினம் என்பதும் சுற்றுலாப் பயணிகளின் கருத்தாக உள்ளது.
இதுகுறித்து மதுரைக்கு வந்துள்ள நெதர்லாந்தைச் சேர்ந்த மேரி, மரியா ஆகியோரிடம் கேட்டபோது, மதுரை புராதன நகரம் என்கிறார்கள். ஆனால், பெரும்பாலான இடங்களில் சுகாதாரம் மிக மோசமாக உள்ளது. இதனால் உடல்நலம் பாதிக்கும் என்ற அச்சமும் உள்ளது என்றனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜிடம் கேட்டபோது, மாவட்டத்தில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் முதல்கட்டமாக புறநகரில் கிராமந்தோறும் தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் தூய்மைப்பணி தொடங்கப்பட்டுள்ளது. நகரங்களிலும் இப்பணி மேற்கொள்ளப்படும். குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை சுகாதார வசதிகள் செய்துதரப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.