அருவிகளில் பாதுகாப்பு இல்லை: அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்
அம்பாசமுத்திரம், மே 3: கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. மணிமுத்தாறு அருவியில் பாதுக
அம்பாசமுத்திரம், மே 3: கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
மணிமுத்தாறு அருவியில் பாதுகாப்பு வளையம் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் குளிக்கும் நிலை உள்ளது. அகஸ்தியர் அருவி போதிய பராமரிப்பின்றி சுகாதாரச் சீர்கேடு அடைந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை நீர் ஆதாரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி நதியின் குறுக்கே திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வணைகளுடன் இயற்கை எழிலுடன் அமைந்துள்ள பாணத் தீர்த்த அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி ஆகியன மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களாகும்.
இந்த அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவது சிறப்பு அம்சம். கோடையை குதூகலமாக கழிக்க தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்த அருவிகளில் குவிகின்றனர். ஆனால், இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
புலிகள் காப்பக எல்லையில் அருவிகள் அமைந்துள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளால் அருவிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியவில்லை. இவற்றை தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்கள் என கூறி பெருமைப்படுகிறோம். சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தினால்தான் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என கருதும் அரசு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அருவிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் மெத்தன போக்கையே கடைபிடித்து வருகிறது.
அருவிகளில் பராமரிப்பு இல்லாத உடை மாற்றும் அறைகளால், பெண்கள் திறந்த வெளியில் உடை மாற்றும் அவலநிலை உள்ளது. கழிப்பிட வசதியும் இல்லை. பாபநாசம் அகஸ்தியர் அருவி பராமரிப்பு இல்லாமல் சுகாதாரச் சீர்கேடு அடைந்து காணப்படுகிறது. அருவியில் பிளாஸ்டிக் பொருட்கள், எண்ணெய் பாக்கெட்டுகள் நிறைந்து காணப்படுகிறது.
மணிமுத்தாறு அருவியில் பாதுகாப்பு வளையம் இல்லை. பாதுகாப்பு வளையம் வெள்ளத்தில் சேதமடைந்து நீண்ட நாள்களாகியும், அங்கு மீண்டும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்படவில்லை. அருவியை ஓட்டியவாறு 80 அடி தடாகம் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் அச்சத்துடன் குளிக்கின்றனர்.
÷ தடாகத்தின் ஆபத்தை அறியாத சுற்றுலாப் பயணிகளும், நீச்சல் தெரியாதவர்களும் சில நேரங்களில் உயிரிழக்க நேரிடுகிறது. தற்போது கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதால் போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாபநாசம் அணையில் இருந்து அரை மணி நேரம் படகு சவாரி செய்து அக்கரையில் உள்ள பாணத் தீர்த்த அருவிக்குச் சென்று குளித்து மகிழ்கின்றனர் சுற்றுலாப் பயணிகள். படகு சவாரி சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திருந்தாலும், பாணத் தீர்த்த அருவி, அகஸ்தியர் அருவியில் போதிய பாதுகாப்பு இல்லை என சுற்றுலாப் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆண்டு முழுவதும் சுமார் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழும் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த விக்கிரமசிங்கபுரம் நகராட்சியும், மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், புலிகள் காப்பகத்தினுள் அமைந்துள்ளதால் தடை இருப்பதாக தெரிவிக்கின்றன. சுற்றுலாத் தலங்களின் பெருமையை பறைசாற்றும் அரசு, அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியது.