ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கும் சின்னசேலம் பஸ் நிலையம்
கள்ளக்குறிச்சி, மே 15: சின்னசேலம் பஸ் நிலையத்தின் உள்ளே ஆட்டோ ஸ்டேண்டு, இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதால் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகமோ
கள்ளக்குறிச்சி, மே 15: சின்னசேலம் பஸ் நிலையத்தின் உள்ளே ஆட்டோ ஸ்டேண்டு, இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதால் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகமோ, காவல் துறையினரோ கண்டு கொள்ளாததால் நெரிசலில் சிக்கி தவிக்கிறது சின்னசேலம் பஸ் நிலையம்.
சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்டது காமராஜர் பஸ் நிலையம் ஆகும். இந்த பஸ் நிலையம் மிகவும் சிறியது ஆகும். இந்த பஸ் நிலையத்தில் வணிக வளாகக் கடைகள் கீழ்தளத்திலும், மேல் தளத்திலும் 30 கடைகள் உள்ளன.
இந்த பஸ் நிலையத்தின் பின்புறம் மாரியம்மன் கோயில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. பொதுமக்கள் பஸ் நிலையம் வழியாகத்தான் கடைவீதிக்கும் செல்வார்கள்.
பஸ் நிலையத்தில் கடைகளின் முன் இரு சக்கர வாகனங்களும், தள்ளு வண்டி வியாபாரிகள் வண்டியை நிறுத்திக் கொள்வதால் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
இந்த பஸ் நிலையம் சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இட நெருக்கடி காரணத்தினால் சேலம்-சென்னை செல்லும் பஸ்கள் நிலையத்துக்குள்ளே வராமலேயே சாலையின் இருபுறங்களிலும் நின்றவாறே சென்று விடுகின்றன.
பஸ் நிலையத்துக்குள் மினி பஸ்கள், கிராமப்புறங்களான நைனார்பாளையம், அலம்பலம், ஈரியூர், அம்மகளத்தூர் உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் பஸ் நிலையம் வழியே உள்ளே செல்ல வேண்டும்.
ஆனால் உள்ளே செல்வதற்கு ஆட்டோக்கள் இடைஞ்சலாக இருப்பதால் சில நகர பஸ்கள் பஸ் நிலையத்துக்கு வராமலேயே சாலையின் வெளியே நின்றபடியே செல்கின்றன.
பஸ் நிலைய அருகிலேயே 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஸ்டேண்டு உள்ளது.
தற்போது புதிதாக ஸ்டேண்டு ஒன்றை பஸ் நிலைய வளாகத்தின் உள்பகுதியில் ஆட்டோக்காரர்கள் உருவாக்கியுள்ளனர். இதனால் அவ்வழியே மகளிர் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள், பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மிகவும் அல்லல்படுகின்றனர்.
கடைக்காரர்களும் கடைகளுக்கு முன் ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்துவதால் பொதுமக்கள் வெயில், மழை போன்ற நேரத்தில் நிற்கக் கூட இடமில்லாமல் தவியாய் தவித்து வருகின்றனர்.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்துக்கும், காவல் நிலையத்திலும் வாய்மொழி மூலமாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனினும் பேரூராட்சியினர் கண்டு கொள்ளாமலே அலட்சியமாக விட்டு விட்டனர். இது குறித்து பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ராஜவேலை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.