தமிழ்நாடு

நூற்றாண்டு கண்ட கோவை மருத்துவமனையின் அவலம்: நோயாளிகளே பாய் கொண்டு வரவேண்டும்

கோவை : நாளுக்கு நாள் பெருகும் நோயாளிகளின் எண்ணிக்கை, போதிய படுக்கை இல்லாததால் அவதி, வசதிகள் குறைந்த மருத்துவத் துறைகள் என அவசர சிகிச்சைக்கு காத்திருக்கிறது நூறாவது ஆண்டில் வெற்றி நடை போட்டுக்  கொண்டிர

சிவ. மணிகண்டன்

கோவை : நாளுக்கு நாள் பெருகும் நோயாளிகளின் எண்ணிக்கை, போதிய படுக்கை இல்லாததால் அவதி, வசதிகள் குறைந்த மருத்துவத் துறைகள் என அவசர சிகிச்சைக்கு காத்திருக்கிறது நூறாவது ஆண்டில் வெற்றி நடை போட்டுக்  கொண்டிருக்கும் கோவை அரசு மருத்துவமனை.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1909 ஜூலை 4-ம் தேதி இம் மருத்துவமனை துவங்கப்பட்டது.

ஆனால், காலப் போக்கில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப இங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இங்கு வரும் நோயாளிகளைச் சமாளிப்பது மருத்துவமனைக்கு பிரசவ வேதனையாக இருக்கிறது.

அதிகரிக்கும் நோயாளிகள் கூட்டம்: கோவை மட்டுமின்றி அருகே உள்ள திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இருந்தும் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகத் தினமும் வந்து செல்கின்றனர். நாளொன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், 1,200-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.

இம் மருத்துவமனையில் இதய சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, எலும்பு முறிவு, கண் மருத்துவம், குழந்தைகள் நலம், அவசர சிகிச்சைப் பிரிவு உள்பட 25-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. ஆனால், பெரும்பாலான துறைகளில் வசதிகள் இன்னும் தேவை என்ற நிலையிலேயே இருக்கிறது.

சில கோடிகளில் நிவர்த்தி செய்ய வேண்டிய தேவைகள் கிடப்பில் போடப்பட்டதால்  இதய அறுவைச்சிகிச்சை போன்ற முக்கிய சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று வழிகாட்டும் துறையாக மாறி வருகிறது கோவை அரசு மருத்துவமனை.

நெருக்கடியில் சிகிச்சைப் பிரிவுகள்: மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், படுக்கை வசதிக்கும் அதிகமாக உள் நோயாளிகளை அனுமதிக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது. குறிப்பாக, பிரசவ வார்டு, எலும்பு சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் நோயாளிகளைத் தரையில் படுக்க வைக்க வேண்டிய நிலை இருக்கிறது. சில நேரங்களில் நோயாளிகளுடன் வருவோர் பாய் கொண்டுவரும் காட்சியையும் காண முடிகிறது.

நூற்றாண்டு விழா:



அண்மைக் காலமாக அரசு மருத்துவமனையின் தேவைகள் குறித்து பேசும்போதெல்லாம் நூற்றாண்டு விழாவையொட்டி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதில் அனைத்து வசதிகளும் பூர்த்தி செய்யப்படும் என்கின்றனர். ஆனால், நூற்றாண்டு விழா பற்றிய பேச்சே இல்லாமல் போய்விட்டது.

நூற்றாண்டு விழாவுக்காக ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டது. 2009-2010-ல் நூற்றாண்டு விழா கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. இக் குழு ஓரிரு முறை கூடிக் கலைந்ததோடு சரி, நூற்றாண்டு விழாவில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

மருத்துவமனைக்குத் தேவையான வசதிகள் குறித்து திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எவ்வித நிதி ஒதுக்கீடும் இதுவரை அரசு மருத்துவமனைக்குக் கிடைக்கவில்லை.

நடவடிக்கை எடுக்கப்படுமா?: ஏழை மக்கள் நேரடியாகப் பயன்பெறக் கூடிய அத்தியாவசியத் தேவையான அரசு மருத்துவமனைக்கு எவ்வித நிதியும் ஒதுக்கவில்லையே என இங்கு வரும் நோயாளிகள் ஆதங்கப்படுகின்றனர்.

அரசு மருத்துவமனையின் நூற்றாண்டு விழா அதையொட்டி மேம்படுத்த உள்ள வசதிகள் குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் கோவைவாசிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT