விளைச்சல் குறைவு: மாம்பழக் கூழ் உற்பத்தி பாதிப்பு!
கிருஷ்ணகிரி, மே 11: நடப்பாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழ விளைச்சல் குறைந்துள்ளதால், மாம்பழக் கூழ் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தைவிட 20 சதவீதத்துக்கும் குறைவான அளவே விளைச்சல் உள்ளதாகக
கிருஷ்ணகிரி, மே 11: நடப்பாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழ விளைச்சல் குறைந்துள்ளதால், மாம்பழக் கூழ் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கத்தைவிட 20 சதவீதத்துக்கும் குறைவான அளவே விளைச்சல் உள்ளதாகக் கூறப்படுவதால், மாழ்பழக் கூழ் ஏற்றுமதியும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் அந்நியச் செலாவணி இழப்பு ஏற்படுவதோடு, ஆயிரக்கணக்கான பகுதி நேர தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே மாம்பழங்கள் கிருஷ்ணகிரியில்தான் அதிக அளவு விளைகின்றன..
Advertisement
பெங்களூரா, நீலம், ருமானி, பங்கனப்பள்ளி, செந்தூரா, பீட்டர், அல்போன்சா, மல்கோவா, சேலம் பெங்களூரா, ஜஹாங்கீர், இமாம்பசந்த் உள்ளிட்ட மா ரகங்கள் இங்கு சாகுபடி செய்யப்படுகின்றன. இம் மாவட்டத்தில் மாம்பழம் அதிக விளைவதால், அதைச் சார்ந்து சுமார் 53 மாம்பழக் கூழ் உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளன.
நாட்டில் மொத்த மாம்பழக் கூழ் உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் 75 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம், ரூ.250 கோடி அந்நியச் செலாவணி கிடைக்கிறது.
வழக்கமாக பனி பொழியும் மாதங்களான டிசம்பர், ஜனவரி மாதங்களில் மா மரங்கள் பூக்கள் பூக்கும் தன்மை கொண்டவை. ஆனால், பருவ மாற்றம் காரணமாக மா பூக்கள் சரியான நேரத்தில் பூக்கவில்லை.
மா பூக்கும் பருவத்தில் சீதோஷண நிலை 10 டிகிரியாக இருக்க வேண்டும். ஆனால், நடப்புப் பருவத்தில் 15 டிகிரிக்கு குறையாமலேயே சீதோஷண நிலை இருந்தது. மேலும், பருவ மழை குறித்த நேரத்தில் பெய்யாததால், பூக்கள் கருகின. பிஞ்சுகள் கடும் வெப்பத்தால் உதிர்ந்தன. இதனால், நடப்பாண்டில் வழக்கத்தைவிட, 20 சதவீதத்துக்கும் குறைவாகவே மாம்பழ விளைச்சல் இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் உள்ள மாம்பழக் கூழ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் 2,20,000 ஆயிரம் டன் மாம்பழம் கொள்முதல் செய்யப்பட்டது. இதன்மூலம் 1,10,000 ஆயிரம் டன் மாம்பழக் கூழ் உற்பத்தி செய்யப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு மாம்பழ வரத்து குறைந்துள்ளதால், மாம்பழக் கூழ் உற்பத்தியும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மே மாதத்தில் தொடங்கும் அரவைப் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால், மாம்பழ கூழ் அரவைப் பணி தொடங்க கால தாமதம் ஏற்படுவதால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பகுதி நேர தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட மாம்பழக் கூழ் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜி.வெங்கடசாமி கூறியது:
வழக்கமாக, மே மாதத்தில் தொடங்கப்படும் மாம்பழ அரவைப் பணி இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால், மாம்பழ கூழ் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
குஜராத், மைசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாம்பழங்கள் இங்கு வந்தால் மட்டுமே, மாம்பழக் கூழ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அரவை பணியைத் தொடங்கும் நிலை உள்ளது.
வழக்கமாக மாம்பழ அரவைப் பணி 90 நாள்கள் நடக்கும். இப்போது 50 நாள்கள் அரவைப் பணி நடக்குமா? என்பதே சந்தேகமாக உள்ளது என்றார்.