தருமபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற புகார் வலுத்து வருகிறது.
ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு கர்நாடகம், கேரளம், ஆந்திரம் மற்றும் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
ஒகேனக்கல்லில் பரிசல் சவாரி, எண்ணெய் மசாஜ் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை. நீர்வீழ்ச்சி மற்றும் காவிரி ஆற்றில் குளிப்பதற்கும், பரிசலில் செல்வதற்கும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இங்கு வருகின்றனர்.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் ஒகேனக்கல் அருகேயுள்ள மணல் மேடு, சத்திரம், மாறுகொட்டாய், ஆழம்பாடி ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றில் குளித்தவர்களில் சுமார் 21 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். மேலும், அண்மையில் பாதுகாப்பு இல்லாமல் சென்ற பரிசல் பயணத்தில் 4 பேர் இறந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
ஒகேனக்கல்லுக்கு வரும் வழியில் உள்ள பாதுகாப்பற்ற ஆழம்பாடி, ஊட்டமலை போன்ற பகுதிகளில் மது அருந்திவிட்டு குளிப்பவர்கள்தான் ஆற்றில் அடித்து செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் மாவட்ட நிர்வாகம் 314 பரிசல் ஓட்டிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஒகேனக்கல்லில் பயன்படுத்தப்படும் பரிசல்கள் டிப்போ என்ற வகையை சேர்ந்தது. இவை ஆரம்ப காலத்தில் மீனவர்கள் பயன்படுத்திய பரிசல் வகையைச் சார்ந்தது. இப் பரிசல் மூங்கிலால் செய்யப்பட்டு அதன்மேல் எருமைத் தோல் அல்லது மாட்டுத் தோல் போர்த்தப்பட்டு தார் ஊற்றப்படுகிறது. இப்பரிசல்களின் ஆயுள் காலம் சராசரியாக 2 ஆண்டுகள். ஆனால், மூங்கிலின் உறுதித்தன்மை 6 மாதங்களிலிருந்து குறையத் தொடங்கும் என்கிறார் 20 ஆண்டுகளாக பரிசல் மற்றும் கட்டுமரங்கள் செய்யும் மேட்டுரை சேர்ந்த ராமன்.
இப் பரிசல்கள் பாறைகளின் மீது மோதினால் எளிதில் கிழியும் தன்மை கொண்டது. எனவே, பரிசல் விபத்துகளை தவிர்க்கவும், கூடுதல் பயணிகளை ஏற்றி செல்லவும் எப்ஆர்பி பரிசல்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்க்கின்றனர்.
இப் பரிசலில் அதிகபட்சமாக 7 பேர் வரை செல்லலாம். மேலும் பரிசலின் இருபுறங்களிலும் நைலான் கயிறுகளால் பாதுகாப்பு பெல்ட்கள், பிடிப்பான்கள் அமைக்கப்பட்டிருக்கும். பரிசலின் அடியில் 2 பைபர் லேயர் அமைக்கப்பட்டுள்ளதால் பாறைகளின் மீது மோதும்போது பரிசல்கள் கிழியாது என்கின்றனர்.
மேலும், பரிசல்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பெயர் மற்றும் முகவரி குறித்த பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது விபத்துக் காலங்களில் தகவல் பரிமாற்றத்துக்கு உதவியாக இருக்கும் என்கின்றனர்.
ஆழம்பாடி, ஊட்டமலை, மணல்திட்டு, மாறுகொட்டாய் ஆகிய பகுதிகளில் ஆற்றின் ஆழம் அதிகமாகவும், நீரின் வேகம் அதிகமாகவும் உள்ளதால், ஆற்றில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் அடித்துச் செல்லப்படுகின்றனர். இதனால், இப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதித்து அபாய எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும். மேலும், பாதுகாப்புக்காக ஊர்காவல் படையினரை ஈடுபடுத்த வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
பரிசல்களின் தரம்: விரைவில் ஆய்வு
ஒகேனக்கல்லில் உள்ள பரிசல்களின் தரம் குறித்து மீன் வளத் துறை அதிகாரிகள் விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் பெ. அமுதா கூறினார்.
பாதுகாப்பான பைபர் பரிசல்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பாதுகாப்பற்ற பகுதிகளில் ஆற்றில் குளிப்பவர்களைத் தடுக்க பாதுகாப்பு பணியில் ஊர்காவல் படையினர் மற்றும் ரோந்துப் பணியில் போலீஸôர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பரிசல் ஓட்டிகள் விதிமுறை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒகேனக்கல்லில் உள்ள டாஸ்மாக் கடையை ஊட்டமலைக்கு மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டுவருகிறது என்று ஆட்சியர் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கூடுதல் லைஃப்ஜாக்கெட் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமு கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.