தமிழ்நாடு

மந்தகதியில் நான்கு வழிச் சாலைப் பணிகள்

கரூர் :  திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதால், பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் போக்குவரத்து நேரமும் ஒரு மணி நேரம் கூடுதல

சா. ஜெயப்பிரகாஷ்

கரூர் :  திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதால், பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் போக்குவரத்து நேரமும் ஒரு மணி நேரம் கூடுதலாகி மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது.

  பாஜக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தங்க நாற்கரச் சாலைத் திட்டம் தில்லியில் அறிவிக்கப்பட்டு, வட மாநிலங்களின் சாலைகள் படங்களில் ஒளிர்ந்தபோது இந்தச் சாலை இங்கு வராதா என்ற ஏக்கம் திருச்சி, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு இருந்ததென்னவோ உண்மைதான்.

  ஆனால், திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் தொடங்கி சில ஆண்டுகளாகியும் ஆமை வேகத்தில் நடைபோடுவதால், எப்போதுதான் முடியுமோ என்ற ஏக்கம் ஏற்பட்டுள்ளது.

   திருச்சியிலிருந்து புறப்பட்டால், சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையப் பகுதியிலிருந்து காவல்காரன்பாளையம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வலதுபுறச் சாலை மட்டும் தார்ச் சாலையாகி இருக்கிறது. இடதுபுறச் சாலை மண் நிரப்பப்பட்டதோடு நிற்கிறது.   

அதேபோல, அரும்புகழ் நகர் அருகேயிருந்து ராமகிருஷ்ணாகுடிலின் தொழில்சேவா மையம் வரையும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு பக்கச் சாலை மட்டுமே நிறைவடைந்துள்ளது. மேலும், பேட்டைவாய்த்தலை நகருக்கு முன்னதாகவும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பணி முடிந்த அழகான தார்ச் சாலை இருக்கிறது.

   அதன்பிறகு, ஏறத்தாழ கரூரை நெருங்கிய பிறகுதான், குறிப்பாக மாயனூரைத் தாண்டி புலியூருக்கும் முன்னதாக சில கிலோ மீட்டர் தொலைவுக்கு பணி நிறைவடைந்த நல்ல சாலையில் பயணிக்க முடிகிறது. இடையே, திருச்சி மாவட்ட எல்லையான மருதூரிலிருந்து வேறு வழியெடுத்துப் பிரியும் புதிய பாதை குளித்தலை நகரைத் தாண்டி திம்மாச்சிபுரம் அருகே வழக்கமான சாலையுடன் இணைகிறது. அநேகமாக இந்தப் பாதை தார்ச் சாலையாகி முடிவடைந்ததாகக் கருத முடிகிறது.   மற்றபடி, விட்டுப்போன ஒவ்வொரு பகுதியும் வெள்ளைநிற அழுக்கை உடலில் அப்பச் செய்யும் குண்டும் குழியுமான சாலைகள். இவை தவிர, நான்கு வழிச் சாலைக்கான எந்த அறிகுறியுமே இல்லாமல் காணப்படும் பிட் சாலைகளும் இடையிடையே உள்ளன.

வித்தியாசம்:

  அதேபோல, கரூர் மாவட்ட எல்லையில் மாயனூரிலிருந்து புலியூருக்கு முன்பு வரை கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள சாலைக்கும், திருச்சி மாவட்ட எல்லையில் ஒரு பகுதி நிறைவடைந்த சாலைப் பகுதிகளுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.  நான்கு வழிச் சாலைக்குரிய அம்சங்கள் பல இடங்களில் விடுபட்டிருக்கின்றன. குறிப்பாக, மாயனூர்- புலியூர் வரையிலான சாலையில், சாலையைப் பிரிக்கும் பூங்காவுடன் கூடிய நடுப் பகுதி (சென்டர் மீடியன்) அமைக்கப்பட்டிருக்கிறது. இரு பகுதியிலும் தலா இரு பேருந்துகள் வசதியாகச் செல்லும் வகையில் அகலமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

   ஆனால், ஒட்டுமொத்த திருச்சி- கரூர் நான்குவழிச் சாலையில் இந்த ஓர் இடத்தைத் தவிர வேறெங்கும் இந்த நான்குவழிச் சாலைக்கான அம்சத்தைக் காண முடியவில்லை. அகலம் குறைந்தும், சாலையைப் பிரிக்கும் நடுப் பகுதி அமைக்கப்படாமலும் வடிவமைக்கப்படுவதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

கூடுதலாக ஒரு மணி நேரப் பயணம்:

      திருச்சியிலிருந்து கரூர் செல்ல நான்கு வழிச் சாலைப் பணிகள் தொடங்குவதற்கு முன்பு, சரியாக இரண்டு மணி நேரம்- வேகமாகச் செல்லும் பேருந்துகள்- இரவு நேரப் பேருந்துகள்- தொலைவிடப் பேருந்துகள் என்றால் ஒன்றரை மணி நேரம் போதுமானதாக இருந்தது.

   ஆனால், இப்போது திருச்சியிலிருந்து கரூர் செல்ல சாதாரணமாகவே இரண்டரை மணி நேரமும், சில நேரங்களில் மூன்று மணி நேரமும் ஆகிறது. அத்துடன் குழிகளில் விழுந்து எழுந்து பயணிப்பதால் கூடுதல் போனஸôக உடல் அலுப்பும்.

அறிவிப்புப் பலகை இல்லை:

அரசுக் கட்டுமானப் பணிகள் எங்கு நடைபெற்றாலும், அந்தப் பணியின் பெயர், மொத்த மதிப்பீடு, ஓப்பந்ததாரரின் பெயர், பணி நிறைவடையும் காலம் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையில் படும்படியாக அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது. ஆனால், திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் எங்கும் அறிவிப்புப் பலகை காணப்படவில்லை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT