முகப்பு
தமிழ்நாடு

சுயநிதி எம்.பி.பி.எஸ். அரசு இட கட்டணம் உயர்வு

சென்னை, ஜூலை 15: சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கான கட்டணத்தை அதிகபட்சம் ரூ.2.5 லட்சமாக  நீதிபதி குழு உயர்த்தியுள்ளது.   கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:43 PM
பகிர்:

சென்னை, ஜூலை 15: சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கான கட்டணத்தை அதிகபட்சம் ரூ.2.5 லட்சமாக  நீதிபதி குழு உயர்த்தியுள்ளது.

  கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி, மதுராந்தகம் அருகே உள்ள ஸ்ரீ கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி என அரசு ஒதுக்கீட்டுக்கு எம்.பி.பி.எஸ். இடங்களை அளிக்கும் 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

புதிய கட்டணம் என்ன? தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். கட்டணத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் மாற்றம் இருக்காது என தமிழக அரசு அறிவித்தது.

எனினும் நீதிபதி பாலசுப்பிரமணியன் குழுவிடம் மேலே குறிப்பிட்டுள்ள சில சுயநிதி மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். ஆண்டுக் கட்டணத்தை அதிகபட்சம் ரூ.2.5 லட்சமாக உயர்த்துமாறு கோரிக்கை விடுத்தன.

  இதையடுத்து கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி, மதுராந்தகம் அருகே உள்ள ஸ்ரீ கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.2.25 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது; கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.2.3 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

  மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டு  எம்.பி.பி.எஸ். ஆண்டுக் கட்டணம் ரூ.2.5 லட்சத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

இதே போன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டு ஆண்டு எம்.பி.பி.எஸ். கட்டணம் ரூ.1.3 லட்சத்தில் மாற்றமில்லை.

3 புதிய சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்:

சென்னை வண்டலூர் அருகே தாகூர் மருத்துவக் கல்லூரி, சென்னை திருவேற்காடு அருகே ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர் அருகே டி.டி.நாயுடு மருத்துவக் கல்லூரி ஆகிய 3 புதிய சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு நடப்புக் கல்வி ஆண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ். படிப்பில்  மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

  அரசு ஒதுக்கீட்டுக்கு எம்.பி.பி.எஸ். இடம் அளிக்கும் வகையில் சேலத்தில் ஸ்ரீ விநாயகா மிஷன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஸ்ரீ அன்னபூரணி மருத்துவக் கல்லூரியை இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டுச் சென்றுள்ளனர். இந்தக் கல்லூரிக்கும் விரைவில் ஒப்புதல் கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இத்தகைய புதிய சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கான கட்டணமும் ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது. எனினும் இந்தப் புதிய சுயநிதி கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கான கட்டணத்தை நீதிபதி குழு விரைவில் முடிவு செய்து அறிவிக்கும்.

சுயநிதி பி.டி.எஸ். கட்டணம் எவ்வளவு? சென்னை பாரிமுனையில் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். ஆண்டுக் கட்டணம் ரூ.8,495தான். ஆனால், இந்த அரசு கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால், பி.டி.எஸ். படிக்க விரும்பும் மாணவர்கள் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் நிலை உள்ளது.

சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடத்துக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.82 ஆயிரத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →