முகப்பு
தமிழ்நாடு

சுகாதார சீர்கேடு: புனிதம் கெடும் புண்ணிய நதி

அம்பாசமுத்திரம், மே. 6: திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் கோயிலை சுற்றி நதிக்கரையில் கொட்டப்படும் கழிவுகளால் தாமிரபரணி ஆறு சுகாதார சீர்கேடாக காட்சியளிக்கிறது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் ஆற்றில் கு

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:48 PM
பகிர்:

அம்பாசமுத்திரம், மே. 6: திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் கோயிலை சுற்றி நதிக்கரையில் கொட்டப்படும் கழிவுகளால் தாமிரபரணி ஆறு சுகாதார சீர்கேடாக காட்சியளிக்கிறது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் ஆற்றில் குளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

நவ கயிலாயங்களில் சூர்ய தலமான உலகாம்பிகை அம்பாள் சமேத பாபநாசநாதர் சுவாமி திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பாபநாசத்தில் அமைந்துள்ளது.

சித்திரை விசுத் திருவிழா, ஆடி அமாவாசை விழா போன்ற விழாக் காலங்களில் பல்வேறு பகுதியில் இருந்து பாபநாசம் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

தை அமாவாசை, ஆடி அமாவாசை நாளில் இந்துக்கள் பாபநாசம் கோயிலுக்கு வருகை தந்து அங்கு தாமிரபரணி ஆற்றில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் இரைத்து தர்ப்பணம் செய்கின்றனர்.

விழாக் காலங்கள் அல்லாத நாள்களிலும் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

கோடை காலங்களில் பாபநாசம் அருவிக்கு சுற்றுலா வரும் பயணிகளும் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வதுண்டு. பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் வசிப்பவர்களில் பலர் தினமும் தாமிரபரணியில் நீராடி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்கள். அகஸ்தியர் அருவியின் தலைமையிடமாக இருப்பதால் பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் நீராட தவறுவதில்லை.

பாபநாசத்தில் கோயிலில் தாமிரபரணி ஆற்று படித்துறை, தீர்த்தவாரி மண்டபம் பகுதிகளில் பெருமளவில் பிளாஸ்டிக் பொருள்கள் தேங்கிக் கிடக்கின்றன. கோயிலில் இருந்து பாபநாசம் தலையணை வரை சுமார் ஒரு கி.மீ. தொலைவில் கோயிலை அடுத்துள்ள ஆற்றங்கரையில் பக்தர்கள், பொதுமக்கள் குளிப்பதற்கு வசதியாக படித்துறைகள் உள்ளன.

இப்பகுதியில் பெருமளவில் முள்செடிகள் வளர்ந்து புதராக காட்சியளிப்பதால் பக்தர்கள் ஆற்றில் குளிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், கோயில் பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பெருமளவில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகிறது. கரையில் தேங்கியுள்ள குப்பை, கழிவுகளால் சுகாதார சீர்கேடுகள் உருவாகி நதி மாசுப்பட்டு வருகிறது.

சீர்கேடுகளால் தாமிரபரணி நதிக்கரை மாசுப்பட்டு வருவதால் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆற்றில் நீராடுவதைத் தவிர்க்கும் நிலை உள்ளது. தலையணைக்குச் சென்று குளிக்கின்றனர். எனவே, கோயில் அமைந்துள்ள பகுதியில் புனிதம் கெடும் வகையில் தேங்கியுள்ள சுகாதார சீர்கேடுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

கோயில் பகுதியில் நதி மாசுபடாத வகையில் தன்னார்வ அமைப்புகள் மூலம் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களிடையே நதியைப் பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள், பக்தர்களின் கோரிக்கை.

முழு கட்டுரையைப் படிக்க →