அரக்கோணம் அருகே தனியார் மணல் கிடங்குகள்!
அரக்கோணம் : வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே அரசுக்கே தெரியாமல் சுமார் ஐந்து இடங்களில் மணல் கிடங்குகளைத் தனியார் அமைத்துள்ளனர். இதை அறிந்த வருவாய்த்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரக்கோணத்தை அடுத்
அரக்கோணம் : வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே அரசுக்கே தெரியாமல் சுமார் ஐந்து இடங்களில் மணல் கிடங்குகளைத் தனியார் அமைத்துள்ளனர். இதை அறிந்த வருவாய்த்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரக்கோணத்தை அடுத்த வளர்புரம், கிருஷ்ணாபுரம், கீழாந்தூர், பள்ளியாங்குப்பம் பகுதிகள் வழியே நந்தியாறு செல்கிறது. இந்த ஆற்றில் நூற்றுக்கணக்கான லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் மணல் கடத்தப்பட்டு வருகிறது.
அரக்கோணம் வருவாய்த்துறையினர் அவ்வபோது அந்த இடங்களுக்குச் சென்று மணல் கடத்தப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதில் அரசு அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக அறிந்த அப்பகுதி கிராம மக்கள் கடந்த பல மாதங்களாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறையின் உள்ளுர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனுக்களை தொடர்ந்து அனுப்பி வருகின்றனர்.
இந் நிலையில், அப்பகுதிக்கு அரக்கோணம் வட்டாட்சியர் பழனிவேலு தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். ஐந்து இடங்களில் இருந்த மணல் கிடங்குகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பிலான இக் கிடங்குகளில் ஆற்றுமணல் சேமித்து வைக்கப்பட்டு சென்னை மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு லாரிகள், டிப்பர்கள் மூலம் அனுப்பப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இதனால் அரசுக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் அரசுக்குச் சொந்தமான குவாரி இல்லாததால் இந்த தனியார் குறிப்பாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கடந்த பல மாதங்களாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணலை அனுப்பி லாபம் பெற்றுள்ளனர்.
இதையடுத்து, பள்ளியாங்குப்பம் கிராமத்தில் இருந்த ஐந்து மணல் கிடங்குகளை பறிமுதல் செய்வதாக அதிகாரிகள் திங்கள்கிழமை அறிவித்தனர். அதில் 60 யூனிட் மணல் இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
ஆனால், செவ்வாய்கிழமை அப்பகுயில் இருந்த மணலை லாரிகளில் வேறு இடத்திற்கு மாற்றும் பணி நடைபெறுவதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவோ, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவோ வருவாய்த்துறையிடம் இருந்து தகவல் இல்லை.