தமிழ்நாடு

"ரியல் எஸ்டேட்' ஆபத்து: குளத்தை மீட்க போராடும் விவசாயிகள்

திருநெல்வேலி, மே 5: அரசு அதிகாரிகளின் அலட்சியம், மெத்தனப்போக்கு காரணமாக பாசனக் குளம் ஒன்றை "ரியல் எஸ்டேட்' திமிங்கலத்தின் வாயில் சிக்கி உள்ளது. அதை மீட்க விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்த வேண்டிய நிலை

ப. இசக்கி

திருநெல்வேலி, மே 5: அரசு அதிகாரிகளின் அலட்சியம், மெத்தனப்போக்கு காரணமாக பாசனக் குளம் ஒன்றை "ரியல் எஸ்டேட்' திமிங்கலத்தின் வாயில் சிக்கி உள்ளது. அதை மீட்க விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குளம் பறிபோனால் 3 கிராம மக்கள் பாதிக்கப்படுவதோடு, சுமார் 156 ஏக்கர் நிலங்களும் பாசன வசதியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே உள்ளது ராஜபதி புதுக்குளம். பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தின் கீழ் 63.72 ஏக்கர் நன்செய் நிலங்களும், 92.39 ஏக்கர் புன்செய் நிலங்களும் என மொத்தம் 156 ஏக்கர் நிலங்கள் உள்ளன.

நன்செய் நிலங்களில் வழக்கமாக ஒரு போகம் விளையும். இந்த ஆண்டு இரண்டாவது போக நடுவையும் நட்டுள்ளனர். புன்செய் நிலங்களில் பருத்தி, தென்னை உள்ளிட்ட பணப் பயிர்களை பயிரிட்டுள்ளனர். இந்த நிலங்கள் அனைத்தும் ராஜபதி, வெங்கடாசலபுரம், கரிசல்குளம் ஆகிய கிராம மக்களுக்குச் சொந்தமானவை.

இந்த குளம் பல ஆண்டுகளாக மராமத்து செய்யப்படாமல் கிடந்ததால் கரைகள் உடைந்து நீர் தேங்க வழியின்றி பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டு வந்தன. எனவே. 2004-ல் அதிமுக ஆட்சியின்போது ரூ.47.43 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு குளத்தைச் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையறிந்த சிலர், குளம் இருக்கும் நிலம் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறினர்.

கரிசல்குளத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார் ஒருவருக்குச் சொந்தமான அந்த குளம், நில உச்சவரம்பு சட்டத்தில் பறிபோகாமல் இருக்க அவர் அந்த குளம் இருக்கும் நிலத்தை சிலருக்கு விற்பனை செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. நிலத்தை வாங்கியவர்கள்தான் குளம் இருக்கும் நிலம் தங்களுக்குச் சொந்தமானது என உரிமை கொண்டாடினர். பின்னர், பொதுப் பணித் துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலத்திற்கு அரசு விதிமுறைப்படியான இழப்பீட்டைத் தருவதாகக் கூறி எழுத்து மூலம் ஒப்புதல் பெற்று குளத்தை சீரமைத்தனர். அதன்பின்பு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா குளத்தை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனால், பாழ்பட்டு கிடந்த விளைநிலங்கள் பயன்பெற்று வந்தன.

ஆண்டுகள் பல கடந்தும் நிலத்தை அளித்தவர்களுக்கு அரசின் இழப்பீட்டுத் தொகை சென்று சேரவில்லை. நிலத்தை அளித்த 14 பேருக்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 13 லட்சமானது பொதுப் பணித் துறையிடமிருந்து வருவாய்த் துறைக்கு அளிக்கப்பட்டு அந்த நிதி வைப்புத் தொகையாக வைக்கப்பட்டதே தவிர நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், கங்கைகொண்டானில் தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்டம் தொடங்கப்பட்டதால் அந்தப் பகுதியில் நிலத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு ஏக்கருக்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை விற்கப்பட்டு வருகிறது. குளம் அமைந்துள்ள சுமார் 65 ஏக்கர் நிலத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் என்பதால் நில உரிமையாளர்கள் குளத்தை மீண்டும் சொந்தம் கொண்டாடத் தொடங்கினர்.

2008-ம் ஆண்டு அந்த நிலத்தை ஆளுங்கட்சி ஆதரவு பெற்ற சிலர் பெற்று அதை வீட்டுமனைகளாக்கி விற்கத் தொடங்கினர். அதற்கு வசதியாக குளத்தின் கரையை மண் அள்ளும் இயந்திரம் மூலம் உடைத்தனர். இதையறிந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே வருவாய்த் துறை அதிகாரிகள் விரைந்து சென்று அதைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் வழக்கம் போல விவசாயிகள் குளத்தைப் பயன்படுத்தி வந்தனர்.

அதன் பின்பு நில உரிமையாளர்களில் சிலர் நீதிமன்றத்தின் மூலம் உரிய உத்தரவுகளைப் பெற்று நிலத்தை விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்போது அந்த குளத்திற்குள் மூன்று வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் சிலர் வீடுகளை கட்டவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, "ரியல் எஸ்டேட்' அதிபர்கள் தங்களின் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி குளத்தை அபகரித்து வீட்டுமனைகளாக மாற்றி விடுவார்களோ என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

""குளத்திற்கான நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு அரசின் இழப்பீட்டை உரிய காலத்தில் அளித்திருந்தால் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது. அப்போதிருந்த சில அதிகாரிகள் செய்த தவறை மறைக்கவும், அவர்களைக் காப்பாற்றவும் பின்னர் வந்த அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியால் சிக்கல் ஏற்பட்டு இப்போது பிரச்னை முற்றி குளம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது'' என விவசாயிகள் கூறுகின்றனர்.

இதனிடையே குளத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பெ. ரமணசரஸ்வதி, கோட்டாட்சியர் தமிழ்செல்வி ஆகியோர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்டுள்ளனர். அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் குளம் தப்புமா அல்லது பறிபோகுமா? எனத் தெரிய வரும்.

வயல்காடுகள் எல்லாம் கான்கிரீட் காடுகளாக மாறிவரும் இன்றைய சூழ்நிலையில் எஞ்சி இருக்கும் இதுபோன்ற குளங்களையும், விளை நிலங்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் வலுவான கோரிக்கை.

""இந்த குளம் சீரமைக்கப்பட்ட பின்பு மூன்று கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குளம் பறிபோனால் மூன்று கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள். பாசன நிலங்களும் தரிசு நிலமாகி விடும். எனவே, குளம் பறிபோவதை அரசு தடுக்க வேண்டும்'' என்றார் ராஜபதியைச் சேர்ந்த விவசாயி சி.எஸ். மணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT