தொடரும் ரேஷன் அரிசி, கலர் டி.வி. கடத்தல் வருவாய்த்துறை சோதனைச் சாவடி அமைக்கப்படுமா?
போடி: தேனி மாவட்டம், போடியிலிருந்து கேரளப் பகுதிக்கு ரேஷன் அரிசி, இலவச கலர் டி.வி., மணல் உள்ளிட்ட பொருள்கள் தொடர்ந்து கடத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், போடி மெட்டுப் பகுதியில் வருவாய்த்துறை
போடி: தேனி மாவட்டம், போடியிலிருந்து கேரளப் பகுதிக்கு ரேஷன் அரிசி, இலவச கலர் டி.வி., மணல் உள்ளிட்ட பொருள்கள் தொடர்ந்து கடத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், போடி மெட்டுப் பகுதியில் வருவாய்த்துறையினர் சோதனைச் சாவடியை அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
போடி பகுதி கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள பகுதியாகும். இப்பகுதியிலிருந்து தினசரி அரசு பஸ், தனியார் வேன், ஜீப், ஆட்டோ, லாரிகளில் ரேஷன் அரிசி, இலவச கலர் டி.வி.க்கள், ஆற்று மணல் கேரள மாநிலத்துக்குக் கடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தடுக்க முடியாமல் வருவாய்த்துறையினர் திணறி வருகின்றனர். கேரள எல்லைக் கிராமமான போடிமெட்டு மலைக் கிராமத்தில் கேரள அரசின் சார்பில் வருவாய்த்துறை, வனத்துறை, விற்பனை வரித்துறை, காவல்துறை ஆகியவற்றின் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழக அரசின் சார்பில் போடிமெட்டு மலைக் கிராமத்தில் எந்தத் துறையும் சோதனைச் சாவடியை அமைக்கவில்லை.
இதனால் கடத்தல்காரர்கள் தொடர்ந்து ரேஷன் அரிசி, இலவச கலர் டி.வி.களை கடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் வருவாய்த் துறையினர் மெத்தனமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கேரளப் பகுதிக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி, கலர் டி.வி.களை சில நேரங்களில் போடி வருவாய்த்துறையினர் பிடிக்கின்றனர். ஆனால், அவற்றைக் கடத்துவோரை பிடிப்பதில்லை.
கம்பம் மெட்டு, குமுளி பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் முறையாக சோதனை செய்து, அரிசி, கலர் டி.வி.களை கடத்துபவர்களைக் கைது செய்கின்றனர். ஆனால், போடி பகுதியில் மட்டும் கடத்தல்காரர்கள் எளிதில் சிக்குவதில்லை. அரிசி கடத்தும்போது, கலர் டி.வி.களையும் கடத்துகின்றனர். கடத்தப்படும் கலர் டி.வி. கேரளத்தில் யாருக்கு வழங்கப்பட்டது என்பதைக் கண்டறிந்தாலே, அவற்றை கடத்துவது யார் என்று எளிதாகக் கண்டறிய முடியும்.
ஆனால், வருவாய்த் துறையினர் இதனைக் கண்டு கொள்ளாதது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
போடிமெட்டு மலையிலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் முன்னதாகவே உள்ள முந்தல் கிராமத்தில், காவல்துறை மற்றும் வனத்துறை சார்பில் மட்டும் ஒப்புக்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறை சோதனைச் சாவடியில் குற்றவாளிகள், சந்தேகப்படும் நபர்கள் மட்டுமே சோதனையிடப்படுகின்றனர். அரசு பஸ்களில் அதிகமாக சோதனை செய்வதில்லை.
இந்நிலையில், சனிக்கிழமை போடி முந்தல் சோதனைச் சாவடியில் கேட்பாரற்றுக் கிடந்த 7 மூட்டை ரேஷன் அரிசி, 3 கலர் டி.வி.களை போடி வட்டாட்சியர் சு. ராஜசேகரன் கைப்பற்றினார். ஆனால், அவற்றைக் கடத்தி வந்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து வட்டாட்சியர் கூறும்போது, அரசு பஸ்களில்தான் அதிகமாக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது, போக்குவரத்துக் கிளை மேலாளர்தான் இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இப்பகுதியில் வருவாய்த்துறையினர் சோதனை சாவடி அமைத்தாலே அனைத்து வாகனங்களையும் முறையாகச் சோதனையிட்டு அரிசி, கலர் டி.வி., மணல் கடத்தலைத் தடுக்க முடியும்.
ஆனால், வருவாய்த் துறையினரின் அலட்சியப் போக்கால் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் நிலையில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கடத்தல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.