முகப்பு
தமிழ்நாடு

அட்சய திரிதியை:​ தங்கம் விற்பனையில் சரிவு

சென்னை, மே 18: தங்கம் விலையில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நிலவுவதால், அட்சய திரிதியை நாள் சிறப்பு விற்பனை கடந்த ஆண்டை விட 30 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் பவுன் விலை செவ்வாய்க்கிழமை ஒர

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:56 PM
பகிர்:

சென்னை, மே 18: தங்கம் விலையில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நிலவுவதால், அட்சய திரிதியை நாள் சிறப்பு விற்பனை கடந்த ஆண்டை விட 30 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் பவுன் விலை செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ரூ. 200 குறைந்தது.

தமிழகத்தில் இந்த ஆண்டு சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்கள், மாவட்டத் தலைமையிடங்கள் மட்டுமன்றி சிறிய ஊர்களில் கூட தங்க நகைக் கடைகளில் அட்சய திரிதியை சிறப்பு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதே போல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மட்டுமன்றி மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பிலும் தங்க நாணயங்கள் விற்பனை செய்யும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

கடந்த சனிக்கிழமை பவுன் விலை ரூ. 13,568 (கிராம் ரூ.1,696) ஆக இருந்தது. ஆனால், திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 96 உயர்ந்தது.

அதாவது பவுன் விலை ரூ. 13,664 (கிராம் ரூ. 1,708) என ஏறுமுகத்தில் இருந்ததால் பொதுமக்கள் மட்டுமன்றி, வியாபாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். பாலசுப்பிரமணியன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை கூறியது:

அட்சய திரிதியை நாளில் தங்க நகைகள் வாங்கும் வழக்கம் தமிழகத்தில் நகர்ப்புறங்களில் மட்டுமன்றி,கிராமப் பகுதிகளிலும் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் சென்றது.

இதனால், நகைக்கடைகளில் நெரிசல் அதிகரித்த போதும் விற்பனை எதிர்பார்த்த அளவில் இல்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அட்சய திரிதியை சிறப்பு விற்பனை 25 முதல் 30 சதவீதம் குறைந்தது.

குறைந்த எடை நகைகளுக்கு வரவேற்பு:

எனினும், குறைந்த எடையுள்ள தங்க நகைகளை வாங்குவதில் மக்களிடையே மிகுந்த ஆர்வம் இருந்தது என்றார் பாலசுப்பிரமணியன்.

வங்கிகள், நிதி நிறுவனங்களிலும் தங்க நாணய விற்பனையில் 20 சதவீத சரிவு இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

அட்சய திரிதியை நாளை முன்னிட்டு ஏற்பட்ட நெரிசல் காரணமாகத் தான் தங்கம் விலை உயர்ந்தது. இதன்பின் ஓரிரு நாள்களில் பவுன் விலை குறையக் கூடும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே பரவலாக ஏற்பட்டது.

இது சரியானதுதானோ என்று நிரூபிக்கும் வகையில், பவுன் விலை செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ரூ. 200 குறைந்து ரூ.13,464க்கு விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.