தமிழ்நாடு

ஸ்ரீ சந்தான ராமசுவாமி கோயில் திருத்தேர் இயக்கப்படுமா?

நீடாமங்கலம்  : ஐம்பது ஆண்டுகளாக இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நீடாமங்கலம் ஸ்ரீ சந்தான ராமசுவாமி கோயிலின் திருத்தேரை வரும் ராம நவமி பெருவிழாவின் போது  இயக்குவதற்கு தேவையான உரிய நடவடிக்கைகளை மாந

எஸ். சந்தானராமன்

நீடாமங்கலம்  : ஐம்பது ஆண்டுகளாக இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நீடாமங்கலம் ஸ்ரீ சந்தான ராமசுவாமி கோயிலின் திருத்தேரை வரும் ராம நவமி பெருவிழாவின் போது  இயக்குவதற்கு தேவையான உரிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் பிரதாப சிம்ம மகாராஜாவால் கி.பி. 1761-ல்  திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் சந்தான ராமசுவாமி கோயில் கட்டப்பட்டது. பிரதாப சிம்ம  மகாராஜாவும், அவருடைய மனைவி யமுனாம்பாளும்  நீண்ட காலம் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தனராம். ஸ்ரீ ராமரை வழிபட்டு, அதனால் இந்தத்  தம்பதியினர் குழந்தைப் பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, மகாராஜா இந்தக் கோயிலைக் கட்டினாராம். கோயிலின் எதிரே அழகிய திருக்குளம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது.

ராம நவமி பெரு விழாக் காலங்களில் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் வலம் வரும் வகையில், அழகிய திருத்தேர் ஒன்றும் வடிவமைக்கப்பட்டது.

மகாராஜா ஆட்சி செய்த காலத்திலேயே இந்தத் தேரில் ராமாயண கதாபாத்திரங்களைச் சித்திரிக்கும்  அழகிய சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாடுடன் உருவாக்கப்பட்டிருந்தன. ராம நவமி பெருவிழாவின்  எட்டாம் நாளில் திருத்தேரில் சீதா, லட்சுமணன், ஹனுமன் சமேதராக ஸ்ரீ சந்தான ராமசுவாமி  எழுந்தருளி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பு செய்வது வழக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்ததாம்.

ஆனால், பல்வேறு காரணங்களால் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோயில் திருத்தேர் ஓடாமல், நிறுத்தியே வைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கோயில் ஆணையர் நல நிதி ரூ. 7 லட்சத்தில் திருத்தேர் திருப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு,  அண்மையில் பணிகள் நிறைவு பெற்றன. இதில் தேருக்கான இரண்டு அச்சுகளும், 4 சக்கரங்களும் திருச்சி பெல் நிறுவனத்தின் மூலம் பொருத்தப்பட்டுள்ளன. தேர் சீரமைப்புப் பணியில் தேரில் உள்ள சிற்பங்களைப் புதுப்பிக்க வேண்டியது மட்டுமே எஞ்சியுள்ள பணி. இதற்குத் தேவையான நிதி அரசிடமிருந்து கிடைக்கப் பெறாததாலேயே மீதமுள்ள பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின்போது தேர் மண்டபம், திருக்குளத்தின் வடகரை சுற்றுச் சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது.

இந்த மண்டபத்தைக் கட்டித் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேரில் உள்ள சிற்பங்களை புதுப்பித்துத் தரவும் தேவையான நிதியை அரசு விரைந்து ஒதுக்கி, பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

50 ஆண்டுகளாக ஓடாமல் இருக்கும் தேரை இந்த ஆண்டிலாவது முழுவதுமாகச் சீரமைத்து, இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே பக்தர்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

கேரளத்தை மாற்ற முடிந்தால், மேற்கு வங்கத்தை ஏன் மாற்ற முடியாது? உமர் அப்துல்லா

தினமணி இணையதளத்திற்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கிய நேர்காணல்

நமக்கான வாகனம் நம்மருகே வந்துவிட்டது: ராமதாஸ்

இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT