கோவை, மார்ச் 25: கோவை குறுந்தொழில்கூடங்களில் முதல்முறையாக வெளிநாட்டு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. ஆனால், தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
கோவை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் குறுந்தொழில்கூடங்கள் இயங்குகின்றன. உள்நாட்டில் இயங்கும் பெருந்தொழில்
நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து குறுந்தொழில்கூடங்கள் ஜாப் ஆர்டர்களை நேரடியாகப் பெற்று வருகின்றன.
ஆனால், முதல்முறையாக கடந்த 3 மாதங்களாக குறுந்தொழில்கூடங்ளுக்கு வெளிநாடுகளில் இருந்து நேரடியாக ஆர்டர்கள் நேரடியாக கிடைத்து வருகின்றன. உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.
சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் சிறு, குறுந்தொழில்நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், அங்குள்ள பெருந்தொழில்நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் கிடைப்பதில்லை. இதைத்தொடர்ந்து இணையதளம் வழியாக இந்தியாவில் உள்ள குறுந்தொழில் நிறுவனங்களை, வெளிநாட்டுத் தொழில்நிறுவனங்கள் தொடர்புகொண்டு வருகின்றன. இந்திய அளவில் கோவை குறுந்தொழில்கூடங்கள் முன்னிலையில் இருப்பதால், இங்குள்ள நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கிறது. பெரும்பாலும் ஜெர்மனி, சிங்கப்பூர், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் இருந்து கோவை குறுந்தொழில்கூடங்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கின்றன.
"கோவையில் இயங்கும் குறுந்தொழில்கூடங்களில் 15 சதவீதம் பேர்தான்
இணையதள முகவரி வைத்துள்ளனர். இவர்களுக்கு வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைக்கின்றன. எனவே, குறுந்தொழில்முனைவோர்கள் உடனடியாக இணையதள முகவரியை உருவாக்குவது அவசியம்.
வெளிநாட்டு நிறுவனங்கள் கொடுக்கும் ஜாப்ஆர்டர் கட்டணம், உள்நாட்டு
நிறுவனங்களைவிட 50 சதவீதம் கூடுதலாக உள்ளது. இருப்பினும் தொழிலாளர்
பற்றாக்குறை காரணமாக முழு அளவில் உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது.குறுந்தொழில்கூடங்களில் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுக்க வேண்டும். நவீன இயந்திரங்கள் வாங்குவதற்கான கடனை வழங்க வங்கிகளுக்கு இரு அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.
ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் சிறு, குறு தொழிலகங்களில் ஓராண்டு பயிற்சி பெறுவதை கட்டாயப்படுத்த சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்' என்கிறார் தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) மாவட்டத் தலைவர் ஜே.ஜேம்ஸ்.
"2007 மற்றும் 2008}ம் ஆண்டுகளில் பெரும்பாலான தொழிலாளர்கள் குறுந்தொழில்கூடங்களில் இருந்து வேறுதொழிலுக்கு மாறிவிட்டனர். கடந்த 6 மாதங்களாக ஆர்டர்கள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் 40 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. டர்னர், பிட்டர், மில்லர், மெஷின் ஆபரேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதுதான் இதற்குக் காரணம். எனவே, தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க பயிற்சி மையத்தை துவக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கிறார் கோயமுத்தூர், திருப்பூர் மாவட்ட ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்க (காட்மா) தலைவர் எஸ்.ரவிக்குமார்.
குறுந்தொழில்கூடங்களில் முதல்முறையாக வெளிநாட்டு ஆர்டர்கள் குவிந்து வரும் நிலையில் அவற்றைத் தக்கவைக்க போர்க்கால நடவடிக்கை எடுப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.