சாலை இல்லை; மின்சாரம் இல்லை: 20 ஆண்டுகளாக போராடும் மலைக்கிராம மக்கள்
போடி: அடிப்படை வசதிகளுக்காக 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர் மலைக்கிராம மக்கள். தேனி மாவட்டம் போடி, மலைகள் சூழ்ந்த விவசாயப் பகுதி. மலைக்கிராமங்கள் அதிகம் காணப்படும் இப்பகுதியில் காபி, மிளகு, ஏலம், இலவு
போடி: அடிப்படை வசதிகளுக்காக 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர் மலைக்கிராம மக்கள்.
தேனி மாவட்டம் போடி, மலைகள் சூழ்ந்த விவசாயப் பகுதி. மலைக்கிராமங்கள் அதிகம் காணப்படும் இப்பகுதியில் காபி, மிளகு, ஏலம், இலவு, மா, சப்போட்டா, எலுமிச்சை, நாரத்தை போன்ற பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன. கொட்டகுடி, வடக்குமலை, அகமலை உள்ளிட்ட வருவாய் மலைக் கிராமங்களின் கீழ் பல கிராமங்கள் உள்ளன.
வடக்குமலை வருவாய் கிராமத்தின் கீழ் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பெரியாற்றுக் கோம்பை, கூக்கித்தோடு, மல்லிப்பட்டி, ஊஞ்சல், சின்னமொடக்கு உள்ளிட்ட புலங்களில் 800-க்கும் அதிகமான விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மலைப்பகுதியிலேயே ஆண்டு முழுவதும் வசித்து விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களைச் சார்ந்து 40க்கும் மேற்பட்ட பளியர் எனப்படும் பழங்குடியின மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாய வேலைகளுக்குச் செல்வார்கள். தற்போது சிலர் சொந்த விவசாயம் செய்தும், பிற மக்களோடு இணைந்தும் வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர்.
எவ்வித அடிப்படை வசதியுமின்றி இவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். காட்டு மாடுகள், பன்றிகள், சிறுத்தைகள் சாதாரணமாக நடமாடும் இப்பகுதியில் வசிப்பதால் பல நேரங்களில் அவற்றின் தாக்குதல்களுக்கு ஆளாகும்போது மருத்துவ வசதி இல்லாமல் அவதிப்படும் நிலை உள்ளது. மேலும் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள போடி நகருக்கு வருவதற்கு சாலைகள் இல்லை. அவசர மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு நோயாளிகளை டோலி கட்டிதான் தூக்கி வரவேண்டும்.
இப்பகுதியில் மின்சார வசதியும் இல்லை. பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை. மேலும் குழந்தைகளைப் படிக்க வைக்க பள்ளி வசதி இல்லை. போடி நகருக்கு வரும் வழியில் மூன்று இடங்களில் ஆறுகள் குறுக்கிடுகின்றன. மழைக் காலங்களில் இவற்றை கடக்க முடியாது. காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடி வரும்.
மலைக்கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான உணவு பொருள்களை கொண்டு செல்லவும், விவசாய விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டு வரவும் கழுதைகளை பயன்படுத்தி வந்தனர். ஆனால் அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மனிதர்களே சுமை தூக்கிகளாக மாறிவிட்டனர்.
கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதி கோரி ஏராளமான மனுக்களை அளித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை. மலைக் கிராமத்தை அடைவதற்கான 20 கிலோ மீட்டரில் 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல, மத்திய அரசின் சார்பில் பாரத பிரதமரின் மலை சாலை திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அதுவும் பராமரிப்பின்றி புதர் சூழந்து காணப்படுகிறது.
பத்து கிலோ மீட்டர் தொலைவு கரடு முரடான பாறைகள் நிறைந்த சாலையாகும். இந்த சாலையை சீரமைத்து அடிப்படை வசதிகளை செய்து தர தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆரூண், போடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.லட்சுமணன் ஆகியோர் பரிந்துரை செய்தும் எவ்விதப் பயனும் இல்லை. மலைச்சாலை இல்லாததை காரணம் காட்டி மின் வாரியம், மின் இணைப்பு வசதி செய்து தர மறுத்துள்ளது வேதனையானது.
இதற்கு மாற்று ஏற்பாடாக தரப்பட்ட சூரிய சக்தி விளக்குகள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. இதனால் விவசாயத்தையே விட்டுவிட்டு திருப்பூர் போன்ற ஊர்களுக்கு வேலை தேடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.